தேர்தல் மாதம்
இலங்கையில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. BBCயில் ஒருவர், 'இலங்கை மக்கள் அமைதி வேண்டும் என்று சொன்னர்கள்; ஆனால் அதற்காக எவ்வளவு விட்டுக் கொடுப்பது என்று யோசிக்கவில்லை. அதன் விளைவே இந்த முடிவு' என்று பேசினார். காரணம் எதுவாக இருப்பினும், முந்தைய அரசின் முயற்சிகள் இன்னும் அதிகம் முன்னேறாதது வருந்தத் தக்கது. புலிகள் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார்களோ என்று தோன்றுகிறது. ஏறத்தாழ அதே நேரம் புலிகளது உட்பூசல்கள் மிகவும் கடுமையாக வெடித்ததும் துயரந்தரும் ஒரு நிகழ்ச்சி. புதிய அரசு அமைதிக்கான முயற்சிகளைத் தொடரும் என்று அறிவித்திருக்கிறது. அனத்துத் தரப்பினரும், தொலைநோக்குடன் செயலாற்றி இலங்கையை மாற்றவேண்டும்.

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரசினை ஒரு கடுமையான சூழ்நிலையை அடைந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் மற்றும் இஸ்ரேல் பிரதமர் இருவரும் தமது தேர்தல் வெற்றிக்காக, பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் எதிர்காலத்துடன் விளையாடியிருக்கிறார்கள். இருவரது போக்கும் அமைதிக்கு உகந்தவையோ, தார்மீகரீதியில் சரியானவையோ அல்ல.

இராக்கிலும் பல கேள்விகள் எழுந்துள்ளன. பலரும் அப்போது சொன்னது போல், ஐ.நா. மூலம் தீர்த்திருக்க வேண்டிய ஒரு பிரச்சினை; அமெரிக்க அரசியல்வாதிகளின் ஆதாயத்துக்காக 'பேரழிவு ஆயுதங்களைத்' தேடவாரம்பித்து இப்போது மீண்டும் அதிபர் தேர்தல் தலைவலி என்ற வகையில் கையாளப்படுகிறது.

அமெரிக்காவின் தேர்தல் தேவைகள் உலகின் பல நாடுகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் காலம் மாறவேண்டும்.

இது ஒரு தேர்தல் மாதம் என்றே சொல்லலாம். இந்தியத் தேர்தல் அதில் இளைய தலைமுறையின் பங்கு ஆகியவை மிகவும் கவனிக்கப் படுகின்றன. என்ன நடக்குமென்று பார்க்கலாம்.

பலவேறு காரணங்களால் தென்றல் வலைத் தளம் மற்றும் தென்றல் 'சமையல் குறிப்புகள்' புத்தகத் தயாரிப்பு ஆகியவை மிகவும் காலதாமத்துக்கு உள்ளாகிவிட்டன. புத்தகத்துக்குப் பதிவு செய்தவர்களின் மன்னிப்பைக் கோரி, விரைவில் வெளிவருமென்று உறுதியளிக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்,
பி. அசோகன்
மே 2004

© TamilOnline.com