ஜூன் 27, 2004 அன்று மாலை 4 மணிக்கு சான் ஹோசே CET நிகழ்கலை அரங்கில் அனிதா சுப்பிரமணியத்தின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெறும். ஏழு ஆண்டுகளாக நாட்டியம் பயிலும் அனிதா தற்போது சுருதி ஸ்வர லயாவின் (முன்னாள் பாரதி கலாலயா) வித்யா வெங்கடேசன் அவர்களிடம் பயில்கிறார். முன்பே தென்றலில் விவரங்கள் பதிப்பித்துள்ள தபஸ்யா, ப்ரதிதி ஆகிய நிகழ்ச்சிகளில் அனிதா பங்கேற்றுள்ளார். தவிரவும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நியூ யார்க், நியூ ஜெர்சி, கலி·போர்னியாப் பகுதிக் கோவில்களில் வழங்கியிருக்கிறார். அவர் ஏழாண்டுகளாக அனுராதா சுரேஷ் (இயக்குனர், சுருதி ஸ்வர லயா) அவர்களிடம் கர்நாடக இசை பயின்று வருவது குறிப்பிடத் தகுந்தது.
நியூ ஜெர்சியில் பிறந்த அனிதா தற்போது இர்விங்டன் மேனிலைப் பள்ளியில் உயர்நிலை மாணவி. அரசியல், உயிரியல் மற்றும் வணிகம் அவருக்கு விருப்பமான கல்வித் துறைகளாகும். வாஷிங்டனில் டி.சி.யில் நடைபெற்ற யூ.எஸ். காங்கிரஸ் கருத்தரங்கிலும், 'Worldwide Sustainable Business Institute' மாநாட்டில் மாணவர் தலைமை குறித்த அமர்விலும் பங்கேற்றார். |