ஜுலை 2004 : வாசகர் கடிதம்
மதுரபாரதியின் புதிய பாரதப் பிரதமர், திடுக்கிடும் திருப்பங்கள் ஆகிய கட்டுரைகள் வரவேற்கத்தக்கவை. அவர் சுட்டிக்காட்டும் சோனியாவின் நிழலில் சுதந்திரச் சிந்தனை தொடருமா என்பதுதான் பெரிய கேள்வி என்பதும், தமிழகத்துக்கு வேட்டைதான் என்று எழுதியிருப்பதும் போற்றத் தக்கவை. 'அவுட் சோர்சிங்' வெகு நல்லமுறையில் எழுதப்பட்டு இருக்கிறது.

கார்த்திகேயன் அவர்களின் விபரமான விஷயங்கள் மக்களுக்குத் தெரிய ஒரு பெரும் பாக்யம்தான். 'அன்புள்ள சிநேகிதியே' உணர்ச்சி உண்டாகச் செய்கிறது. 'காலத்தில்' சுழற்சி என்கிற தலைப்பில் மோகன் அழகாக எழுதியிருக்கிறார்.

'வாபஸ்' என்கிற தலைப்பில் வந்து இருக்கும் உருவப்படம் ரசிக்கத்தக்கதாக இல்லை. தவிர முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜூலை 10ம் தேதி பரபரப்பான சம்பவங்களை தமிழக மக்கள் எதிர் பார்க்கலாம் என்று எழுதியிருப்பது மக்களைத் தூண்டுவது போல் இருக்கிறது.

அட்லாண்டா ராஜன்

******


அந்தக் காலத்து 'கண்ணதாசன்', 'தீபம்' போன்றும், தற்போது வெளிவருகிற 'மூவேந்தர் முரசு', 'சிங்கைச்சுடர்', 'கண்ணியம்' போன்ற இதழ்கள் போன்றும் 'தென்றல்' இதழ் மனதை நிறைவு செய்தது. அசோகன் அவர்களின் தலையங்கம் இதழுக்கு மகுடம்.

ஜூன் 2004 இதழில் முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் அவர்களுடன் நேர்காணல் படித்துவிட்டு 'காக்கிச் சட்டைக்குள்ளேயும் ஒரு கவிதை உள்ளமா?' என்று வியந்தேன். மற்றும் பி. லீலா நேர்காணல் அந்நாள் திரைஉலகத்தை அழகாக படம் பிடித்துக் காட்டியது.

இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் குறித்து மதுரபாரதியின் கட்டுரை நேர்த்தியாக இருந்தது.

சிறுகதைகள் நன்று. சிறுநீரக நிபுணரின் ''பெருநரகம் அல்ல.. சிறுநீரகம்'' மிகவும் பயனுள்ள கட்டுரை. இதுபோன்ற கட்டுரைகள் தொடர வேண்டும். வெறுமை, விரக்தி, ஏமாற்றம்... போன்ற மனநிலையில் இருக்கும் ஒரு சிநேகிதியின் வாழ்க்கை அவலத்தை வாசித்ததும் மனது வலித்தது. 'ஒரு சமூக மரணம் நடந்திருக்கிறது..' என்ற வரியில் ஆயிரம் அர்த்தங்களை எதிரொலிக்கச் செய்திருக்கிறார் சித்ரா வைத்தீஸ்வரன். பாராட்டுக்கள்.

மணி மு. மணிவண்ணன் அவர்களின் 'யேல் பல்கலைக்கழகத்தில் தமிழ்' கட்டுரையில் தமிழ்மொழியின் பெருமையை உணர்த்தி மெய்சிலிர்க்க வைத்துள்ளார். ஓவியா சுந்தரின் மூன்று புதுக்கவிதைகளும் நன்று. 'வேண்டும்' கவிதை என்னை வியப்பில் ஆழ்த்தியது. மரபுக் கவிதைகளும் இடம் பெறலாமே! வாஞ்சி நாதனின் 'குறுக்கெழுத்துப் புதிர்' அறிவு ஜீவிகளுக்கு ஓர் ஆனந்த விளையாட்டு.

தென்றலைச் சிறப்பாக நடத்துகிற அதன் குழுமத்தைச் சார்ந்தவர்களின் கரங்களை இங்கிருந்தே முத்தமிடுகிறேன். அவர்கள் வழங்கும் 'தமிழ்' விருந்தில் கலந்து கொள்வதில் இந்தத் தமிழகக்கவிஞன், பெரிதும் பெருமை கொள்கிறான்.

