சுருட்டப்பள்ளி
பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனாக அனந்த சயன ரங்க நாதரை ஸ்ரீரங்கத்தில் தரிசித்திருக் கின்றோம். சிவபெருமானைப் பள்ளி கொண்ட கோலத்தில் கண்டதுண்டா? வாருங்கள் சுருட்டப்பள்ளிக்கு, பள்ளிகொண்டீஸ்வரரைக் காணலாம். தமிழ் நாட்டிலிருந்து போனால் ஆந்திர மாநில எல்லையின் ஆரம்பத்தில், சென்னைக்கும் திருப்பதிக்கும் இடையில் 50கி.மீ. தூரத்தில் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்தில் உள்ளது இவ்வூர்.

தல புராணம்

இந்திரனின் சாபவிமோசனத்திற்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்ததும் தேவர்கள் அமிர்தம் பெற்ற தாகப் புராணம். அமிர்தத்துடன் வெளிவந்த ஆலகால விஷத்தைக் கண்டு நடுங்கினர் தேவர்கள். அவர்களைக் காக்க சிவ பெருமானே அந்த நஞ்சை உட்கொண்டார். உடனே பார்வதி தேவி அந்த நஞ்சு அவரது கண்டத்திற்குக் கீழ் இறங்கா வண்ணம் தன் கைகளால் பற்றித் தடுத்து நிறுத்திவிட, கண்டம் விஷத்தால் நீலமாக பெருமானும் நீலகண்டன் ஆனார்.

விஷம் உண்ட அயர்வைப் போக்கிக் கொள்ள அமைதியான ஓர் இடத்தில் ரகசியமாய் துயில் கொள்ள நினைத்த சிவபெருமான் மரங்களும் செடிகளும் நிறைந்து நிழல்பரப்பி அமைதியாய் விளங்கிய சுருட்டப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து உமை அம்மையின் மடிமீது தலை வைத்துக் கால் நீட்டிப் படுத்து விடுகின்றார். இதனால் இது 'இரகசிய §க்ஷத்திரம்' என்றும் வழங்கப் படுகின்றது. சுருண்டுபோய் அங்கு பள்ளி கொண்டதால் அவ்விடம் சுருட்டப்பள்ளி ஆயிற்று. திருமால் பள்ளி கொண்ட தலங்கள் ஏராளமாயிருக்க, சிவபெருமான் பள்ளி கொண்டிருக்கும் தலம் உலகத்தி லேயே இது ஒன்றுதான்.

கோயில் அமைப்பு

இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு அம்மன் சன்னிதி இறைவன் சன்னிதி இரண்டும் தனித்தனிக் கோயில்களாகக் கிழக்கு நோக்கி அமைந்திருப்பதுடன், கோயிலுக்கு வெளியே வந்தபின், அடுத்து மற்றொரு நுழைவாயிலுக்குள் சென்றால் பள்ளி கொண்டீஸ்வரர் ஆலயம் தனியாக உள்ளது. இனி ஒவ்வொரு ஆலயமாகக் காணலாம். இங்குள்ள அம்மன் மரக தாம்பிகை என்றழைக்கப் படுகின்றாள். நுழைவாயிலில் துவார பாலகர்களுக்குப் பதில் குபேரனின் செல்வங்களான சங்க நிதியும் பதும நிதியும் துவார பாலகர்களாக வைக்கப்பட்டுள்ளனர். இங்கு வந்து அம்மனைத் தரிசித்து வணங்குவோர்க்கு வாழ்க்கையில் செல்வம் கொழிக்குமென்று நம்புகின்றனர்.

