ஐங்காயப்பொடி சாதம்
இது அஜீரணம், கபம் (phlegm) ஆகியவற்றின்போது சாப்பிட நல்லது. பலவகை மருத்துவக் குணங்களை உடையது.

தேவையான பொருட்கள்

கொத்துமல்லி விதை - 1/4 கிண்ணம்
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
காய்ந்த வேப்பம்பூ - அரை கைப்பிடி
சுண்டைக்காய் வற்றல் - அரை கைப்பிடி
சுக்குப்பொடி - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1/2 கிண்ணம்.
மிளகாய் வற்றல் - 8
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை

கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் தவிர மற்ற எல்லாவற்றையும் எண்ணெய் இல்லாமல், அடி கனமான வாணலியில் போட்டு, கருஞ்சிவப்பு நிறமாக வரும்வரை வறுக்கவும். பின்னர் பெருங்காயம் சேர்த்துச் சில வினாடி வறுத்தபின் கறிவேப்பிலையைச் சேர்த்து வறுக்கவும்.

கடைசியாக உப்புச் சேர்த்து, அது படபட என வெடிக்கும் போது இறக்கி விடவும். இது ஆறியபின் மிக்ஸியில் போட்டு, பட்டுப்போலப் பொடிசெய்து வைத்துக் கொள்ளவும்

இதில் தேவையான அளவு பொடி எடுத்து சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிடவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com