மிச்சிகனில் 'இந்தியா பஜார்'
மிச்சிகனில் உள்ள சவுத் ·பீல்டு பெவிலியனில் ஏப்ரல் 17-ஆம் தேதி எள் போட்டால் வடிகட்டிய எண்ணெயாக விழுந்திருக்கும்! அத்தனை கூட்டம். காரணம், மிச்சிககன் பகுதிச் செய்திகளை வழங்கும் முக்கிய இணைய தளமான miindia.com முன்னின்று நடத்திய 'இந்தியா பஜார்' திருவிழா. அதிலே இந்தியாவின் வண்ணங்களும், வடிவங்களும், வாசனை களும் வந்தோருக்கு ஒருசேர நுகரக் கிடைத்தன.

பல இடங்களிலிருந்தும் வந்திருந்த சுமார் 50 வணிகர்கள் இந்திய ஆடைகள், அணிகள், மனையலங்காரங்கள், உணவு, பூசைப் பொருள்கள், கைரேகை பார்த்தல், இசைக்கருவிகள், சுற்றுலாத் திட்டங்கள் ஆகியவை இங்கே காணவும் வாங்கவும் கிடைத்தன. இந்தியாவின் பெருவணிகக் குழுமங்கள் தமது சேவைகளையும், பொருட்களையும் காட்சிக்கு வைத்திருந்தன.

போதாததற்கு மிஷிகன் கிரிக்கெட் அசோசியேஷனின் கிரிக்கெட் ஆட்டம், 'இஷாரா' வழங்கிய இசை நிகழ்ச்சி, குழந்தைகள் நடனம் என்று ஒரே கலாட்டாதான். miinidia குழுமத்தைச் சேர்ந்த ஆனந்த குமார் "எங்கள் எதிர்பார்ப்பை யெல்லாம் விஞ்சிவிட்டது இங்கு வந்தோரின் ஆர்வம். இந்தியர்களின் பொருளாதார, கலாச்சார, உணவுக்கலைத் தாக்கத்தை டெட்ராய்ட் பகுதி இனம்காணத் தொடங்கி விட்டது" என்று சொன்னதில் ஆச்சரியமில்லை.

"இதைக் கொண்டாடியதற்கு இரண்டு காரணங்கள்" விளக்கினார், அனுபமா கோபாலகிருஷ்ணன் (miinida/RTC Network), "மாநிலம் மற்றும் இன வேறுபாடுகளைத் தாண்டி, எல்லா இந்தியர்களையும் ஒருங்கிணைப்பதும், miindia-வின் ஐந்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதும்".

RTC (Round The Clock Network) சென்ற அக்டோபரில் நிகழ்த்திய இந்திய விழாவுக்கு அடுத்து இது மிக வெற்றிகரமான நிகழ்ச்சியாகும். இத்தருணத்தில் சிகாகோவின் கான்சுலேட் ஜெனரல் இங்கே வழங்கிய 'விசா சேவைகள்' இன்னொரு முக்கிய அம்சமாகும். குழந்தைகளைக்குக் கலகலப்பூட்டிய 'கோமாளி'களுக்கும் பஞ்சமில்லை. சுமார் 10,000 பேர் இந்தியா பஜாருக்கு வந்தனர் என்பதே நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு சான்று.

© TamilOnline.com