பென்சில்வேனியப் பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய வம்சாவளி மாணவர்கள் பெருமைவாய்ந்த வார்ட்டன் வணிகத்திட்டப் போட்டியில் (Wharton Business Plan Contest) முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர். இதில் மொத்தம் 180 திட்டங்கள் போட்டியிட்டன.
சந்தீப் நாயக் மற்றும் சமன்னய் பானர்ஜி ஆகியோர் பரூச் பென் என்ற இஸ்ரேலிய முன்னாள் விமானப்படைக் கேப்டனுடன் சேர்ந்து அளித்த InfraScan Inc. என்ற திட்டம் முதற்பரிசாக 20,000 டாலர் வென்றது..
அஜய் பக்ஷி மற்றும் அஷிமா சிங்கல் இவர்களின் CelfCure-க்கு இரண்டாவது பரிசான 10,000 டாலர் கிடைத்தது. நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்தே அணுக்களை அறுவடைசெய்து தொழில்நுட்பத்தின் உதவியால் அவர்களுக்கே சிகிச்சை செய்வதைக் குறித்த திட்டம் இது. "அற்புதம். நாங்கள் எதிர்பார்த்ததைவிடத் திட்டங்கள் மிக உயர்ந்த தரமானவையாய் இருந்தன" என்றார் வார்ட்டன் வெஸ்ட்டின் பிரதிநிதி ஜயேஷ் சஹாசி.
இன்·ப்ராஸ்கேனின் கண்டுபிடிப்பு, CT ஸ்கேன் முதலிய உபகரணங்கள் இல்லாத இடத்திலும் எளிதாய்க் கொண்டு சென்று மூளையில் இரத்தக் கசிவு ஆகியவற்றை பிம்பப் படுத்தலாம். இது போர்முனை நிலவரத்தில் அதிகம் பயன்படும் என்பதால் இந்தத் திட்டம் முன்னரே அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் மற்றும் கப்பற்படையின் பொருளுதவி பெற்றுள்ளது.
செல்·ப்கியூரின் திட்டமோ குணப்படுத்தமுடியாத திசுக்களை, அந்த நோயாளியின் திசுக்களைக் கொண்டே செப்பனிடும் நல்ல உடற்கூறுத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
தகவல்: மதுரபாரதி ஆதாரம்: IndiaTimes.com |