அன்புள்ள சிநேகிதியே,
இந்தக் கடிதம் எழுதுவது என்னுடைய மடக்கத்தையும் (frustration) மனிதர்களின் உண்மையான ஸ்வரூபத்தையும் எடுத்து சொல்லத்தான். உங்களிடமிருந்து எந்த ஆலோசனையையோ இல்லை அனுதாபத்தையோ எதிர்பார்க்கவில்லை. நான் 'அன்புள்ள சிநேகியே'வைத் தவறாமல் படிக்கிறேன். வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டால், நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று தோன்றுகிறது.
எனக்கு தந்தையில்லை. அம்மா ஒரு பள்ளி ஆசிரியை. மிகவும் கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைத்தார். ஒரு கல்லூரியில் வேலை கிடைத்தது. திருமண எண்ணமோ, முயற்சியோ அப்போது இருக்கக் கூட இல்லை. இருந்தும் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு நான் இருந்த ஊருக்கு வந்து, என்னுடைய கல்லூரிக்கே திடீரென்று வந்தார், அந்த வருங்காலக் கணவர். உயர்ந்தவர்! உயர்ந்த படிப்பு, தொழில், உயரம், பண்பா......டு? அமெரிக்க ஆங்கிலத்திலும், கொச்சைத் தமிழிலும் என்னிடம் சரளமாகப் பேசி, என் அம்மாவிடமும் முறையாகப் பெண் கேட்டபோது, I was on cloud nine. ஜாதி வித்தியாசம், தெரியாத குடும்பம் - அம்மா தயங்கினார். ஆனாலும், என் ஆசைக்காகச் சம்மதித்தார். 10 நாளில் எல்லோரும் பெருமைப்படும்படி நான் திருமதி...... ஆனேன். பிறகு, எல்லாவற்றையும் உதறிவிட்டு (கல்லூரி வேலை, Ph.D. ஆய்வு, தோழிகள், தாய்...) இரண்டே வாரத்தில், அவரை நம்பி அமெரிக்கா பயணம்.
மனம் இருந்த சந்தோஷத்தில் மூளை மழுங்கிப் போயிருந்தது போலிருக்கிறது. முதலில் எல்லாம் இன்ப மயமாக இருந்தது. அவ்வப்போது, காரணமில்லாமல் அவருக்கு ஒரு நிமிடம் பயங்கரக் கோபம் வரும். பயந்துவிடுவேன். பிறகு சுதாரித்து கொள்வேன். பழகப்பழக அவருடைய இயற்கை குணங்கள் தெரிய ஆரம்பித்தன. அவர் அகம்பாவி, சுயநலமி, கோபக்காரர். என்னைத் தன்னுடைய possession ஆக நினைத்தார். மேலே Ph.D. தொடர அனுமதிக்கவில்லை. 2 குழந்தைகளைப் பெற்றுக் கொண்டேன். "உன்னை ராணி மாதிரி வைத்துக் கொண்டிருக்கிறார். உன் நிலையில் நாங்கள் இருக்க ஆசைப்படுகிறோம். எதற்கு 'மேலே படிக்கவில்லை, வேலை பார்க்கவில்லை' என்று குறைப்படுகிறாய்?" என்று தோழிகள் சொல்வார்கள். நானும், குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி, என் கனவுகளைச் சற்று தள்ளிப் போட்டேன். எங்களுக்குள் கருத்து வேற்றுமையும், கசப்பும் அதிகமாகப் போனது. குழந்தைகள் சிறிது வளர்ந்தவுடன் ஒரு வேலையைத் தேடிக் கொண்டேன்.
பார்ப்பவர்களுக்கு இவர் ஒரு gentleman போலத் தெரிவார். மென்மையாகப் பேசி, பண்பாளராகக் காட்டிக் கொள்வார். வீட்டில் நான் பட்ட வேதனை பலருக்குத் தெரியாது. தெரிந்த சிலருக்கும் புரியாது. தன் முடிவுகளை எப்போதும் மாற்றிக் கொண்டே இருப்பார். தொடர்ந்து ஒரு வேலையில் நிலையாக இருந்ததில்லை. அவர் பேச்சிலும், தொழில் நுட்பத்திலும் மயங்கி (ஒரு வேலை போனாலும்) ஒரு வாரத்தில் வேறு வேலை கிடைத்துவிடும்.
2 வருடத்துக்கு முன்னால் ஒரு நல்ல மனநிலையில் இருந்தார். ''அம்மாவை இங்கே கூப்பிடலாமா?'' என்று கேட்டேன். ''இதற்குப் போய் என்னுடைய அனுமதி எதற்கு? உன் அம்மா, என்னுடைய அம்மா இல்லையா. நீ கிரீன் கார்டிலேயே விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். பொறுப்பில்லாமல் இருக்கிறாய் என்று வசனம் பேசினார். உடனே நான் சந்தோஷப்பட்டு, என்னுடைய அம்மாவைத் தொலைபேசியில் கூப்பிட்டு, அவரைத் திருப்தி செய்து இங்கே வரும் தேதி, டிக்கெட் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு முடிந்த நேரத்தில் அவரிடம் சொன்னேன். "அடக் கடவுளே! இந்த நேரத்தில் 'Job tension' ல் இருக்கிறேன். எனக்கு என் மனைவி, குழந்தைகளுடன் தனிமை இருக்காதே. உன் அம்மாவை வேண்டுமானால் நீ போய்ப் பார்த்துக்கொள். இந்தச் சமயத்தில் யாரையும் வரவழைக்காதே'' என்று கத்தினார். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். வார்த்தை முற்ற, முற்ற என்னையும் என் அம்மாவையும் தகாத வார்த்தைகளை சொல்லித் திட்டினார். That was the last straw.
