அகிலன்
சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ந்து வந்த வாசகர் கூட்டத்தை மையப்படுத்தி அக்காலப் பத்திரிக்கைகளில் இலட்சிய மற்ற பொழுதுபோக்கு சார்ந்த படைப்புகள் வெளிவரத் தொடங்கின. இலக்கியம் வளர்த்த சஞ்சிகைகளின் வரலாற்றில் ஓர் பண்பு மாற்றம் ஏற்பட்டது.

ஏற்கனவே இருந்து வந்த சஞ்சிகைகள் புதிய தன்மைகளுடன் இயங்கத் தொடங்கிய அதே வேளையில் புதிய சஞ்சிகைகளும் தோன்றத் தொடங்கின. ஜனரஞ்சக இலக்கிய வெளிப்பாடு முகிழ்த்து வருவதற்கான சமூகத்தேவை அதிகரித்தது. பெருகிவந்த வாசகர் கூட்டம் பொழுதுபோக்கு இலக்கியம் சார்ந்து வளர்ந்து வருவதை இது வேகப்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில் பொழுதுபோக்கு நோக்குடன் சிறுகதைகள் பிரசுரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன.

வாசகர்களின் மனநிறைவுக்கும் பொழுதுபோக்கிற்குமெனச் சிறுகதைகள் பிரசுரமாயின. இது பொது ஓட்டமாக இருப்பினும் இதில் புறநடையாக விந்தன், அகிலன் போன்ற படைப்பாளிகள் இருந்தார்கள்.

அகிலன் சிறுகதைகள், நாவல்கள், நாடகம், சிறுவர் இலக்கியம், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு நிலைகளிலும் அதிகமாகவே எழுதிக் குவித்தார். 1939இல் ஒன்பதாவது வகுப்பில் படிக்கும்பொழுது முதற் சிறுகதையை எழுதினார். அக்கதை கல்லூரி மலரில் வெளியானது.

''நான் எழுதிய முதற்கதையும் சரி, இனி நான் எழுதப் போகும் கடைசிக்கதையும் சரி உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளே. கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியைக் காணலாம். ஆனால் கருத்தெல்லாம் நான் காணும் உண்மைக்கே. ஒருபுறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம். மற்றொருபுறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள் - இதையே என் கதைக் கருத்து என்று சொல்லலாம்'' இவ்வாறு அகிலன் 'புனைபெயரும் முதல் கதையும்' (1967) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அகிலனின் படைப்புகளுடன் பரிச்சயம் உள்ள வாசகர்களுக்கு இதனை ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் நிறைய உண்டு.

அகிலன் கதைகள் பற்றி கா.சிவத்தம்பி குறிப்பிடுவது இந்த இடத்தில் நோக்கத்தக்கது:

''ஆண் - பெண் உறவில் காதலுக்குரிய இடத்தையே தனது கதைப் பொருளாகக் கொண்டு கதைகள் எழுதத் தொடங்கிய இவர், அக்காலத்தில் பிற எழுத்தாளர்களிடம் காணப்படாத உணர்வு ஆழத்துடனும் விவரணத் திறனுடனும் தன் கதைகளை எழுதினார். காதல் நிலையில் ஏற்படும் உணர்ச்சிச் சிக்கல்களையும் உணர்வுப் போராட்டங்களையும் சித்தரிப் பதில் அகிலன் விளங்கியமையால் அவரது கதைகள் இலக்கியத்தரம் கொண்டு விளங்குகின்றன''.

அகிலனின் படைப்புலகு பன்முகமானது. குடும்ப வாழ்க்கை, ஆண் - பெண் உறவு, இயல்புகள் முரண்கள், சமூக அநீதிகள், குழந்தைகள், வறுமை பற்றியெல்லாம் எழுதுகிறார். வெளிப்படையான பிரச்சாரப் பாங்கோடு இல்லாமல் கலைத் தன்மையோடு விமரிசனம் செய்கிறார்.

சிறுகதைக் கலையின் சில உத்திகளைத் திறம்படக் கையாள்வதிலும் சிக்கலில்லாமல் முடிப்பதிலும் அகிலன் வெற்றி பெற்றுள்ளார். வேறு வார்த்தையில் சொன்னால் சிறுகதையின் நுட்பங்களைப் படைப்பனுபவமாகத் தருவதில் அகிலனின் சிறுகதைகள் முதன்மை பெறுகின்றன. விரிந்து வரும் வாசக வட்டத்தின் வாசிப்புக் கலாச்சாரத்தின் உள்ளியக்க மாகவும் அகிலன் தொழிற்பட்டுள்ளார்.

சிறுகதையாசிரியர் என்பதைவிட நாவலாசிரியர் என்ற தகுதிப்பாட்டுப் பண்புமாற்றம் தான் அகிலனின் படைப்பு வெளியாகப் பீறிட்டுள்ளது. அகிலனின் நாவல்களில் சிறந்ததெனத் தான் கருதுவது 'சினேகிதி' என க.நா.சு. ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

''கதாசிரியர் என்கிற படைப்புலத்தில், காதல் என்கிற ஓர் உருவத்தைச் சற்று அழுத்தமாகவே தடித்த வர்ணங்களில் தீட்டியுள்ளார்'' என்றும் க.நா.சு. குறிப்பிட்டுள்ளார்.

''விடுதலைக்குப்பின் தமிழ் நாவல்கள்'' என்ற பொருட்பரப்பு சார்ந்து சிந்திக்கும் பொழுது அகிலனின் நாவல்களுக்கு முக்கிய இடமுண்டு. ''நாட்டின் சமகால வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு கதை எழுதும் போக்கை இந்த நாட்டில் தோற்றுவித்தவர்களில் நானும் ஒருவன். காரணம் என் இளமைப் பருவத்திலேயே அந்த வரலாற்று நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்டவன் நான்'' என அகிலன் குறிப்பிடுவதில் நியாயம் உண்டு.

கல்கிக்கு அடுத்த நிலையில் அகிலனின் வருகை தமிழ் வாசகர்களின் கவனிப்பையும் மதிப்பையும் ஒருங்கே பெற்றது. 'பெண்', 'வாழ்வு எங்கே?', 'பாவை விளக்கு', 'கயல்விழி' போன்றவை பெரும் வரவேற்பைப் பெற்றன. சுமார் 17 நாவல்கள் எழுதி உள்ளார்.

சிறுகதைகள் 150க்கு மேல் எழுதி யுள்ளார். 'சக்திவேல்', 'நிலவினிலே', 'ஆண்-பெண்', 'செங்கரும்பு' என 14 சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

ஆக நாவல் சிறுகதை, கட்டுரைகள், மொழி பெயர்ப்பு என அகிலனின் படைப்புவீச்சு வாசகர் பரப்பின் வேகத்துடன் இணையாக வெளிப்பட்டது. இருப்பினும் சமுதாயநோக்கு வாசக மனநிலை அகிலனின் படைப்பு மனநிலையை உறுதியாகவும் தீர்க்கமாகவும் வழிநடத்தி உள்ளது. வெகுஜனக் கவர்ச்சி, வெறும் பொழுதுபோக்கு என்ற நிலைகளுக்குள் இயங்காமல், கலையின் சமூகநோக்கு சார்ந்து இயங்குவதற்கான பிடிமானத்தில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டுள்ளார் என்பது அகிலனைத் தனிப்படுத்திக் காட்டுகிறது.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com