புத்தாண்டு 'கலாட்டா'
தாரண தமிழ்ப்புத்தாண்டு நாளைக் கொண்டாடும் வகையிலும், 'உதவும் கரங்கள்' அமைப்புக்கு நிதி திரட்டும் வகையிலும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம், வளைகுடாப்பகுதி உதவும் கரங்களோடு இணைந்து நடத்திய 'கலாட்டா' முழு நாள் விழா ஏப்ரல் 10, 2004 அன்று பாலோ ஆல்டோவின் கப்பர்லி அரங்க வளாகத்தில் சிறப்பாக நடந்தது. வளைகுடாப்பகுதியில் முதல் முறையாக காலை முதல் மாலை வரை அரங்கத்தின் உள்ளேயும், வெளியேயும் கொண்டாடப் பட்ட இந்த நிகழ்ச்சி எல்லா வயதினரையும் கவர்ந்தது.

ராகவன் மணியனின் புல்லாங்குழல் இசையுடன் விழா ஆரம்பித்தது. கர்நாடக சங்கீத ராகங்களில் கீர்த்தனைகளையும், திரைப்பாடல்களையும் மாற்றி மாற்றி இவர் வாசித்தது ரசிகர்களைக் கவர்ந்தது. இவருடன் அலெக்ஸ் அருளாந்து தபேலாவும், நாகராஜ் ஹார்மோனியமும் வாசித்தனர்.

தொடர்ந்தது நாகேந்திர ஸ்ரீனிவாஸின் வீணை இசை. துணையாக ஸ்ரீனிவாஸ் ஸ்ரீபல்லி மற்றும் ரமேஷ் ஸ்ரீனிவாசன் ஆகியோர் மிருதங்கம் மற்றும் தபேலா வாசித்தனர். அடுத்து 'கலா நிகேதன்' இசை மற்றும் நாட்டியப்பள்ளி மாணவ மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், 'எஸ்5 ப்ரொடக்ஷன்ஸ்' குழுவினரின் கிராமிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து வந்தது சிறுவர் சிறுமியரின் பல்சுவை நிகழ்ச்சி.

'ஆண்கள் வீட்டில் இருந்து குடும்பத்தைக் கவனிப்பது நடைமுறைக்கு சரிப்பட்டு வரும்? வராது?' -- இது அன்று மகளிர் மட்டும் பேசிய பட்டி மன்றத்தின் தலைப்பு. அலெக்ஸ் அருளாந்து நடுவராக இருந்து நடத்திய இந்த பட்டிமன்றத்தில் தங்களது வாதங்களை நகைச்சுவையோடு இரு அணி மகளிரும் வெளிப்படுத்தினர். தங்களைப்பற்றி தத்தம் மனைவிமார்கள் பெருமையாகப் பேசிய போது பெருமிதத்துடன் உட்கார்ந்து இருந்த கணவர்களைக் காண முடிந்தது. அதே சமயத்தில் தங்களின் குறைகள் மேடையேற்றப்பட்ட போது காணப்பட்ட புன்முறுவல் வித்தியாசமானது.

அரங்கத்தின் வெளியே சிறுவர் சிறுமியருக் கான விளையாட்டுப்போட்டிகள் மற்றும் அவர்களுக்கான இந்தியக்கலாசார வினாடி வினா, பெரியவர்களுக்கான பாட்டுக்குப் பாட்டு மற்றும் ஊமை நடிப்பு, தெருக்கூத்து, கிளிகளின் காட்சி, கோலிவுட் வினாடி-வினா, கோலப்போட்டிகள் ஆகியவை நடைபெற்றன.

இறுதியாக மாலையில் 'பல்லவி' இசைக் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி 'தென்றலே என்னைத்தொடு' திரைப்படப் புகழ் நடிகை ஜெயஸ்ரீ அவர்களின் வரவேற்புடன் ஆரம்பித்தது. இரண்டரை மணி நேரம் எல்லோருக்கும் நல்ல இசை விருந்து. சிறப்பு அம்சமாக ஹரி நிகேஷ் டிரம்ஸில் தனி ஆவர்த்தனம் நடத்தினார். நிகழ்ச்சியை மிமிக்ரி மன்னன் சூப்பர் சுதாகரும், கந்தசாமி பழனிசாமியும் நகைச் சுவையுடன் தொகுத்து வழங்கினர்.

வழக்கமாகப் பிற ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் காணாமல் போகும் கதிரவன் 'கலாட்டா'வுக்கு வந்திருந்து உற்சாகத்தில் உஷ்ணமானதும் குறிப்பிடத்தக்கது!

© TamilOnline.com