தமிழகத்துக்குக் காவிரி நீர் வருண பகவானின் கருணையால் வந்து கொண்டிருக் கிறது. கபினி அணை நிரம்பி வழியவே தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கட்டாயத்திற்குக் கர்நாடக அரசு தள்ளப் படிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர்வரத்து இல்லாததால் விவசாயத்திற்காக நீர் திறந்து விடமுடியாத நிலை ஏற்பட்டு, தஞ்சை காவேரி ஆற்றுக் கழிமுகப் பகுதி உழவர்கள் சொல்லொணாத் துயர் அடைந்தனர்.
காவிரி ஆணையத்தின் இடைக்கால உத்தரவுப்படி ஆண்டுதோறும் 205 ஆயிரம் மில்லியன் கன மீட்டர் (TMC) தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால், இதுவரை ஓர் ஆண்டுகூட குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட அளவு தண்ணீரைத் திறந்துவிட்டதாகச் சரித்திரம் கிடையாது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஆணையத்தைச் செயல்பட விடுவதில்லை அதுமட்டுமல்லாமல் வறட்சிக் காலத்தில் தண்ணீரை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பது குறித்த விதிமுறைகளையும் நிர்ணயிக்கவிடாமல் தடுத்து வருகிறது.
வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி போதிய அளவு அணையில் நீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை எனக் கர்நாடக அரசு தெரிவித்திருந்த நிலையில் கடந்த மாதம் தமிழக மக்களவை, மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி பிரதமரைச் சந்தித்துக் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதற்கொப்பப் பிரதமர் அனுப்பிய மத்திய ஆய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர் இருப்பு கடந்த ஆண்டைவிட அதிகமாகவே உள்ளது என்றும் நான்கு அணைகளிலுமாக 16 டி.எம்.சிக்கும் அதிகமான தண்ணீர் உள்ளது என்றும், அதேசமயம் மேட்டூரில் அணையைத் திறக்கும் அளவுக்கு தண்ணீர் இல்லை என்றும் ஆகையால் கர்நாடகம் நல்லெண்ண அடிப்படையில் தண்ணீரைத் திறந்துவிடலாம் என்று தெரிவித்தது.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் துரைமுருகன் தலைமையில் கர்நாடக முதல்வர் தரம்சிங்கை நேரில் சந்தித்துக் காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கேட்டுக் கொண்டனர். பிரதமர் மன்மோகன்சிங்கும் கர்நாடக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கும் கர்நாடக அரசு மறுத்துவிட்டது.
தமிழகத்திலிருந்து அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான மூவர் குழு கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்தது மட்டுமல்லாமல், தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதம் ஒன்றையும் அளித்தது. காவிரிப் பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழகத்திலிருந்து அமைச்சர் குழு வைப் பெங்களூர் அனுப்பியது ஒரு முக்கிய மான திருப்பமாகும். கர்நாடக அரசுடன் நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்துவதில் எந்தவித பலனும் ஏற்படாது என்று சொல்லி வந்த ஜெயலலிதா அரசு இப்போது தன் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆக, வெள்ளப்பெருக்கைச் சமாளிக்க முடியாமல் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிட்டது. அதற்காக ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப் பெருக்கை நம்பி ஆற்றுக் கழிமுகப் பகுதி உழவர்கள் வாழ்க்கை நடத்த முடியுமா?
தொகுப்பு: கேடிஸ்ரீ |