பொரிவிளங்காய் லாடு (உருண்டை)
தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1 கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
நெய் - 1/8 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு
தேங்காய் (பற்களாகக் கீறியது) - 1 கிண்ணம்

செய்முறை

ஒரு வாணலியில் பருப்பைப் போட்டுப் பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும். சற்று ஆறியபின் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடியாக்கி, சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.

வெல்லத்தைச் சிறிது தண்ணீருடன் சேர்த்து அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் வைத்து கொதிக்க விடவும். தேங்காய்த் துண்டங்களைக் கொதி வந்ததும் சேர்க்கவும்.

ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீர் சிறிது எடுத்து பக்கத்தில் வைக்கவும். பாகை இந்த நீரில் சிறிது விட்டுக் கையால் எடுத்து உருட்ட, அது உருட்ட வராமல் தொய்யும் போது பாகை அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

சலித்த மாவில் ஏலக்காய்ப் பொடி போட்டுக் கலந்து ஒரு தாம்பாளத்தில் போடவும். இந்தப் பாகைச் சூட்டுடன் கொஞ்சம் கொஞ்சமாக மாவில் விட்டு ஒரு கரண்டியால் கொஞ்சம் மாவுடன் சேர்த்துக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

இதுபோல் எல்லா பாகையும் விட்டு உருண்டைகளாகப் பிடித்து எடுத்து வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com