அம்மாடி! இந்திய வாக்காளர்கள் அரசியல் பண்டிதர்கள் எல்லோரையுமே கோமாளிகளாக்கி விட்டார்கள்! தேர்தலுக்கு முன்கணிப்பு, தேர்தல் பின்கணிப்பு, பண்டிதர்களின் ஞானதிருஷ்டி எல்லாமே குப்பை என்று காட்டி விட்டன தேர்தல் முடிவுகள். மின்வாக்குப் பெட்டி, பல கட்டத் தேர்தல்கள், தேர்தல் ஆரூடங்கள், "வெள்ளைக்காரி", "இந்து வெறியன்" என்ற பூச்சாண்டிகள் எவையுமே 350 மில்லியன் இந்தியர்களைக் குழப்பியதாகத் தெரியவில்லை. ஒரு பட்டாம்பூச்சி-வாக்குச்சீட்டு அமெரிக்காவின் ·பிளாரிடாவை கலக்கு கலக்கியதே, நினைவிருக்கிறதா!
பல இன, மொழி, மதங்களைச் சார்ந்த மக்கள் ஒரே நாடாக இருக்க முடியாது என்று வாதிடுவோர் பலர். முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்பிக்னியூ ப்ரெஸின்ஸ்கி (Zbigniew Brzezinski - இந்தியப் பெயர்களா கஷ்டம்?) இதை வலியுறுத்துகிறார். சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா நாடுகள் உடையும் என்று முன்பே ஆரூடம் கூறியவர். பல மேனாட்டு அறிஞர்கள் இன்றைய இந்தியா இனிமேல் உடையாது என்று கூறினாலும், இவர் என்னவோ நம்பவில்லை.
"இன்றைய இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் படிப்பறிவோ, அரசியலில் ஈடுபாடோ இல்லாதவர்கள், அதனால்தான் கூடி வாழ்கிறார்கள். அவர்கள் அரசியலில் ஈடுபடும்போது, தத்தம் இனம், மொழி, மதம் போன்ற அடையாளங்களைச் சார்ந்த இயக்கங்களை நாடுவார்கள். அப்போதுதான் பிரிவினைகள் மேலோங்கும்." என்கிறார் ப்ரெஸின்ஸ்கி. "கொஞ்சமோ இவர் பிரிவினைகள், ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ!" என்ற பாரதி பாடல் நினைவிருக்கிறதா?
இந்து-முஸ்லிம்-சீக்கியர் பிரிவுகள், காஷ்மீரி, சீக்கியர், தமிழர் சிக்கல்கள் என்று பல காரணங்களால் இந்தியா பிளவுபடும் என்கிறார் ப்ரெஸின்ஸ்கி. ஐம்பது ஆண்டுகளாக இந்தியா ஒன்றாக இல்லையா என்றால், சோவியத் யூனியன்கூடத்தான் 70 ஆண்டுகள் இருந்தது என்கிறார்.
இந்தியாவிலும் பிரிவினை இயக்கங்கள் தோன்றாமல் இல்லை. ஆனாலும், ஒரு காலத்தில் திராவிடநாடு கேட்ட திமுக. இன்று இந்தியக் கூட்டரசு அமைச்சரவையில் பங்கேற்கிறது. சிறுபான்மையினரை உயர் பதவிக்குத் தேர்ந்தெடுப்பது என்பது ஜனநாயகம் வேரூன்றிய மேலைநாடுகளிலேயே அபூர்வம். ஆனால், இந்தியாவின் இன்றைய அதிபர் ஒரு தமிழ் முஸ்லிம். பிரதமர் ஒரு சீக்கியர். ஆளுங்கட்சித் தலைவி கத்தோலிக்கக் கிறிஸ்தவராகப் பிறந்தவர். "நாம் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது!" என்று இந்தியர்கள் உண்மையிலேயே கொண்டாட லாம். "செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்" என்ற வரகவியின் வாக்கு பொய்யாகுமா?
1965-ன் இந்தி எதிர்ப்பு அலையின் போது, 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முழங்கிப் பதவிக்கு வந்தது திமுக. இன்றோ மத்திய அமைச்சரவையில் உத்தரப்பிரதேசத்தை விடத் தமிழ்நாட்டு அமைச்சர்கள் அதிகம். அதே திமுகவினர் பின் "சிங்களத்தீவில் பிறந்த மலையாளத்தான்" தமிழக முதல்வராவதா என்று எம்ஜிஆரை எதிர்த்தனர். "தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்" என்று முழங்கியவர்கள் இன்று இத்தாலியில் பிறந்த இந்தியக் குடிமகள் சோனியா காந்தியைப் பிரதமராய் ஏற்கத் தயங்கவில்லை. இந்தப் பரந்த மனப்பான்மை வரவேற்கத்தக்கது.
வெளிநாட்டில் பிறந்தவர் இந்தியப் பிரதமராகலாமா என்று எதிர்த்தது எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக. ஈழத்தில் பிறந்த எம்ஜிஆர் பிரதமராவதை அதிமுக எதிர்த்திருக்குமா? எதிர்ப்பு வெளிநாட்டுப் பிறப்புக்கல்ல. ஒரு வெள்ளைக்காரி இந்தியர்களை ஆள்வதா என்ற வெறிதான். ஜனநாயகப் பாரம்பரியம் உள்ள பண்பட்ட மேலைநாடுகளிலும் இந்த இனவெறி இருக்கத்தான் செய்கிறது. ஆனால், படிப்பறிவு குறைந்த இந்திய மக்கள், தங்கள் ஐந்தாயிரம் ஆண்டுப் பண்பைப் பறைசாற்றியிருக்கிறார்கள். பண்டிதர்கள்தாம் பண்பாட்டைச் சற்று மறந்திருக்கவேண்டும்.
