யார் வெல்வார் என்ற கணிப்புக்கள், அலசி ஆராய்ந்த அரசியல் ஆரூடங் கள், நாங்கள் வெல்வோம் என்ற சூளுரைகள் எல்லாவற்றையும் தாண்டி இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து விட்டது. தேர்தல் முடிவுகளின் பரபரப்பு போதாது என்று பிரதமர் பதவி பற்றிய கேள்விகள். எது எப்படியிருந்தாலும் இந்தியாவில் மக்களாட்சி நலமுடன் இருக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது.
எனது அபிப்ராயங்கள்
ஜெயலலிதாவின் மாற்றம் கண்கெட்டபின் சூர்ய நமஸ்காரம் என்று சொல்வதா? அல்லது தவறு என்று (காலங்கடந்து) அறிந்ததும் திருத்திக் கொள்ளும் தைரியம் என்பதா? சட்டசபை தேர்தலில் ஓட்டு வாங்க நடத்தப்படும் நாடகம் எனக் கொள்வதா? ஆட்சியாளர் மோசமானவராக இருப்பது யாருக்கும் நல்லதல்ல. எனவே இம்மாற்றங்கள் யாவும் மனமார்ந்தவை என்று நம்புவோம்; சில மாதங்களில் தெரிந்துவிடும் எது உண்மை என்று!
நாயுடுவின் தோல்வி
ஆந்திராவின் CEO தோல்வி அடைந்ததற்குக் காரணம்: அவர் இத்தனை காலம் CEOவாக இருந்தது போதும்; இனிமேல் அரசியல்வாதியாகி விடுவோம் என்று முடிவெடுத்ததுதான். கடந்த இரண்டு வருடங்களாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஆறப் போட்டது; தொழில்வளம்/வேலை வாய்ப்பு என்று காரியரீதியாகச் செயல்பட்டவர் F1 என்று விளம்பரத்துக்காகவே இறங்கிய திட்டங்கள்; திருப்பதி வெடிகுண்டை வைத்து அனுதாப ஓட்டுக்காகத் தேர்தலை முன்கூட்டியே நடத்தியது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் ஹைதராபாதில் இருந்த நாட்களில் பார்த்த அனைவரும் சந்திரபாபு நாயுடு தோற்றுவிடுவார் என்று சொன்னார்கள்; ஆனால் அவர் முழு அரசியல்வாதியின் பெரும் அடையாளச்சின்னமான 'ஆமாம் சாமிக் கும்பல்' ஒன்றால் சூழப்பட்டிருந்ததால் தானே வெற்றி பெறுவோம் என்று முழுமையாக நம்பியிருந்ததாகத் தோன்றுகிறது.
சோனியாவின் முடிவு
சோனியா எடுத்த முடிவு மிகவும் சரியானது. அவர் தனது உயிருக்கு அஞ்சி இம்முடிவுக்கு வந்ததாக நான் எண்ணவில்லை. காரணம் எதுவாக இருந்தாலும், அரசியல் ரீதியில் இந்த அவரது முடிவு கட்சிக்குப் பெரும் பலம் சேர்க்கும் என்பது என் கருத்து. அவர் இந்தியரல்லர் என்ற வாதம் எடுபடவில்லையென்றாலும், அவர் பிரதமராகப் பதவியேற்றால் எதிர்க் கட்சியினர் தொடர்ந்து தொல்லைதர வாய்ப்பிருந்தது; இப்பொதோ பெரும் தியாகம் என்று வர்ணிக்கப்பட்டு கம்பீரமாக அவரும் அவரது கட்சியினரும் வலம் வரலாம். சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் உமா பாரதி ஆகியோர் அவருக்கெதிராக நடத்துவோமென்று அறிவித்திருந்த போராட்டங்கள் மிகவும் அநாகரீகமானவை என்பது என் கருத்து.
மன்மோகன் சிங் பிரதமராக இருப்பதற்கு அனைத்துத் தகுதிகளும் உடையவர். இப்போது இந்தியா 'ஒரு விஞ்ஞானி எங்கள் குடியரசுத் தலைவர்; ஒரு பொருளாதார வல்லுநர் எங்கள் பிரதமர்' என்று பெருமைப்படலாம்.
*****
'மாயாபஜார் சமையல் குறிப்புகள்' புத்தகம் தயாராகிவிட்டது. தென்றல் இதழ் உங்கள் கையில் கிடைக்கும் நேரம், புத்தகம் அச்சாகியிருக்கும். ஒரிரண்டு வாரங்களில் உங்கள் கையிலிருக்கும். காலதாமதத்துக்கு மன்னிக்கவும். ***** அமெரிக்க அரசாங்கம் அதன் போர்வீரர்கள் இராக் சிறைச்சாலையில் செய்த கொடுமைகளை எதோ ஒரிருவர் செய்த அடாத செயல்கள் என்று விளக்க முற்பட்டு வருகிறது; ஆனால் உலகெங்கிலும், இராணுவத்தினர் ஒவ்வொரு போரிலும் இப்படித்தான் நடக்கிறார்கள் என்பதே உண்மை நிலை. தேசபக்தி என்ற பெயரால் தனது இராணுவத்தினர் செய்யும் கொடுமைகளைப் பற்றிப் பேசாமலிருப்பது அனைத்து நாட்டினருக்கும் பழகிவிட்ட ஒரு நிலை. இந்நிலை மாறவேண்டும்.
*****
தனிமனித சுதந்திரத்தின் எடுத்துகாட்டாக இருந்த அமெரிக்கா, தன் சுயநலத்துக்காகப் பிறர் உரிமைகளையும், உயிர்களையும் பலியாக்கும் ஒரு நாடாக மாறிவருவதுபோல் தோன்றுகிறது.
மீண்டும் சந்திப்போம் பி. அசோகன் ஜூன் 2004 |