காதில் விழுந்தது...
அமெரிக்கா வெட்கப்பட வேண்டும். அமெரிக்காதான் ஜனநாயகம், சுதந்திரங் கள், மனித உரிமைகள் இவற்றின் கோட்டை என்று எப்படி இனிமேல் எங்களை நம்பவைக்க முடியும்? எப்படி நாங்கள் எங்கள் பக்கத்துச் சர்வாதிகாரிகளைக் குறை சொல்ல முடியும்?

முஸ்தஃபா சாத், கெய்ரோ காப்பிக் கடை வாடிக்கையாளர்.

*****


அவை அசிங்கமான படங்கள். இப்படித் தான் கைதிகளை அமெரிக்க நடத்துகிறதா? சுதந்திரங்களையும், ஜனநாயகத்தையும் மதிப்பதாகக் கூறுகிறார்கள் அமெரிக்கர்கள்; அதெல்லாம் அவர்கள் நாட்டில் மட்டும்தான் போலும்.

அஹமது டாஹர், பாக்தாக் முஸ்தன்சிரியா பல்கலைக்கழகம்

*****


சதாம் உசைனை நாம் ஒழித்ததால், இராக்கில் சித்திர வதைச் சிறைகள், கற்பழிப்பு அறை கள், பலபிணப் புதை குழிகள் ஏதும் இப்போது இல்லை.

அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்

*****


உரிமைகளுக்காகப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறோம் என்பவர்கள் அந்தப் போராட்டத்தின் அடிப்படை விழுமியங்களையும் கொள்கைகளையும் புறக்கணிக்கக்கூடாது.

போர்த்துகல் தலைமை அமைச்சர் ஓசே டூரோ பர்ரோசோ-இராக்கியச் சிறைகளில் அமெரிக்க நடத்தைபற்றி

*****


புலம் பெயர்ந்த இந்தியர்கள், அதிலும், குடிபுகுந்த நாடுகளில் தங்களையும், தம் குழந்தைகளையும் முழுக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப் பல ஆண்டுகள் போராடியவர்கள், இத்தாலியப் பெண் பிரதமர் ஆவதா என்ற காங்கிரஸ் கட்சித் தலைவியும், கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவின் விதவையுமான சோனியா காந்தியின் மீதான தாக்குதல் களால் மனம் நொந்திருக்கிறார்கள்.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, வாஷிங்டன் போஸ்ட்

*****


போர்க்களத்தில் எல்லா அநியாயங்களும் நியாயப் படுத்தப் படுகின்றன. என் நண்பன் தானியங்கித் துப்பாக்கியைத் தூக்கி வந்த பத்து வயதுப் பையனைச் சுட்டான். அது எழுந்து நிற்க முயற்சித்த போது அதை மீண்டும் சுட்டுக் கொன்றான். களத்தில் தான் பிழைத்தால் போதும் என்று தான் தோன் றும். அவர்களும் மனிதர்கள் தாம் என்ற நினை வை ஒதுக்கி விட்டு அவர்களை எதிரிகளாகப் பார்க்கிறோம். நாங்கள் அதுகளை ஹாஜி என்று கிண்டல் செய்கிறோம், தெரியுமா? இதையெல்லாம் செய்தால்தான், அதுகளைக் கொல்ல முடிகிறது, கீழ்த்தரமாய் நடத்த முடிகிறது.

இராக்கிலிருக்கும் அமெரிக்கப் படைவீரன், 'நியூயார்க் டைம்ஸ்'

*****


செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு அமெரிக்கா எப்படி பதிலளிக்க முடியும்? எனக்கு, நாம் இதுவரை செய்யாததைச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது - எதிரிகள் என்று நாம் அடையாளம் காட்டும் மக்களுக்குச் சொல்வதை நிறுத்தி, அவர்கள் சொல்வதைக் கேட்கத் தொடங்கியிருக்க வேண்டும். அமைதி நிலவ மற்றவர்களுக்கு முன்நிபந்தனைகள் விதிப்பதை நிறுத்தி விட்டு, ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகத் தன்னாட்சி செய்யும் உரிமையைப் போற்றி மதித்து, உண்மையிலேயே மற்ற நாடுகளின் தன்னாட்சி உரிமையை மதிக்க வேண்டும். தனக்கு ஒரு விதி மற்றவர்களுக்கு வேறொரு விதி என்று நடப்பதை நிறுத்த வேண்டும்.