உடனே விவாகரத்துக்கு முடிவெடுத்தேன். ஒரு வருடமாக, குழந்தைகளுடன் ஒரு சின்ன Apartmentல் வாழ்க்கையை மறுபடியும் ஆரம்பித்தேன். பிறகுதான் மனிதர்களின் உண்மையான பார்வை எனக்கு புலப்பட்டது. என் மீது அனுதாபப்பட்டவர்கள் எல்லாம் ஒரு மேல்பூச்சுக்குத்தான். ஒவ்வொருவரும் நான் "ஏன் அந்த முடிவு எடுத்திருக்கக் கூடாது'' என்று இலவச அறிவுரையும், ஆலோசனையும் அள்ளித் தெளித்தார்கள். சிலர் போன் செய்வது, நேரில் பார்ப்பது, விருந்துக்குக் கூப்பிடுவதைக் குறைத்துக் கொண்டார்கள். காரணம், அவர்கள் கணவன்மார்கள் பயப்படுகிறார்களாம். தங்கள் மனைவிகளும் இது போன்று ஏதேனும் செய்து, குடும்பக் கூட்டைக் கலைத்து விடுவார்களோ என்று.
ஒவ்வொருவருடைய சுயரூபமும் தெரியத் தெரிய நான் முதுகில் அடிவாங்கி, வாங்கிப் பழகிக் கொண்டிருக்கிறேன். இப்போது மனதில் ஒரு வெறுமை. எங்கும் போவதில்லை, வருவ தில்லை. குழந்தைகளே உலகம். அவர்களும் எப்போது ஏமாற்றப் போகிறார்களோ தெரியாது. அதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.
அன்புள்ள தென்றல் வாசகர்களுக்கு:
இந்தக் கடிதம் எழுதிய சிநேகிதி எந்த ஆலோசனையும் எதிர்பார்க்கவில்லை என்று எழுதிய காரணத்தால், அவருக்கு என் கருத்துக்களை தெரிவிக்க இயலாது இருக்கிறேன். ஆனால், என்னுடைய ஆதரவு அவருக்கு உண்டு. அவரைப் போன்று இது போல் முடிவெடுத்து, பிறகு சமூகத்தின் பார்வையில் சிறுத்து, மனம் மரத்து, வெறுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலரை எனக்குத் தெரியும். ஒரு பெண் விதவையாகும்போது இருக்கும் அனுதாப உணர்ச்சி, இந்த விவகாரத்தில் ஏன் இருக்கக் கூடாது? இதுவும் ஒரு மரணம்தானே. கணவனுடன், தீயில் தன்னை அழித்துக் கொண்டால், உடனே கோயில் கட்டுகிறார்கள். "நானும் தானே என்னை அழித்துக் கொண்டிருக்கிறேன் எல்லோரையும் போல. சந்தோஷமாக கணவருடன், குழந்தைகளுடன் இருக்கப் போராடி, போராடி, பிறகு வெறுத்துப் போய் இந்த முடிவெடுத்தேன். இது ஏன் புரியவில்லை இந்த மக்களுக்கு?" என்று என்னிடம் குமுறியிருந்தார், பல வருடங்களுக்கு முன்பு, ஒரு சிநேகிதி.
ஆகவே, வாசகர்களே, ஒரே ஒரு வேண்டுகோள். நாம் எல்லோரும் வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது, ஒருவருக்கொருவர் ஒத்துப்போய், ஒன்றிப்போய் அருமையாக, அழகாகக் குடும்பம் நடத்தத்தான் ஆசைப்படுகிறோம். இது போன்ற முறிவுகள் ஒரு சில குடும்பங்களில் ஏற்படும் போது, அங்குள்ள நபர்கள் ஒவ்வொருவரும், ஒரு விதத்தில் நொறுங்கிப் போய் விடுகிறார்கள். இங்கே யார் பக்கம் தவறு என்பதை விவாதித்து, தீர்ப்பளிக்க நமக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை. ஆனோ, பெண்ணோ, அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டியது நம்முடைய ஆதரவு என்று நினைக்கிறேன். அது எந்த விதத்தில், எப்படி கொடுக்க முடியும் என்பது நம்மைப் பொறுத்தது. இது நம்முடைய சமூகம். நம்முடைய மக்கள். இங்கே ஒரு 'சமூக மரணம்' நடந்திருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள். அப்புறம், உங்கள் முடிவு.
வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம். சித்ரா வைத்தீஸ்வரன் |