ஃபாரன்ஹைட் 9/11
ஆவலுடன் எதிர்பார்த்த 'ஃபாரன் ஹைட் 9/11' ஆவணப் படம் வெளிவந்து விட்டது. கான் திரைப்பட விழா விருது பெற்ற இந்தப் படம் வெளிவருவதே அமெரிக்கக் குடியாட்சி நெறிக்கு ஒரு வெற்றி. பயங்கரவாத எதிர்ப்பைக் காரணமாகக் கொண்டு ஆட்சியின் அத்து மீறல்களைக் குறை கூறுவோரை அமெரிக்காவின் எதிரி களாகச் சித்தரிப்பதில் அண்மைக் காலம்வரை வெற்றி கண்டிருக்கிறது ஆளுங்கட்சி. அத்துமீறலை எதிர்த்துக் குரல் கொடுத்த ஹாவர்ட் டீன், ஆல்பர்ட் கோர், டென்னிஸ் குசினிச் போன்றவர் களை நையாண்டி செய்து ஓரங்கட்டியா யிற்று. எதிர்க்கட்சியினர் ஊமையாய் நிற்க, ஊடகங்கள் வாயடைத்துப் போயின. இந்த நிலையிலும், உலக அரங்கின் முன் ஓங்கிக் குரல் கொடுத்து அமெரிக்காவில் சுயசிந்தனை முழுதும் மழுங்கிப் போய்விட வில்லை என்று காட்டியவர் இயக்குநர் மைக்கேல் மூர். ஆஸ்கர் விருது விழாவில் அவர் எழுப்பிய கலகக் குரல் உலகின் கவனத்தைக் கவர்ந்தது.

'ஃபாரன்ஹைட் 9/11' படத்தின் அடிப்படைச் சிந்தனை ஜார்ஜ் ஆர்வெல் லின் '1984' புதினத்தை எதிரொலிக்கிறது. இராக் போர் நாகரீகத்துக்கும் காட்டு மிராண்டித்தனத்துக்கும் இடையே நடக்கும் போர் என்று முழங்குகிறார் அதிபர் புஷ். ஆனால், நாகரீகத்துக்குப் போராட நாகரீக வாழ்வின் உச்சத்தில் இருக்கும் எந்தப் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் குழந்தைகளை அனுப்பவில்லை. அதிபர் புஷ், துணை அதிபர் சேனி, மற்றும் பல உயர் அதிகாரிகள் தமக்கு வாய்ப்பிருந்தும் வியட் நாம் போரில் சேவை செய்வதைத் தவிர்த்தவர்கள். நாகரீகத்தைக் காப்பாற்ற இராக்கில் போரிடச் செல்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள், சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது இந்தப் படம்.

நியூயார்க்கின் இரண்டாவது கோபுரத்தையும் ஒரு விமானம் தாக்கியது என்ற செய்தியைக் கேட்ட பின்னரும் குழந்தைகள் பள்ளியில் பொம்மைப் புத்தகத்தைப் புரட்டியவாறு திருதிரு என்று விழித்துக் கொண்டிருக்கும் அதிபர் புஷ், அந்த ஏழு நிமிடங்களை எப்படி விளக்கப் போகிறாரோ? இவரது இன்றைய வீரதீரப் பிரதாபத்தைக் கேட்பவர்கள், அன்றைய மந்தநிலையைப் பார்க்கும்போது இவர் யார் கைப்பாவை என்று சிந்திக்காமல் இருக்க மாட்டார்கள். போரை வைத்து ஆதாயம் தேடும் வியாபாரிகளின் ஈனத் தனமும் போரில் தங்கள் பிள்ளைகளை இழந்து வாடும் சாதாரண மக்களின் பரிதவிப்பும் நம் நினைவில் நிற்கும்.

'ஃபாரன்ஹைட் 9/11' படத் தலைப்பு எழுத்தாளர் ரே பிராட்பரியின் 'ஃபாரன் ஹைட் 451' என்ற அறிவியல் புதினத்தின் தலைப்பைத் தழுவியது. காகிதம் பற்றி எரியும் வெப்பநிலை 451 டிகிரி ஃபாரன்ஹைட். பிராட்பரியின் கதையில் கருத்து வேறுபாடு களைத் தவிர்க்கப் புத்தகங்கள் எரிக்கப் படுகின்றன. தீயணைப்புப் படையின் வேலை தீயைப் பற்ற வைத்துப் புத்தகங் களை எரிப்பதுதான். தேசபக்தி, தேசிய ஒருமைப்பாடு, கட்சிக் கட்டுப்பாடு, கொள்கை உறுதி என்ற போர்வைகளில் மாற்றுக் கருத்துகளை அடக்கி அழிக்க முயன்ற அரசு களைப் பற்றி வரலாற்றில் படித்திருக்கிறோம். சோவியத் யூனியன், அதன் துணைநாடுகள், இந்திரா காந்தியின் 'அவசர நிலை' இந்தியா, இஸ்லாமிய மதவாதநாடுகள் மட்டுமல்லாமல் மேலை நாடுகளிலும் இந்த அடக்குமுறை எண்ணங்கள் தலைதூக்கி இருக்கின்றன. ஒவ்வொரு முறையும், கலகக் குரல்கள் அடக்குமுறைகளை எதிர்த்து வந்திருக் கின்றன. மைக்கேல் மூரின் குரல் ஒரு முக்கியமான கலகக் குரல்.

