சிகாகோ தமிழ்ச் சங்கம் ஏப்ரல் 24, 2004 அன்று அரோரா பாலாஜி கோவிலில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துடனும், அமெரிக்க தேசிய கீதத்துடனும் தொடங்கிய இந் நிகழ்ச்சியில் பல நடனநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. நாட்டிய ஆசான்கள் ராதிகா ரகுவீர், சுஷ்மிதா அருண்குமார் மற்றும் ஷோபா நடராஜனின் மாணவ மாணவிகள பல வகையான நடனங்கள் ஆடி வந்திருந் தோரை மகிழ்வித்தார்கள். மயூரி தாசரி இயக்கிய நடன நிகழ்ச்சி கண்களுக்கு விருந்து.
அடுத்து வந்த நிவேதா சேகரின் ஓரங்க நாடகம் மிக அருமை. அண்டை மாநிலத்தி லிருந்து வந்திருந்து கவிபாடிய பால கணபதி, பாட்டுக்கு பாட்டு நடத்திய ரமா ரகுராமன், வினாடிவினாவிற்கு ஏற்பாடு செய்து நடத்திக் கொடுத்த கண்ணன் சுந்தரம் ஆகியவர்கள் அமர்க்களப்படுத்தி விட்டார்கள்.
'இந்திரன் அமெரிக்கா வந்திருந்தால் எப்படி இருக்கும்?' - கிருஷ் ராமச்சந்திரனும், ரவிசங்கரும் சேர்ந்து நடத்திய நாடகத்தில் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த காட்சிகள் ஏராளம். இந்த விழாவை ரகுராமனும், லட்சுமி சிவராமனும் சேர்ந்து சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள். வந்திருந்தோருக்கு வயிறார உணவளித்த 'மதராஸ் பேலஸ்' நிறுவனத்தினரும் அதைச் செவ்வனே ஏற்பாடு செய்த மீனாட்சியும் பாராட்டுக்குரியவர்கள். ரீமேக்ஸ் டி.ஆர். விஸ்வநாதன் இந்நிகழ்ச்சி நடத்தப் பொருள்வழங்கி ஆதரித்தார்.
மீண்டும் வருகிற ஜூன் 5, 2004 அன்று மெல்லிசை விருந்து படைக்க காத்திருக் கிறார்கள் தமிழ்ச்சங்கத்தினர். மேலும் விவரங்களுக்கு:
முத்துசெல்வராஜ் - 847.498.2152 வீரா வேணுகோபால்- 847.910.3684 ராம் ரகுராமன் - 815.436.3135 இணையதள முகவரி: www.chicagotamilsangam.org
ஜோலியட் ரகு |