சுமார் 40 வருடங்களுக்கும் மேலாகக் குழலிசையைத் தரணி எங்கும் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் சிக்கல் சகோதரிகள். "தாயைப் போல பிள்ளை" என்பதைப்போல தம் தாயான சிக்கல் நீலாவின் வழி தாமும் குழலிசையின் வழி மக்களை குதூகலிக்கச் செய்யும் மாலா சந்திரசேகர், கிளீவ்லாந்து தியாகராஜ உற்சவத்தில் கலந்துக்கொள்ளப் போகும் உற்சாகத்தில் இருந்தார். அவருடன் பேசியபோது:
கே: சிக்கல் குடும்பத்தில் பிறந்ததால் புல்லாங்குழலைச் சிக்கலில்லாமல் கற்றுக் கொண்டு விட்டீர்களா?
ப: உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், எனக்குச் சிறு வயதில் புல்லாங் குழலின் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லை. அம்மா (சிக்கல் நீலா) என்னை ஒரு பொழுதும் புல்லாங்குழல் கற்றுக்கொள்ள வற்புறுத்தியதில்லை. எனக்கு அந்த வாத்தியத்தின் மேல் தானாகவே ஆசையும், ஆர்வமும் ஏற்படத்தான் அவர்கள் வழி வகுத்தார்கள். குடும்பத்திலே அந்த நாதம் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டிருந்ததால் சுலபமாக நான் கற்றுக்கொண்டு விட்டேன்.
கே: உங்களது முன்னேற்றத்தில் உங்களது தாயாரின் பங்கைப்பற்றி?
ப: எனது வெற்றிக்கு முழுமுதற்காரணம் என் தாயார்தான். அம்மா குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு பாட்டுகளையும் விடாமல் சாதகம் செய்வதைப் பார்த்து ரொம்பப் பரவசப்பட்டிருக்கிறேன். எனது ஒவ்வொரு பாடல் பதிவுக்கும் (recording) என் தாயார் என்னுடன் வருவார். அம்மா நம்முடன் வருகிறார் என்ற எண்ணமே என்னுள் புதுத் தெம்பை ஊட்டும். பல முக்கிய நுணுக்கங்களை என் தாயார் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். முக்கியமாக மன தைரியம், எதையும் சாதிக்க முடியும் என்ற அசாத்திய நம்பிக்கை என் தாயாரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை.
கே: உங்களது பாணி பற்றி?
ப: எங்களுடையது தஞ்சாவூர் பாணி. விரலடிப் பிரயோகம் ஜாஸ்தி கிடையாது. கமகம் ஜாஸ்தி. புல்லாங்குழலோடு ஒருவர் வாய்ப்பாட்டு பாடிக் கொண்டு வந்தால் ஒரே மாதிரியாக வரும். சற்றே கஷ்டமான பாணி என்றுகூடச் சொல்லலாம். சாஹித்திய சுத்தம், பாவம் (expression), தாளம் எங்க பாணியில் பார்க்கலாம். எங்க ஸ்டைலைக் கேட்டுவிட்டு ஒரு அமெரிக்கன் ரொம்ப பிரமாதமாக அதே பாணியில் குழல் கற்றுக்கொண்டு சென்றார்.
கே: பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே மிகச் சிறப்பான ஒரு பின்னணியில் அமைந்ததைப்பற்றி?
ப: ஆண்டவனின் பரிபூர்ண அருள்தான் அது. ஒருமுறை சிறுமியாக ஒரு போட்டியில் பங்குகொண்டு எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களிடம் பரிசு பெற்றேன். அப் பொழுதே ரொம்பப் பரவசமடைந்தேன். அவரது பேரனையே கணவனாக அடையும் பேறு பெற்றபொழுது எனது மகிழ்ச்சியை வார்த்தையால் விவரிக்க முடியாது.
கே: எம்.எஸ். அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென்ன?
ப: எனக்கு திருமணம் ஆன புதிதில், எனது மாமியார் ராதா விஸ்வநாதன் அவர்களும், எம்.எஸ். அவர்களும் பாடும் பாடல்களை கேட்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். இசை என்பது எவ்வளவு தெய்வீகமானது என்பதும் அதில் ஸ்ருதி எவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தது என்பதையும் எம்.எஸ். அம்மா அடிக்கடி கூறுவார். பாட்டில் சிரத்தை, ஸ்ருதி சுத்தம், தம்பூராவில் ஸ்ருதி சேர்க்கும் விதம் எம்.எஸ். அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தது.
கே: புல்லாங்குழல் வாசிப்பது என்பது சற்றே கடினமானது என்பது உண்மை தானா?
ப: ஆமாம். உண்மைதான். காரணம், புல்லாங்குழலில் அடிக்கடி ஸ்ருதி கலைந்து விடும். தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தால், சூடாகி விடும். வெய்யில் காலத்தில், ஸ்ருதி ஏறும் அதேபோல் குளிர்காலத்தில் ஸ்ருதி குறைந்துவிடும். அந்தச் சமயத்தில் குழலைச் சூடான நீரில் வைப்போம். மூச்சுக்காற்றைப் கட்டுப்படுத்தப் பயிற்சி செய்ய வேண்டும்.
கே: உங்களால் மறக்க முடியாத கச்சேரி எது?
ப: எல்லாக் கச்சேரியுமே மறக்க முடியாத கச்சேரி தான். சில சமயம், கச்சேரியில் தம் மெய்மறந்து ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் பொழுது தன்னையறியாமல் என் கண்ணிலிருந்தும் கண்ணீர் வந்துடும். கஷ்டப்பட்டு அடக்கிக்கொள்வேன்.
கே: மறக்க முடியாத நிகழ்ச்சி?
ப: சமீபத்தில் நம் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. ரொம்பச் சரளமான தமிழில் பேசினார். என்னை "குறையொன்றுமில்லை" பாடலை வாசிக்கச் சொல்லிக் கேட்டு ரொம்பவே பரவசப் பட்டுப்போனார். அவருக்கு நம் கர்னாடக சங்கீதத்தின் மேலிருந்த ஈடுபாட்டை எண்ணி வியந்து போனேன்.
கே: அமெரிக்காவில் நடத்தப்போகும் கச்சேரிகளைப் பற்றி?
ப: நான் பலமுறை அமெரிக்காவில் வாசித்திருக்கிறேன். அமெரிக்கா வாழ் இந்தியர்கள் நமது பாரம்பரியத்திற்கும் சரி, பாரதத்திலிருந்து செல்லும் பாடகர்களுக்கும் சரி ரொம்ப மரியாதை செய்கிறார்கள். ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பல கச்சேரிகளைச் செய்ய உள்ளேன்.
வரப்போகும் கச்சேரிகள்
May 1 - Krishna Temple, NJ May 2 - Academy of India Music, NJ May 9 - Los Angeles, CA May 15 - Sri Shiva Vishnu Temple, Maryland June 5 - Dayton, OH
நளினி சம்பத்குமார் |