கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ஆண்டு விழா 2004
கலிஃபோர்னியா தமிழ்க் கழகத் (California Tamil Academy) தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா சான் ஹோசே விலுள்ள C.E.T. கலையரங்கில் மே 22, 2004 அன்று கொண்டாடப்பட்டது. பள்ளியில் தமிழ் பயிலும் சுமார் 175 மாணவ, மாணவியர், 35 ஆசிரிய, ஆசிரியைகள் ஏறத்தாழ 250 பெற்றோர்கள் மட்டுமின்றி, தாத்தா பாட்டிமார்களூம், மற்றும் சான் ஃப்ரான் சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தினரும் இதில் கலந்து கொண்டனர். விழாவின் சிறப்பு விருந்தினராக சான் ·ப்ரான்சிஸ்கோ இந்தியத் துணைத்தூதர் H. H. விஸ்வநாதன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அடுத்து இந்திய குடியரசுத் தலைவர் மாண்புமிகு. அப்துல் கலாம் அவர்கள் எழுதிய வாழ்த்துக் கடிதத்தைக் குமார் குமரப்பன் வாசித்தார்.

அடுத்து H. H. விஸ்வ நாதன் அவர்கள் பள்ளிக் குத் தனது பாராட்டைத் தெரிவித்தார். பின்னர் குமார் குமரப்பன் தமிழ்க் கழகத்தின் ·ப்ரீமான்ட் (Fremont) கிளை வரும் ஆகஸ்டு முதல் துவங்கும் என்ற இனிய அறிவிப்பை வெளியிட்டார். வட அமெரிக்காவில் முதல் முறையாக தமிழ் உலாவி (Web Browser), தமிழ் ஓபன் ஆபீஸ் ஆகியவை கொண்ட தமிழ் திறவூற்று மென்பொருள் தொகுப்புக் குறுந்தகட்டையும் (Tamil Open Software Collection 1.0 CD) அவர் வெளியிட்டார்.

முதலில் ஆரம்பநிலை மாணவர்கள் கலிபோர்னியாத் தமிழ்க் கழகம் பற்றிய வில்லுப்பாட்டு, கலிபோர்னியாவில் ராமன் (நகைச்சுவை நாடகம்), புறாவும் வேடனும் (நாடகம்), 'கோபியரே கோபியரே' (நடனம்), மாறன் தாத்தா பண்ணை பார் என்ற Old McDonald Had a Farm ராகத்தில் அமைந்த பாடல் போன்ற பலவற்றை அளித்தனர். மழலைகள் சுமார் 25 பேர் அம்மா சுட்ட தோசை, ஆட்டம் பாட்டம் என்ற பாடல்களைப் பாடியாடி அனைவரையும் ஆனந்தப்படுத்தினர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, நடுநிலை, உயர்நிலை மற்றும் உரையாடல் வகுப்பு மாணவர்களின் நிகழ்ச்சிகள் நடந்தன. பாரதியின் 'ஒளி படைத்த கண்ணினாய்' மற்றும் 'மனதில் உறுதி வேண்டும்' பாடல்கள், 'பூப்பூக்கும் ஓசை' பாடலுக்கு கண்கவர் நடனம், புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல்களுக்குக் கோலாட்டம் மற்றும் கும்மி முதலியவற்றை மாணவர்கள் அருமையாகச் செய்தனர். 'www.சிரிக்காதீங்க ப்ளீஸ்.காம்' என்ற நகைச்சுவை நாடகம் மற்றும் உரையாடல் வகுப்பு மாணவர்கள் தாங்களே எழுதி இயக்கிய நாடகத்துடன் மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் முடிவுற்றன.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் அடிப் படைச் சான்றிதழ் தேர்வு எழுதிச் சிறப்பாக வெற்றி பெற்ற 23 மாணவர்களுக்கும் முன்னாள் தமிழ் மன்றத் தலைவர் சிவா சேஷப்பன் தமிழ் இணையப் பல்கலைக் கழகச் சான்றிதழ்களை வழங்கினார்.

ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினர். பள்ளியின் தலைவி வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் பள்ளியின் புதிய ஆசிரிய, ஆசிரியைகளுக்குப் பரிசு வழங்கி, புதிய நிர்வாகிகளை அறிமுகப் படுத்தியபின் ஆண்டுவிழா இனிதே முடிந்தது.

மாணவர்கள் முத்து அண்ணாமலை மற்றும் ரகு சந்திரமோகன் நிகழ்ச்சியை அழகிய தமிழில் தொகுத்து வழங்கினர். மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி, இளைய தலைமுறையினர் மூலம் நம்மைத் தாண்டித் தமிழ் செம்மையாய்த் தழைக்கும் என்ற நம்பிக்கையை அதிகரிக்கின்றது.

கந்தசாமி பழனிசாமி

© TamilOnline.com