வெங்கட் சாமிநாதனுக்குக் கனடாவில் இயல் விருது
கடந்த நாற்பது வருடங்களாக ஓய்வில்லாமல் எழுதிக்கொண்டு வரும் எழுத்தாளர், விமர்சகர் வெங்கட் சாமிநாதனுக்குக் கடந்த வியாழன் அன்று ரொறொன்ரோவில் (Toronto) 'இயல் விருது' வழங்கப்பட்டது. இது கேடயமும் பணமுடிப்பு 1500 கனடா டொலர்களும் கொண்ட பரிசாகும்.

கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தென்னா சியக் கல்வி மையமும் இணைந்து நடாத்தும் இந்த விருதுக்கான விழா ஜூன் 10, 2004 அன்று ரொறொன்ரோ பல்கலைக் கழக ஸீலி மண்டபத்தில் நடைபெற்றது. பரிசை வழங்கிய பேரா. மைக்கல் டொனல்லி வெங்கட் சாமிநாதன் இலக்கியம், நாடகம், இசை, சிற்பம், சித்திரம், சினிமா போன்ற பலதுறைகளிலும் ஆற்றிய விமரிசனச் சேவையைச் சிலாகித்துப் பேசினார்.

தலைமை வகித்த பேரா. செல்வா கனகநாயகம் பேசுகையில் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வது நல்ல விமர் சனமே என்றும் இந்த விருது அவருடைய வாழ்நாள் இலக்கியச் சேவைக்கு வழங்கப் பெறுவது மிகவும் பொருத்தம் என்றும் பேசினார். அதைத் தொடர்ந்து அ. முத்து லிங்கம் தமிழ் இலக்கியத் தோட்டம் கனடாவில் ஆற்றிவரும் பங்கு பற்றிய தகவல்களைக் கூறினார்.

என்.கே. மகாலிங்கம் தன் உரையில் வெங்கட் சாமிநாதனின் முழு இலக்கியப் பங்களிப்பு பற்றியும், தமிழ் உலகில் அது ஏற்படுத்திய மாற்றம் பற்றியும் பேசினார். நவீன இலக்கியம், மேற்கத்திய மரபு என்று பல தளங்களில் ஆய்வுகளுக்கு, பல எதிர்ப்பு களுக்கு இடையிலும், விடாமல் வலியுறுத்தி வந்த வெங்கட் சாமிநாதனுக்குத் தமிழ் நாட்டில் ஒரு சீனி மிட்டாய் கூடப் பரிசாகக் கிடைக்காத பரிதாபத்தைச் சொன்ன அவர், இந்த வாழ்நாள் இலக்கியச் சேவைப் பரிசு அவருக்குக் கிடைப்பது, அதுவும் கனடா மண்ணில் கிடைப்பது, கனடியத் தமிழ் மக்களுக்கு ஒரு பெருமையான விடயம் என்று கூறினார்.

கனடிய மண்ணில் கால்வைத்த பிறகு வெங்கட் சாமிநாதன் சந்தித்த முதல் நபர் அவரிடம் கேட்ட கேள்வி "எதற்காக வந்திருக்கிறீர்கள்?" என்பதுதான். அவர் வேறு யாரும் அல்ல, குடிவரவு அதிகாரி. வெங்கட் சாமிநாதன் "விருது வாங்குவதற்கு வந்திருக்கிறேன். கடிதம் பார்க்கிறீர்களா?" என்றார். அதிகாரி "பல்கலைக் கழகமே உங்கள் தகுதியைத் தீர்மானித்துவிட்டது. நான் என்ன பார்ப்பது" என்றாராம். அந்த அதிகாரியின் நல்ல வார்த்தைகள் வெங்கட் சாமிநாதனை மட்டுமல்ல கனடியத் தமிழ் மக்களையும் குளிர்வித்தது.

ஏற்புரை வழங்கிய வெங்கட் சாமிநாதன் தான் பாசம் கொண்ட பிறந்த மண்ணில் தன்னை ஏற்காதபோது பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சூழல்களின் நெருக்கடிகளையும் மீறித் தன்னை அழைத்து கெளரவித்த விழாக் குழுவினரைப் பாராட்டினார்.

இந்த விழாவில், கனடாவில் தமிழ் கற்கும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டது சிறப்பான அம்சம். அவர்கள் வெங்கட் சாமிநாதனிடம் பல கேள்விகள் கேட்டுத் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர். மாணவர்கள் எதிர்கால முன்னேற்றத் தில் ஒரு சதத்திற்கும் பிரயோசனப்படாத தமிழ் அறிவில் அவர்கள் காட்டும் உற்சாகம் அவருக்கு வியப்பைத் தருவதாகச் சொன்னார்.

செல்வம் அருளானந்தத்தின் நன்றியுரை யுடன் விழா நிறைவு பெற்றது.

© TamilOnline.com