அம்மனின் தனித்தன்மை

பொதுவாக கோயில்களில் இறைவன் சன்னிதிக்கு இடப்புறமாக அம்மன் சன்னிதி இருப்பதுதான் வழக்கம். ஆனால் இங்கு அம்மன் இறைவனுக்கு வலப்புறமாகக் கோயில் கொண்டிருக்கின்றாள். அதனால் இது "திருக்கல்யாண §க்ஷத்திரம்" என்று அழைக்கப்படுவதுடன், கலியாணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வணங்கிச் சென்றால் விரைவில் திருமணமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

வால்மீகேஸ்வரர்

கிழக்கு நோக்கியிருக்கும் இக்கோயில் பற்றிய் ஒரு வரலாறு இருக்கின்றது. இவ் வூருக்கு ஒருமுறை வால்மீகி முனிவர் வந்து ஆசிரமம் ஒன்றை அமைத்துக் கொண்டு சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்து சிவபெருமான் உமையுடன் லிங்கவடிவில் காட்சி தந்தார். அந்த ஸ்வயம்பு லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரலானார் வால்மீகி. இந்த மூர்த்தியும் வால்மீகி வழிபட்ட சிறப்பினால் வால்மீகேஸ்வரர் என்று அழைக்கப்படலானார். இந்த மூலவருக்கு சாம் பிராணியும் தைலக் காப்பும் மட்டுமே உண்டு. அபிஷேகம் கிடையாது.

தாம்பத்திய தக்ஷ¢ணாமூர்த்தி

வால்மீகேஸ்வரரின் சன்னிதியின் தெற்கேயுள்ள தக்ஷ¢ணாமூர்த்தி தனித் தன்மை யுடையவர். பொதுவாக, கல்லால மரத்தின் அடியில் சனகாதி முனிவர்களை எதிரில் அமர்த்தி சின்முத்திரையுடன் காட்சி தரும் தக்ஷ¢ணாமூர்த்தியைத்தான் நாம் கண்டிருக்கின்றோம். ஆனால் இங்கு தேவியை - கௌரியை - அணைத்தபடி, காலடியில் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் நிற்க ரிஷபாரூடராய்க் காட்சி தருகின்றார். இது போன்ற தக்ஷ¢ணாமூர்த்தி தோற்றத்தை வேறெங்கிலும் காணக் கிடைக்காது.

இராமலிங்கேஸ்வரர்

வால்மீகேஸ்வரரின் சன்னிதியின் எதிரே காணப்படும் இராமலிங்கேஸ்வரரின் சன்னிதி இதிகாசத் தொடர்புடையது. நர்மதை ஆற்றிலிருந்து கொண்டு வரப் பட்டது இந்த லிங்கம் என்றும், இராமன் இலங்கையிலிருந்து அயோத்தி திரும்பும் வழியில் இந்த லிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து, தானும் சீதை, இலக்ஷ்மணன், சத்ருக்னன், அனுமன் ஆகியோருடன் இங்கு தங்கி இந்த லிங்கத்தை வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. இதனால் இது இராமலிங்கேஸ்வரர் என்றழைக்கப்படலாயிற்று.

இங்குள்ள மிகப் பெரிய இந்த லிங்கத்துக்கருகிலேயெ இதே சன்னிதியிலேயே இராமர், சீதை, இலக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் மற்றும் அனுமன் ஆகியோருக்கும் அழகிய சிலைகள் வைக்கப் பட்டுள்ளன. இது மட்டுமல்ல. லவ குச சிறுவர்களும் இங்கு ஓடி ஆடி விளையாடிய இடம் இது என்றும் அவர்கள் பாதச் சுவடுகள் பதிந்த பாறையும் வைக்கப் பட்டுள்ளது. இத்துணை இதிகாசத்தொடர்பு பற்றியே இத்தலம் "இரண்டாவது இராமேஸ்வரம்" என்ற பொருளில் 'அபர ராமேஸ்வரம்' என்று வழங்கப்படுகின்றது.

இத்தலத்தின் முக்கியமான இறைவன் பள்ளிகொண்டீஸ்வரர் பற்றியும், அசுவமேத யாகம் செய்த புண்ணியத்திற்கு ஈடாகக் கூறப்படும் இக்கோயில் பிரதோஷ வழிபாட்டின் பெருமை குறித்தும் அடுத்த இதழில் விரிவாகக் காணலாம்.

முனைவர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com