கிருத்திகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
மே 15, 2004 அன்று மிச்சிகன் ஓக்லாந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வார்னர் அரங்கத்தில் கிருத்திகா ராஜ் குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது. இது நிருத்ய சுதா 'Hindu Temple Rhythms' நடனப்பள்ளியின் 50 வது அரங்கேற்றம். சுதா சந்திரசேகர் அவர்களின் நாட்டிய வகுப்புகளுக்கு உறுதுணையாக விளங்கி வரும் வித்யா சந்திரசேகர் அவர்களும் நம் தென்றல் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவரே. 72 மணிநேர நடன சாதனை செய்துள்ள அவரைப்பற்றித் தென்றலில் சிறப்புக் கட்டுரை வந்துள்ளது.

சம்பிரதாயமான முறையில் ஜதிஸ்வரம், ஷப்தம், வர்ணம் என்று தொடங்கியது நிகழ்ச்சி. பின்னர் அழகு கொஞ்சும் ஆண்டாள் நடனம், மோகனராகத்தில் 'ஏன் பள்ளி கொண்டீரய்யா', துர்க்கை நடனம், ஆடலரசனைக் கண்முன் கொண்டு நிறுத்திய 'ஆனந்த நடமாடுவார் தில்லை', கண்ணன் குறும்புகளைச் சித்தரிக்கும் ‘தீராத விளையாட்டுப்பிள்ளை' என்று நிகழ்ச்சி விறுவிறுப்பும் சுவையுமாய் முன்னேறியது. அடுத்து வந்த தில்லானா கிருத்திகாவிற்கென்றே பிரத்தியேகமாக கோபால் வெங்கட்ராமன் இயற்றி, பாடியது. இறுதியில் குறத்தி வேடத்தில் மனதைக் கொள்ளை கொண்டாள் கிருத்திகா.

கண்ணைக் கவரும் உடைகளும், ஆரவார மில்லாத ஒப்பனையும், சுருதி சுத்தமான நட்டுவாங்கமும் பார்வையாளர் களுக்கு விருந்தாக அமைந்தது. நான்கு மணி நேரம் அயர்வின்றி நேர்த்தி யாக ஆடிய கிருத்திகாவின் வயது பன்னிரண்டுதான். மூன்று வயது முதலே நடனத்தில் ஆர்வம் செலுத்தி, ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தியுள்ள கிருத்திகா, படிப்பிலும், கர்நாடக இசையிலும், திருக்குறள் போட்டிகளிலும், National Spelling Beeயிலும் முன்னணியில் இருக்கிறாள். பெற்றோர் ராஜ்குமார் மற்றும் கங்கா பெருமிதப்படுவதில் தவறு இல்லை.

கல்பனா ஹரிஹரன்

© TamilOnline.com