பாவலர் கருமலைப் பழம்நீ

******


எங்கள் அபிமானப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் அவர்களது நேர்காணல் மிகவும் அருமை. இதுவரை அவரது பாடல்களை மட்டும் கேட்டு ரசித்து வந்த எங்களுக்கு அவரது பூர்வீகம் முதல் தமிழ்த் திரையுலகப் பிரவேசம், இளம் கலைஞர்களுக்கு அறிவுரைவரை மிக நன்றாக இருந்தது. கிறித்துவரின் ஐயப்ப பக்தி நேர்காணல் கட்டுரைக்கு மகுடம் வைத்ததுபோல் இருந்தது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

G. ரத்தினவேலு, T.A. ராஜ்குமார், R. லலிதா, R. மஞ்சுளா, பிரணவ் சான்டா கிளாரா,
கலி.

******


ஜூன் மாதத் தென்றல் இதழ் படித்தேன். பாரதத் தேர்தல் முடிவுகள் பற்றிய சிறப்புக் கட்டுரை நேரிலேயே பார்ப்பது போல் இருந்தது. மதுரபாரதிக்குப் பாராட்டுக்கள்.

இந்திரா காசிநாதன்

******


ஒரு சில புகைப்படமும், ஒரு சில ஒருவரி மேதாவிலாசமான கருத்தும் போட்டு ஒரு பக்கத்தை நிரப்புவது இல்லை என்ற "குறை" இருந்தது. தென்றலிலும் அந்த வாடை ஜூன் மாத இதழில் வீச ஆரம்பித்துவிட்டதே!

மீரா சிவா

******


ஜூன் 2004 மாதத் தென்றல் இதழ் படித்தேன். அதில் வாய்மையின் வெற்றி என்ற தலைப்பில் நேர்மையும், கண்டிப்பும், பணிச்சிறப்பும், இளம் துடிப்பும் உள்ள முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் அவர்களைப் பேட்டி கண்டு வெளியிட்டது என்னை மிகவும் கவர்ந்தது. நேரிலேயே அவரிடம் பேசுவது போன்று வெளியிட்டமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சி.ஐ. கல்யாணராமன்,
(ஓய்வுபெற்ற காவல் அதிகாரி) கேன்டன்

******


தென்றல் இதழைக் கண்டேன்; அழகும் அருமைப்பாடும் கொண்டுள்ளது; அதன் உள்ளம் தமிழ்; உணர்வு தமிழ்ப் பண்பாடு; காட்சி தமிழகம்; பொருள் தமிழர் வாழ்வு; மொழிநடை செந்தமிழ் இலக்கியம்!

தென்றல் காட்டுவது தமிழகமா, அமெரிக்காவா எனும் மயக்கம். இங்கு ஒரு குட்டித் தமிழகம் உருவாகும் எனும் நம்பிக்கை. என் மகிழ்வும் பாராட்டுகளும்.

பேரா. த. முருகரத்தனம் (ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், பல்கலை நகர், மதுரை) தற்போது மேற்கு புளூம்ஃபீல்டு,
மிச்சிகன்

******


வழிபாடு பகுதியில் பிரசுரமான 'சுருட்டப்பள்ளி' பற்றிய செய்தி புதுமையாக இருந்தது. அமெரிக் காவில் இருக்கும் என்னைச் சுருட்டப்பள்ளிக்குக் கூட்டிச் சென்ற பெருமை தென்றலைச் சாரும். தெரியாத செய்தி தெரியும்படிச் சொன்ன தென்றலே நீ ஒரு அறிவுப் பெட்டகம். பாராட்டுகள்.

உஷா முத்துராமன்,
நியூ ஜெர்சி

******


ஜூன் தென்றலில் 'அன்புள்ள சிநேகிதியே' படித்தேன். யாருடைய ஆலோசனையும், அனுதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்று எழுதியிருப்பதிலிருந்து உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு விரக்தி ஏற்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

எத்தனையோ பெண்கள் முழு மனதோடும், முழு ஈடுபாட்டோடும் தங்கள் கணவரோடு வாழ்க்கை நடத்துவது இல்லை. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு போராட்டத்தோடு தான் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர். வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே போராட்ட மாகத்தான் பல பெண்களுக்கு இருக்கிறது. இப்படி அவர்கள் வாழப் பல காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது சமுதாயம். கணவனைப் பிரிந்து விட்டால் இந்தச் சமுதாயம் நம்மை என்ன பேசுமோ என்னும் பயம். அடுத்தது குழந்தைகள். "அந்த மனிதனோடு எனக்கு வாழ விருப்பமில்லை என்றாலும் இந்த குழந்தைகளுக்காக வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன்" என்று கூறுவதை நான் கேட்டு இருக்கின்றேன். மூன்றாவதாக, பல பெண்களுக்குப் பிறந்த வீட்டின் ஆதரவு கிடைப்பதில்லை அதனால் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் தைரியம் இல்லாமல் பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். நான்காவதாக, கணவன் திருந்திவிடுவார் என்னும் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கும் பெண்கள் பலர். இப்படிக் காரணத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம். இது போன்ற காரணங்களாகிய கட்டுக்களை அறுத்தெறிந்து வெளிவரும் பெண்கள் ஒரு சிலரே. ஆனால் அந்த ஒரு சிலருக்குக் கூட நம் சமுதாயத்தில் ஆதரவு கிடையாது.

சத்திய ஷீலா ஸ்ரீனிவாஸ்,
லா புவென்டே, கலி.

******

© TamilOnline.com