மைக்கேல் பர்க், இராக்கில் பயங்கரவாதிகளிடம் தலை அறுபட்ட அமெரிக்கர் நிக் பர்க்கின் தந்தை.

*****


"மண்ணைத் தின்னாலும் தின்னுங்க, உங்க பசங்களை வெளிநாட்டுக்குப் போக விடாதீங்க!"

முகம்மது மெஹ்தி, மாசிடோனியா போலீசால் பயங்கரவாதி என்று பொய்க்குற்றம் சாற்றிக் கொல்லப்பட்ட 18 வயது ஆசி·ப் ஜாவேதின் தந்தை.

*****


இன்று அதிபர் புஷ்ஷைச் செய்வதுபோல் கண்ணைச் சிமிட்டாமல் ஒவ்வொரு நிமிடமும் கண் காணித்து, கருத்துக் கணிப்பு நடத்தி, இரண்டாவது உலகப் போரின் போது ரூஸ்வெல்ட், மார்ஷல், சர்ச்சில், ஐசன் ஹோவர் ஆகியோரை ஆட்டிப்படைத்திருந்தால், அவர்களில் ஒருவர்கூட இரண்டாவது உலகப்போர் முடியும் வரை தாக்குப் பிடித்திருக்க மாட்டார்கள்.

மார்க் காட்பர்ன், ஆசிரியருக்குக் கடிதங்கள், 'எல்லே டைம்ஸ்'.

*****


பயங்கர வாத எதிர்ப்புக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், குடியுரிமை ஆகிய இரண்டையும் ஏற்றத்தாழ்வில்லாமல் நுட்பமாகக் கையாள வேண்டியிருக்கிறது. இந்தியாவின் ஜனநாயக அமைப்பு, அதன் கலகலப்பான பல கட்சி அரசியல், தன்னாளு மையுள்ள நீதித்துறை, சுதந்திர மான செய்தி ஊடகங்கள், தேசிய மனித உரிமை ஆணையம், இவை அனைத்தும் உரிமை மீறல்கள் ஏதும் எழும்போது கட்டுப்படுத்தும். ஜனநாயக முறையில் முன்னேற்றம் அடைய முடியும் என்பதற்கு இந்தியா சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

மேதகு எஸ். விஸ்வநாதன், இந்திய துணைத்தூதர், சான் ·பிரான் சிஸ்கோ. அருந்ததி ராயின் 'லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்' கட்டுரை குறித்து.

*****


இராக்கில் ஒரு சில அமெரிக்கப் போர்வீரர்களின் இரக்கமற்ற நடத்தை அவர்கள் படைக்கு அவதூறையும், நம் நாட்டுக்கு அவமானத்தையும் கொண்டு வந்திருக்கிறது. அவர்கள் குணக்கேட்டின் பின் விளைவுகள் அந்தச் சிறைச்சாலையின் எல்லைகளையும் வெகுவாகக் கடந்திருக்கிறது.

அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்

*****


நாமே இவ்வளவு கொடுமையாக நடந்து கொண்டால், பின்னால் நமது படை வீரர்களுக்கு யாரேனும் தீங்கிழைத்தால் எப்படி வாய் திறப்போம்? அமெரிக்க வரலாற்றில், உலக அரங்கில் மனிதத் தன்மையற்ற நடவடிக்கைகளைப் பற்றிய பேச்சுவார்த்தைகளில், இதுநாள்வரை, நாம் தலை நிமிர்ந்திருந்தோம். இனிமேல் நம் உன்னதமான முயற்சிகள்கூட வெறும் பாசாங்காகத் தோன்றும். நமது தலைவர்கள், அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே பிழைசெய்து விட்டார்கள்.

ராய் வில்சன், ஆசிரியருக்குக் கடிதங்கள், 'எல்லே டைம்ஸ்'.

© TamilOnline.com