ஜூன் 2004: வாசகர் கடிதம்
மார்ச் மாதத்திலிருந்து 'தென்றல்' படித்து வருகிறேன். நானும் எனது மனைவியும் ஒரு பக்கம் விடாமல் படிப்போம். ஏப்ரல், மே மாத இதழ்கள் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து, கிடைக்கப்பெற்றோம். சிறுகதை, எழுத்தாளர் பக்கம், நேர்காணல், அன்புள்ள சிநேகிதியே, திருத்தலம், events calendar ஆகிய பகுதிகள் எங்களை மிகவும் கவர்ந்து விட்டன. வாஞ்சிநாதனின் குறுக்கெழுத்துப்புதிர் மூளைக்கு வேலை தரும் ஒரு பயனுள்ள பகுதி.

காஞ்சி வாசுதேவன்

*****


''அடியேன் நின்னை மறப்பனோ'' பாடல் ஆசிரியருக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது கவிதையில் கற்பனையைக் காட்டிலும் அவருடைய வாழ்க்கை அனுபவத்தைத் தான் காண்கிறேன். அதில் நம்மில் பலர் அனுபவத்தைக் காணலாம். கற்பனையின் அடிப்படையில் கவிதை எழுதியிருந்தால் இவ்வளவு உருக்கமாகப் படைத்திருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த என் தந்தையை, கவிதையின் மூலம் மீண்டும் கொணர்ந்து என் முன் நிறுத்தி நான் அவருக்குச் செய்யாததை நினைவூட்டிக் கண்களில் நீரை வரவழைத்து விட்டார் கோம்ஸ் கணபதி.

விஜய்நாயுடு

*****


மே மாதத் தென்றல் உண்மையிலேயே என்மீது வீசிய இன்பத் தென்றலாய் மணத்தது. என் உள்ளம் கவர்ந்த பாடகர் கே.ஜே. யேசுதாஸ் என்ற மழையில் நனைந்தேன். அருமை. பாராட்டுக்கள்.

உஷா முத்துராமன், நியூ ஜெர்சி.

*****


'அக்கரை பச்சை' சிறுகதை, சிக்கல் மாலா சந்திரசேகர் நேர்காணல், மணி மு. மணிவண்ணனின் குறிப்புகள் ஆகியவை மிகவும் மெச்சத்தகுந்ததாக உள்ளன. ஏசுதாஸின் வர்ணனை ஒரு தனி கவர்ச்சி. டாக்டர் ரிஷியின் பங்கு இல்லை என்றால் சர்க்கரை போடாத காப்பி போல் இருக்கிறது. மிக்க அனுபவம் உள்ள சரஸ்வதி தியாகராஜனின் 'லாடுகள் பலவிதம்' பலே ஜோர். தென்றலின் மூலமாக அமெரிக்கா, கனடாவிலுள்ள இளைய தலைமுறைக்கு பெரும் சேவை செய்து வருகிறார்.

அட்லாண்டா ராஜன்

*****


ஏப்ரல் முதல் வாரத்தில் நீலகிரி ஸ்டோரில் தென்றல் இதழை எடுத்துக் கொண்டு வந்தேன். அதில் முதலில் மாரடைப்பே கொஞ்சல் நில்லு படித்தேன். பிறகு சினிமா சினிமா.. பிறகுதான் எடைக்கு எடை - சிரிக்க சிரிக்க - யூகலிப்டஸ் மரம் படித்தேன். பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் இதழில் சிரிப்புக் கதை படித்து மனம்விட்டுச் சிரித்தேன். என் சுவாமிநாதனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

எம் போன்ற தமிழ்ப்பிரியருக்கு தென்றல் இதழ் ஒரு வரப்பிரசாதம்.

லலிதா ரத்தினவேலு, ரத்தினவேலு சான்டா கிளாரா, கலிபோர்னியா

*****


ஏப்ரல் தென்றல் எப்பொழுதும் போல இதமாயிருந்தது. என். சுவாமிநாதனின் யூகலிப்டஸ் மரம் நல்ல நகைச்சுவை. பழைய எழுத்தாளர் ரகுநாதன் அருமையான எழுத்தாளர் என்று துல்லியமாய் தெரிகிறது. ஆனாலும் சுடலை சுடுகாடு என்று அவர் ஆழமாய் விவரித்து எழுதியிருப்பதைப் படிக்கும் போது வயிற்றில் பயம் பிசைகிறது. மேலும் நாற்றமும் அழுக்கும் கலந்த உடலுடன் மனைவியைக் கூடியதால் உருவாகிப் பத்துமாதம் வளர்ந்து பிறக்கின்ற பிள்ளையும் நாறியது என்று அவர் முடித்திருக்கிறது கொஞ்சம் விஞ்ஞான ரீதியாக இடிக்கிறது.

எஸ். மோகன்ராஜ், புரூக்லின், நியூயார்க்

*****


'சுமங்கலி எனப்படுபவள்' என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் நிறைந்த தத்துப்பித்து கதைகளை வெளியிடுவது தென்றலின் மதிப்புக்கு ஏற்றதல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. புண்பட்ட மனதுக்கு இதமளித்தவன் 'மீனாஸ்கி'. எழுத்தாளர், நேர்காணல், முன்னோடி... பாராட்டுப் பெறுகிற பக்கங்கள் ஏராளம். வாசகர்களின் உள்ளத்திலே தென்றலுக்கான இடமும் தாராளம்.

இந்திரா காசிநாதன்

*****


இசையும் இசைக்கலைஞர்களும், நாடு, மொழி, இனம், சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து அனைவராலும் போற்றப்படத் தகுதியானவர்கள் என்பதற்கு முன் உதாரணமாக விளங்கும் முன்னணிக் கலைஞர்களில் ஒருவரான கே.ஜே. யேசுதாஸ் அவர்களுடன் நேர்காணல் மிக நன்று.

சகல செளபாக்யங்களும் பெற்று உச்ச நிலையில் இருந்த போதும், தம் ஆரம்பகால நினைவுகளை மிகுந்த அடக்கத்துடன் அறிவித்த அவரது பாங்கு, பொன்மலர் நறுமணம் பெற்ற விதமாக அமைந்தது.

அடுத்து முனைவர் அலர்மேலு ரிஷி அவர் களின் பக்திச் சுவைமிக்க வழிபாடு கட்டுரைகள், இந்தியப் பயணத்தின் போது சேர்க்கப்பட வேண்டிய ஆலயதரிசனப் பட்டியலை அதிகரித்து வருகிறது.

பல்வேறு சூழ்நிலைகளால் மனம் தளர்ந்த வாசகர்களின் கோரிக்கைகளுக்கு, நடைமுறைப் படுத்தக்கூடிய ஆக்கபூர்வமான ஆலோசனைகளைக் கூறும் சித்ரா வைத்தீஸ்வரனின் 'அன்புள்ள சிநேகிதியே' மிக நன்று.

கல்கண்டின் எல்லாப் பகுதிகளும் இனிமை என்பதுபோல, தென்றலின் அனைத்து அம்சங் களும் அருமை! அருமை! அமெரிக்கத் தமிழர்களுக்கு மாதந்தோறும் இனிய தமிழ் விருந்தளித்து வரும் தென்றல் குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

சென்னிமலை பி. சண்முகம், நியூயார்க்.

© TamilOnline.com