மே 22, 2004 அன்று சிகாகோ லெமாண்ட் கோவிலில் பாம்பே ஜெயஸ்ரீயின் கர்நாடக இசைக்கச்சேரி நடைபெற்றது. பல அருமையான பாடல்களை அவர் பாடினார். 'தேவ தேவ' என்ற பூர்வி கல்யாணி ராகத்தில் ஆரம்பித்த கச்சேரி அடுத்து அசாவேரி, தர்பார் என்று மெருகேறியது. 'ஸ்ரீலக்ஷ்மி வராகம்' என்ற ஆபோகி ராகக் கீர்த்தனையை கேட்டவுடன், இவ்வளவு நல்ல ஆபோகியைக் கேட்டு மிகுந்த நாட்களாகிவிட்டதே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. அடுத்து வந்த காம்போதி ராக 'ஓரங்கசாயி' தேவாமிரதம். இடையில் பாபநாசம் சிவனின் 'காவாவா' என்ற பாடலும் சளைத்ததில்லை. சண்முகப்பிரியாவில் ஆரம்பித்த ராகம், தானம், பல்லவி, திலங், ரஞ்சனி, கலாவதி என்று விலாவரியாகப் பாடிய போது, காதிற்குத் தேன் விருந்துதான் போங்கள். பாகேஸ்வரியில் 'கண்டேன் கண்டேன்' என்ற பாடலும், சிந்துபைரவியில் காளி மகேஸ்வரி பஜனும் இனித்த கல்கண்டு. 'கிருஷ்ணா நீ பேகனே' இல்லாமல் சிகாகோ ரசிகர்கள் விடுவார்களா? அதுவும், தர்பாரி கானடாவில் அமைந்த 'சர்வம் பிரும்ம மயம்' என்ற பாடலும் ரசிகர்களின் விருப்பப் பாடல்கள். தேஷில் அமைந்த தில்லானா விற்கு ஒரு பேஷ்.
ஜெயஸ்ரீக்கு ஈடுகொடுத்து பக்கவாத்தியம் வாசித்த வயலின் ஹரிபாஸ்கரும், மிருதங்கச் சக்கரவர்த்தி பூங்குலம் சுப்ரமணியனும் அசத்திவிட்டனர்.
ஜோலியட் ரகு |