மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தனது தமிழ்ப் புத்தாண்டு விழாவை ஏப்ரல் 25 அன்று சிறப்பாகக் கொண்டாடியது. சங்கத் தலைவர் டாக்டர். மஹாதேவனின் சுருக்கமான உரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. இறைவணக்கம் பாடலுக்கு சிறுமியர் நடனமாடினார்கள். நடனத்தின் நடுவே வந்த 'நிருத்ய கணபதி’யாக வந்த சுருதி சந்திரா தன் சுறுசுறுப்பான நடனத்தால் சபையினரை மகிழ்வித்தார். அடுத்து சிறுவர் சிறுமியர் ஸ்லோகம் பாடினர்.
பின்னர் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். மொத்தம் 110 பேர் பங்குபெற்றனர் என்பது சிறப்பு. அதைத் தொடர்ந்து ‘கங்கையின் மைந்தன்’ புராண நாடகம் அரங்கேறியது. கங்கா தேவியாக நடித்த ஆஷாவும், சந்தனு மகாராஜாவாக நடித்த நிரஞ்சனும் அருமையாக நடித்தார்கள். இந்தக் காட்சிகளுக்கு இயக்குனர் அமைத்திருந்த பூங்கா அமைப்பு பொருத்தமாக இருந்தது.
மீனவப் பெண்ணாக நடித்த ரஞ்சனியும், அவரது தகப்பனாராக வந்த ராஜாராமனும் சரளமாக மீனவர் தமிழில் பேசியது சிறப்பாக இருந்தது. தூமகேதுவாக நடித்த பாலநேத்ரத்தின் குரல் கம்பீரமாக இருந்தது. தன் தந்தையின் இரண்டாவது திருமணம் நடந்துவிடாமல் போய்விடுமோ என்று எண்ணித் துறவு பூண்டு விடுகிறான் இளம் தேவவிரதன். இந்தத் தியாகத்தைப் பார்த்த தேவர்கள் அவனுக்கு ‘பீஷ்மர்’ அதாவது ‘செயற்கரிய செய்தோன்’ என்று பட்டம் சூட்டுகிறார்கள். இளைய பீஷ்மராக நடித்த அருண் ஹரிஹரன் தனது ஆதங்கத்தைக் குரலில் நன்றாக வெளிப்படுத்தினார். இந்த காட்சிக்கு சதீஷ் செய்திருந்த ஒளியமைப்பு மிகச்சிறப்பு.
அம்மன் சன்னிதியில் அம்பை (லலிதா) கேட்கும் ஒவ்வொரு ராகத்தையும், சால்வ இளவரசன் (சாந்தப்ரகாஷ்) கோர்வையாகப் பாடிக் கைதட்டல் பெற்றார். அதே போல் ‘ராகத்திலே சிறந்த ராகம் எது?’ என்று இளவரசன் கேட்க அதற்கு அம்பையும், அவரது இரு சகோதரிகளும் (சீமா மற்றும் யாமினி) நடனமாக ஆடிக்காட்டுகிறார்கள். எந்த ராகம் எங்கே பொருத்தமானது என்று அபிநயங்களால் உணர்த்தி, இறுதியில் ஸ்ருதி சுத்தத்தோடும், பாவத்தோடும் பாடப்படும் எல்லா ராகங்களுமே சிறந்தன என்று முடித்தபோது அவை செய்த கரகோஷம் குறிப்பிடத்தக்கது. நடனத்தை அமைத்த தேவிகா ராகவனுக்கு ஒரு சபாஷ்!
அடுத்த காட்சியில் பிரம்மாண்டமான அரண்மனையின் காட்சியமைப்பு பிரமிக்கவைத்தது. தமது சகோதரனுக்கு பெண் தேடி சுயம்வரத்திற்கு பீஷ்மர் (சதீஷ்) வருகிறார். நல்ல பின்னணியிசை, ஒளியமைப்பு என்று பீஷ்மரின் அறிமுகக் காட்சி மிக நன்று. தனது பாத்திரத்தின் தன்மையை அறிந்து, கம்பீரமான தோற்றத்துடன், உறுதியான குரலில் பேசி சதீஷ் எல்லாரையும் கவர்ந்தார்.
