யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்
செல்வி 'வேணி' சொர்ணமீனாட்சி யேல் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மாணவி. தமிழிசை வல்லுநரும் கணினியியல் பேராசிரியருமான பேரா. மாணிக்கத்தின் புதல்வி. சமஸ்கிருதம், இந்தி மொழிகளைப் பாடமாகக் கற்பிக்கும் யேல் பல்கலையில் தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்க அவர் முனைந்தபோது, தமிழ்மொழி பாடத்திட்டத்தில் இல்லை என்ற செய்தி அவரை வியக்க வைத்தது. யேல் பல்கலை தமிழ்மொழி கற்பிக்க வேண்டும் என்று மனு எழுதி அதற்குக் காரணங்கள் காட்டிப் பல ஆசிரியர்கள், மாணவர்கள் 940 பேரின் ஆதரவோடு பல்கலைக் கழக நிர்வாகத்திடம் சமர்ப்பித்தார் வேணி.

யேல் பல்கலைக்கழகத்துக்கும் தமிழகத்தும் ஏற்கனவே நெருங்கிய தொடர்புகள் உள்ளன. பல்கலைக் கழகத்தின் பெயரிலேயே சென்னைக்குத் தொடர்பு உள்ளது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஆளுநர் எலைஹ¥ யேல் 1713-ல் யேல் அளித்த நன்கொடையான சென்னைப் பருத்திக் கட்டுகளின் (Madras cotton) விற்பனை மூலம் யேலின் முதல் கட்டிடம் எழுந்தது. அந்தக் கொடைக்கு நன்றிக் கடனாக அவர் பெயரைக் கட்டிடத்துக்கும் பின்னர் பல்கலைக்கழகத்துக்கும் சூட்டினார்கள்.

யேல் பல்கலையின் பன்னாட்டு ஆய்வு மையத்தின் ஒரு பகுதியாக விளங்கும் தெற்காசிய அவையில் ஏற்கனவே இந்தியா, மற்றும் தமிழ்நாடு பற்றிய பலதுறை ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் ஹார்வர்டுக்கு அடுத்து சமஸ்கிருத மொழி ஆய்வை நிறுவிய பெருமையும் யேல் பல்கலைக்கு உண்டு. மாந்தவியல் பேராசிரியர் பெர்னார்ட் பேட் அவர்கள் தமிழ் குறித்த மொழியியல் மாந்தவியல் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார். தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதில் பல்லாண்டு அனுபவமுள்ள பேரா. பேட், மேடைத்தமிழ் குறித்த ஆய்வில் ஆர்வமுள்ளவர்.

தெற்காசிய அவைத்தலைவராக விளங்குபவர் தமிழகத்தைச் சார்ந்த பொருளாதாரப் பேராசிரியர் டி. என். சீனிவாசன் அவர்கள். இந்தியாவின் பொருளாதாரம் பற்றிப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்துள்ள பேரா. சீனிவாசன், யேல் பல்கலைக்கழகம் வேணி குழுவினரின் மனுவை ஏற்று, வரும் செப்டம்பர் முதல் தமிழ் மொழியைப் பாடமாகக் கற்பிக்கும் என்று அறிவித்துள்ளார். முதல் தமிழ் ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பாடத்திட்டத்தை அமைப்பவர் பழம்பெரும் பேராசிரியர் முனைவர் இ. அண்ணாமலை அவர்கள். சிகாகோ பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், 25 ஆண்டுக் காலம் மத்திய இந்திய மொழிக் கழகத்தில் பணி புரிந்து அதன் இயக்குநராக ஓய்வு பெற்றவர். இவரது "ஜிம் - ராஜா உரையாடல்கள்" என்ற நூல் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பவர்களுக்குப் பயன்படுகிறது. தமிழ் மற்றும் மொழியியலில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்த இவர் யேல் பல்கலையில் முதல் தமிழாசிரியராகப் பொறுப்பேற்பது யேலில் தமிழின் வருங்காலத்துக்கு ஒரு நல்ல அறிகுறி.

ஹார்வர்ட், யேல் போன்ற புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்க்கல்வி, தமிழ் ஆராய்ச்சி இவற்றால் தமிழுக்கும், தமிழருக்கும் நன்மை பயக்கும் என்பதைப் பேராசிரியர் சீனிவாசன் வலியுறுத்துகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பெருங்கட்சி வேட்பாளர்கள் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் ஜான் கெர்ரி இருவருமே யேல் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கலி·போர்னியா-பர்க்கெலி, யேல், பென்சில்வேனியா போன்ற பெரும் பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்புத் தமிழ் இருப்பது பள்ளிகளிலும் தமிழ்க்கல்வி வளர வாய்ப்பளிக்கிறது. கூப்பர்ட்டினோ, கலி·போர்னியா பள்ளி அதிகாரிகள் கலி·போர்னியா தமிழ்க் கழகப் பள்ளியின் தமிழ்ப் பாடத்திட்டத்தை அங்கீகரித் திருக்கிறார்கள் என்பது அண்மையில் வந்த செய்தி.

பிற நாடுகளில் இந்தி மொழிக் கல்விக்கு இந்திய அரசு உதவி அளிப்பதுபோல், தமிழக அரசும் தமிழ்க் கல்விக்கு உதவி அளிக்கும் என்று முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன் அறிவித்திருந்தார். அமெரிக்காவில் தமிழ்க் கல்வியும், தமிழ் ஆராய்ச்சியும் வளர, வசதியுள்ள அமெரிக்கத் தமிழர்கள் நிதியுதவி செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் தமிழக அரசிடமும் ஆராய்ச்சி, கல்வி, இவற்றிற்குக் கூச்சமில்லாமல் உதவி நாடலாம். கலி·போர்னியா பல்கலைக்கழகம், பர்க்கெலியில் தமிழ்ப்பீடம் அமைத்த வட அமெரிக்கத் தமிழர்கள், யேல், ஹார்வர்ட் பல்கலைக் கழகங்களிலும் தமிழ்ப்பீடங்கள் அமைக்க முன் வருவார்களா?

மேற்கொண்டு விவரங்களுக்குப் பேரா. சீனிவாசனை அணுகவேண்டிய மின்னஞ்சல் முகவரி t.srinivasan@yale.edu

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com