1984-ல் இந்திரா காந்தி கொலையுண்டபோது சீக்கிய எதிர்ப்புக் கலவரங்களில் பல சீக்கியர்கள் உயிரிழந்தனர். ஓர் ஆலமரம் விழுந்தால் அதன் அடியில் சில ஜீவன்கள் சாகத்தான் செய்யும் என்று சாக்கு சொல்லியது அன்றைய காங்கிரஸ். இன்று அதே காங்கிரஸ் ஒரு சீக்கியரை, அவர் சீக்கியர் என்பதால் அல்ல, அவர் தகுதியுள்ளவர் என்ற காரணத்தால் பிரதமர் ஆக்கியிருக்கிறது.
இந்திரா வேறு இந்தியா வேறு அல்ல என்று அவர் குடும்பத்தினரை முடிசூடா அரச குடும்பம் போல் போற்றிப் பணிந்து கிடந்தது காங்கிரஸ். இன்று அந்தக் குடும்பத்து மருமகள் சோனியா, வந்த பதவியைத் துறந்து தன் மதிப்பை மக்கள் மனத்தில் மலையென உயர்த்தி விட்டார். அது மட்டுமல்ல, அனுபவமே இல்லாத பிள்ளைக்கும், பேரப்பிள்ளைக்கும் அமைச்சர் பதவி கொடுக்க அடம் பிடிக்கும் தலைவர்களைப் போல் இல்லாமல், தன் மகன் ராகுல் காந்திக்கும் அமைச்சர் பதவி வேண்டாம் என்று அடக்கமாய் இருக்கிறார். வாழ்க அவர் அரசியல் பண்பாடு.
தமிழ் இணையத்தில் தொடக்க நாட்களில் இருந்து பங்கேற்று வருபவர்களுக்கு நன்கு அறிமுகமான வலைத்தளம் tamilnation.org. ஜூன் 2001-ல் அந்தப் பக்கங்கள் இணையத்திலிருந்து திடீர் என்று மறைந்த போது வருந்தியவர்களில் நானும் ஒருவன். தமிழ்நேஷன் தளமே மறையக்கூடும் என்றால், இருக்கும் பல தமிழ் வலைத்தளங்கள் எல்லாம் மழை நீர்க் குமிழிகள்தாம் என்று கவலைப்பட்டேன். தளத்தை உருவாக்கிய ஈழத் தமிழர் அறிஞர் சத்தியேந்திரா, பலர் பலமுறை வற்புறுத்தியும் தமிழ் நேஷன்.ஆர்க்கை உயிர்ப்பிக்க மறுத்து வந்தார். அண்மையில் வலைத்தளங்களின் நிலையாமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது தற்செயலாக தமிழ் நேஷன்.ஆர்க்கைக் கூகிளில் தட்டினேன். கூகிள் காட்டிய சுட்டியைச் சொடுக்கியபோது தோன்றியது மீண்டும் உயிர்த்தெழுந்த, புதுப்பிக்கப் பட்ட தமிழ்நேஷன் வலைத்தளம். தமிழ் தெரிந்த அனைவரும் ஒரு முறையாவது படிக்க வேண்டிய தளங்களில் ஒன்று தமிழ்நேஷன்.
உலகத்தின் உள்ளத்தை இணையத்தில் காண வழி வகுக்கும் பக்கங்கள் weblog என்ற வகையைச் சேர்ந்தவை. ஆங்கிலத்தில் குறும்பாக weblog-ஐக் குறுக்கி blog என்பார்கள். weblog என்பதை வலைக்குறிப்பு என்றால் blog என்பதைத் தமிழில் அழைப்பது எப்படி என்று ஒரு விவாதம் எழுந்தது. தமிழனுக்குக் கவியுள்ளம். அரும்பி, மலர்ந்து உதிரும் பத்திரிக்கைகளுக்குக் கவியுள்ளத்தோடு மலர், இதழ் என்றெல்லாம் பெயர் வைத்தவர்கள் தமிழர்கள். internet என்பதைத் தமிழில் பல இதயங்களை இணைக்கும் மையம் என்று கூறி இணையம் என்று பெயரிட்டார் மலேசிய இதழாசிரியர் கோ. கவியுள்ளத்துடன், நாமும் தமிழில் குறும்பாக வலைக்குறிப்பைச் சுருக்கி வலைப்பூ எனலாமே என்றேன். கலைச் சொல்லில் கவிதையா என்று சிலர் கொதித்தாலும், வலைப்பூ என்ற சொல்லும் பரவியிருக்கிறது. தமிழ் வலைப்பூக்களை tamilblogs.blogspot.com என்ற வலைப்பூவில் சரமாகத் தொடுத்து வைத்திருக்கிறார் மதி கந்தசாமி. தென்றல் ஆசிரியர் கவிஞர் மதுரபாரதியின் மதுரமொழி என்ற வலைப்பூ (mozhi.blogspot.com) இலக்கிய ஆர்வலர்களுக்கு மலைப்பூட்டும்.
மணி மு. மணிவண்ணன் |