சிற்றரசர்கள், பீஷ்மரோடு ஏன் வெள்ளிக் கிழமை சண்டை போட மாட்டோம் என்று பல காரணம் கூறி ஜகா வாங்குவது நாடகத்தின் நகைச்சுவை நேரம். பிறகு சால்வன் மட்டும் வீரத்துடன் சண்டை யிட்டுத் தோற்பதாகக் காட்சியை முடிக்கின்றார்கள். அடுத்த காட்சியில் தன் வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு துன்பங் களுக்கும் பீஷ்மரைக் காரணமாகக் கருதும் அம்பை அவரிடம் கோபமாகப் பேசிவிட்டுச் சபிக்கும் இடம் எடுப்பாக இருந்தது. பஞ்ச பாண்டவர்களின் தூதுவனாக கிருஷ்ணன் (வீரா) அறிமுகமாகிறார். நல்ல பாத்திரப் பொருத்தம். கர்ணனாக நடித்த ரங்கஸ்வாமியின் குரலே அந்தப் பாத்திரத்துக்கு மெருகூட்டியது. விதுரராகவும் பின் யுதிஷ்டிரராகவும் நடித்த ஹரிபிரஸாத் பாத்திரத்துக்கேற்ப அமைதியாக நடித்தார்.
அடுத்து வந்த அர்ச்சுனனுக்குச் (தேசிகன்) செய்யும் கீதோபதேசக் காட்சியில், 'கர்ணன்' திரைப்படத்தில் வரும் பாடலின் சில வரிகளை வசனமாகக் கொண்டு வந்தது சிறப்பாக இருந்தது. இந்தக் காட்சியை இன்னும் ஒரு நிமிடத்திற்கு நீட்டி இருந்திருக்கலாமே என்று தோன்றியது. மரணப் படுக்கையில் இருக்கும் பீஷ்மர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, அர்ச்சுனன் தனது அம்பால் நிலத்தைப் பிளக்க, கங்காதேவி வெளிவருவது போன்று அமைத்த காட்சி கற்பனையோடு அமைக்கப் பட்டு இருந்தது. பின் நாராயண நாமத்தை சொல்லியபடி பீஷ்மரின் உயிர் பிரிய நாடகம் முடிகிறது.
இந்த நாடகத்தைப் படைத்த டாக்டர் வெங்கடேசன் அவர்களின் எந்தத் திறமையைப் பாராட்டுவது என்றே தெரிய வில்லை. கதைக்கேற்ப அமைத்த காட்சி களையா, ஒப்பனைத் திறமையையா, உணர்ச்சி பூர்வமான வசனங்களையா, இதற்கு எல்லாம் மேலாக, 35 பேர்களை இயக்கி, நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வந்திருக்கிறாரே அதனைப் பாராட்டுவதா? எல்லாவற்றையும் வார்த்தை களால் பாராட்ட முடியாததனால்தானோ என்னவோ, அவர் கடைசியாக மேடைக்கு வந்தபோது அவையோர் அவருக்கு எழுந்துநின்று கரவொலி செய்தனர்.
சிறு வயதில் இலங்கேஸ்வரன், சூரபத்மன் போன்ற புராண நாடகங்களைப் பார்த்து திரும்பும்போது ஏற்பட்ட சந்தோஷம் ‘கங்கையின் மைந்தன்’ நாடகத்தைப் பார்த்து திரும்பிய போது மீண்டும் ஏற்பட்டது. வெங்கடேசன் இயக்கிய நாடகங்களில் இது ஒரு தலை சிறந்த நாடகம் என்பதில் சந்தேகமில்லை. |