அம்மாவிடம்
முழு எண்களைப் பூராவும்
ஒற்றியெடுத்து தொலைபேசி
இணைப்புக் கிடைப்பதற்குள்
யோசித்து வைத்த விஷயங்கள்
மறந்து போக....

மீண்டும்
இடைவிடாது எண்களை
நசுக்கி இணைப்புக் கிடைத்ததும்
உயிர்பெற்றேன் நான்!

அம்மா, அண்ணா, அக்கா என
அனைவரையும் விசாரித்து
சுற்றங்களுக்கு வருகையில்
ஒரு நிமிட எச்சரிக்கைக்
குரல் கேட்க...

கார்கள் மட்டுமே உள்ள சாலை
யாரென்று தெரியாப் பக்கத்து வீட்டு மனிதர்கள்
காட்சிப் பொருளாய் மட்டுமே வாழைமரம்
பஸ் நடத்துனராய் இயந்திரம்
கோயில்களில் அவ்வப்போது
கேட்கும் தமிழ் என
நான் சொல்ல வந்த விஷயங்களை
சொல்ல முடிவதேயில்லை
ஒவ்வொருமுறையும்
அம்மாவிடம்!!

*****


வேண்டும்!

தாழ்வாரத்து மைனா
சிறியதாய் துளிர்விட்ட வீட்டுமரம்
கடிகாரத்தின் குயிலோசை
மழைக்கான இருள் ரசித்த மதியம்
எனக்காகக் குடைபிடித்த மழைநாள்
கைகோர்த்த மலையோரச் சாலைநடை
மார்கழி மாத மஞ்சள் பூ
ஒரு போர்வை உறக்கம்
எனக்கான பதற்றம்
ஒலிநாடாக் கடையில்
எனக்காய் நீ எடுத்த தென்றல் புத்தகம்
வெள்ளைப் பனி
உன் வெள்ளிப் புன்னகை என
அத்தனையும் வேண்டுமே
மீண்டும் மீண்டும் உன்னுடன்!

*****


ஒற்றைகள்

ஒற்றை நிலவு
மலைக்கு மேலே நிற்கும்
ஒற்றைக் கல்
பேருந்துப் பயணத்தில் பார்த்த
ஒற்றைப் பனைமரம்
ஒற்றைக் காலில் நடனமிடும்
நடராஜர் சிலை
இப்படி
எல்லா ஒற்றைகளையும்
ரசிக்க முடிந்த என்னால்
நீ இல்லா ஒற்றை நாளை
நினைத்துக்கூடப்
பார்க்க முடியவில்லையே!

ஓவியா சுந்தர்

© TamilOnline.com