ஏப்ரல் 24, 2004 அன்று அபிகெயில் ஆடம்ஸ் பள்ளிக்கூட அரங்கில் மாலை 4.30 மணிக்கு விமரிசையாகக் கொண்டாடியது நியூயார்க் தமிழ்ச் சங்கம்.
தமிழ்ச் சங்கத்தின் தலைவி காஞ்சனா புலாவின் வரவேற்புரையில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ஏழை எளியவர் களுக்கு இலவசமாக உணவளித்து வரும் சேவையை விவரித்தார். அடுத்துக் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. லலிதா பத்ரிநாத் அவர்களின் மாணவர்கள் முதல் சிறுவர் நிகழ்ச்சியை வழங்கினர். தொடர்ந்து சாவித்திரி ரமானந்தின் மாணவர்கள் வழங்கிய 'தேர்த் திருவிழா' நாட்டிய நடனம் இடம்பெற்றது. வண்ண உடைகளில் முழு அலங்காரங்களுடனும், காவடியுடனும், சிறுவர்கள் ஆடிய நடனமும், அதனுடன் தும்பிக்கையுடன் விநாயகர் அலங்காரத்தில் ஓர் ஆறு வயதுச் சிறுவனும் நிஜமான தேர்த் திருவிழாவையே மேடைக்குக் கொண்டு வந்திருந்தனர். பரமேஸ்வரி தலைமையில் விநாயகர் கோவில் பாடசாலை மாணவர் கள் 'எங்களுக்கும் காலம் வரும்' என்ற பாட்டிற்கு ஆடிய நடனம் அரங்கத்தை மெய்மறக்கச் செய்தது.
பி. கிருஷ்ணமூர்த்தி எழுதி இயக்கிய 'கிரவுண்ட் ஜீரோவில் காட் கிருஷ்ணா' மேடையேறியது. இதில் கிருஷ்ண பகவான் கிரவுண்ட் ஜீரோவிற்கு நேரில் வருவது போலவும், இடிந்து சிதறிக் கிடந்த நிலையைப் பார்த்து, கீதோபதேசத்தைத் தான் குரு §க்ஷத்திரப் போரில் போதித்ததின் காரணத்தையும், இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் தீவிரவாதத்தையும், அதற்கு 2001 ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பலியான உலகப் புகழ் பெற்ற இரட்டைக் கோபுரக் கட்டிடங்களும், அதனுடன் மாண்ட பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் பற்றி விவரித்து, முடிவில் ஒரு உருக்கமான பாட்டுடன் கிருஷ்ண பகவான் இந்த தீவிர வாதத்தை ஒரு புதுஅவதாரம் எடுத்து அடியோடு ஒழிப்பேன் என்று சபதமிடும் காட்சியும், அரங்கத்தைச் சிந்தனையில் ஆழ்த்தியது. இதில் பகவான் கிருஷ்ணனாகப் பாடி நடித்த டி. கண்ணன், பின்னணி இசையை அழகாக அமைத்துக் கொடுத்த ரமேஷ் ராமநாதன், பின்னணி பேசிய ஷண்முகம், மற்றும் தபேலா வாசித்த நாகதீபன், கிருஷ்ணனுக்கு ஒப்பனை செய்த செளந்திரராஜன் ஆகியோர் அரங்கத்தின் கை தட்டலை அமோகமாகப் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, நியூஜெர்சியை சேர்ந்த 'யுனைடெட் ஸ்டேட்ஸ் இம்மெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ்' குழுவினர் சுமித்திரா ராம்ஜி எழுதி இயக்கிய 'பஞ்சாயத்து பஞ்சவர்ணம்' நாடகம் அரங்கத்தைச் சிரிப்பில் அதிர வைத்தது. பஞ்சவர்ணமாக நடித்த பார்கவி சுந்தரராஜனும், மற்ற சக நடிகர், நடிகைகளும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை அழகான நடிப்பினாலும், நகைச்சுவை கலந்த வசனங்களின் மூலமும் பார்வையாளர்களைத் தொடர்ந்து சிரிப்பில் ஆழ்த்தினர்.
ரமேஷ் ராமநாதன் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி தொடர்ந்தது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் உறுதுணையாக இருந்த உறுப்பினர்களான வனஜா பார்த்தசாரதி, ராதாகிருஷ்ணன், ஆற்காட் தியாகராஜன், ஆல்பெர்ட் செல்வதுரை, கே. சொக்கலிங்கம், இ.ஜெ. ஜெரிமையா, சிவராஜ் வெங்கட்ராமன், ப்ராஹா குப்தா, துளசிகுப்தா, உமா ஜோதி, மாலினி பாஷ்யம் அனைவருக்கும் தமிழ்ச் சங்கம் நன்றியை தெரிவிக்கிறது.
வனஜா பார்த்தசாரதி |