சிந்தனை அடக்குமுறை தமிழ்நாட்டு வரலாற்றையும் கறைப் படுத்தியிருக்கிறது. அனல் வாதம், புனல் வாதம் என்று நாம் படிக்கும் வரலாறு, மாற்றுக் கருத்துகளைத் தீயிலிட்டுப் பொசுக்கியும், ஆற்றில் எறிந்தும் அழித்த வரலாறு. பல தமிழக இதழ்கள் கட்சித்தலைவர்கள் குறைகளைச் சுட்டியதற் காகத் தாக்கப் பட்டிருக்கின்றன. இந்த மாதம், நடிகர் விஜயகாந்த்தின் மீது தாக்குதல். எங்களைக் குறை சொன்னால் உன் படத்தை ஓட விடமாட்டோம் என்று எச்சரித்திருக்கிறது ஓர் அரசியல் கட்சி. அப்படி அவர் என்ன சொன்னார்? அனுபவம் குறைவாக இருக்கும் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசு அமைச்சரவையில் செழிப்பான துறை களைப் பேரம் பேசி வாங்கியிருப்பதைக் கடிந்திருக்கிறார். ஒரு குடிமகனுக்கு இந்த உரிமைகூடக் கிடையாதா? படத்தை ஓடவிட மாட்டேன் என்பது போக்கிரித் தனமாக எச்சரிக்கை. பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் இது போன்ற எச்சரிக்கைகளைத் தவிர்க்கவேண்டும். அமெரிக்க அதிபரைக் கண்டித்துப் படம் எடுக்க முடிகிறது என்றால், அது அமெரிக்கர்களின் விழிப்புணர்வுக்கு அடையாளம். விஜயகாந்த்தை வாய டைக்க முடிவது எதற்கு அடையாளம்?

கனடியத் தமிழர்களின் பாராட்டு விழாவில் இலக்கிய விமரிசகர் வெங்கட் சாமிநாதன் "தங்கள் எதிர்கால முன்னேற்றத்துக்கு ஒரு சதத்துக்கும் பிரயோ சனப் படாத தமிழ் அறிவில் மாணவர்கள் காட்டும் உற்சாகம் தனக்கு வியப்பைத் தருகிறது" என்றார். கல்வி என்பது இன்று தோன்றி நாளை மறையும் தொழில் நுட்பங்கள் மட்டும் இல்லை. வழக் கொழிந்த செம்மொழிகளான பண்டைய கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ இவற்றைக் கற்று மனித நாகரீகத்தைப் புரிந்து கொள்வது மாணவர்களின் கல்வியை முழுமையாக்குகிறது என்பது இங்கே பல்கலைக்கழகங்களின் கொள்கை. தன்னம்பிக்கை இழந்த இந்தியர்களோ, இவற்றிற்கு இணையான செம்மொழிகளான சமஸ்கிருதம், தமிழ் இவற்றை உதாசீனப் படுத்திப் பிழைப்பதற்குக்குத் தேவையானவற்றைப் படித்தால் போதும் என்கிறார்கள். கணினியியலில் BNF இலக்கணத்தைப் பார்த்து வியக்கும் இந்தியர்களுக்கு, 2000 ஆண்டுகளுக்கு முன்னே பேச்சு மொழிகளுக்கே இலக்கணம் வகுத்த பாணினி, தொல் காப்பியர் பற்றித் தெரிவதில்லை. "இம்போர்ட்டட்" என்று முத்திரை குத்தினால்தான் தரம் என்ற தாழ்வு மனப்பான்மைக்கு யாரும் விதிவிலக்கு இல்லை போலிருக்கிறது.

இந்திய அதிபர் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்று கூறியிருப்பது கல்கண்டுச் செய்தி. மொழியறிஞர்களுக்குத் தெரிந்த இந்த உண்மையை இந்திய அரசு ஏற்றுக் கொள்வதற்கு அரசியல்வாதிகள் போராட வேண்டியிருந் திருக்கிறது. தமிழ் ஏன் செம்மொழியாகக் கருதப் படுகிறது என்று பர்க்கெலித் தமிழ்ப்பீடப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் எழுதிய கடிதம் பலரின் கவனத்தை ஈர்த்தது. தமிழைப் பற்றி நமக்கே தெரியாத செய்திகளைத் தருகிறது இந்தக் கடிதம். (http://tamil.berkeley.edu/Tamil%20Chair/TamilClassicalLanguage/TamilClassicalLgeLtr.html )

ஜூலை 4 விடுமுறையில் கூடும் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடு மற்றும் தமிழ்நாடு அறக்கட்டளை மாநாடு இவை சிறப்பாக நடக்க நம் வாழ்த்துகள்.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com