புகையை ஒழிப்போம்
புது வருடத்தில் புகை பிடிப்பதை நிறுத்த முயற்சிப்போம்!

புகை பிடிப்பதனால் ஏற்படும் கேடுகள் பற்பல. அவற்றுள் ஒரு சிலவற்றை பற்றி இங்கு காண்போம்.

1. புற்று நோய்- நுரையீரல், வாய், தொண்டை, உணவுக்குழாய், சிறு நீரகப்பை (bladder), pancreas மற்றும் cervix இந்த உறுப்புகளின் புற்று நோய் புகை பிடிப்பதால் ஏற்படுவது என்று திட்ட

வட்டமாக சொல்ல முடியும்.

2. நுரையீரல் பாதிக்கப்பட்டு Chronic Bronchitis மற்றும் Emphysema என்ற நோய் உருவாகுவதால், இருமல், இழுப்பு ஏற்படும். இது முற்றினால், அடிக்கடி மருத்துவமனையில் சேர

நேரிடும். அது மட்டுமின்றி நுரையீரல் முற்றிலும் சேதமடையலாம்.

3. இருதய அடைப்பு மற்றும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம்.

4. பக்கவாதம் ஏற்படலாம்.

5. கால்களில் இரத்த நாளங்கள் அடைபட்டு முற்றிலும் பழுதடையலாம்.

6. புகை பிடிப்பவரை மட்டும் இன்றி, அருகில் புகையை சுவாசிப்பவரையும் (இரண்டாம் தாரமாக second hand smoking) மேற்கூறிய நோய்கள் தாக்கலாம் 2004 இல் எடுத்த கணக்கெடுப்புபடி

அமெரிக்காவில் 23% ஆண்களும், 18% பெண்களும் புகை பிடிப்பதாக தெரிகிறது.
30% புற்று நோய் இறப்புகள் புகை பிடிப்பதனாலேயே ஏற்படுகின்றன.

புகை பிடிப்பதை நிறுத்தினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

புகை பிடிப்பதை நிறுத்தின உடனே, இரத்த நாளங்கள் புத்துயிர் பெறுகின்றன. இரத்த ஓட்டம் அதிகமாகிறது. மூச்சு விடுவது சுலபமாகிறது. நாவில் சுவையும், நாசியின் பலமும் கூடுகிறது.

பல வருடங்களாக புகை பிடித்து வந்தாலும், நிறுத்தினால் ஏற்படும் பயன்கள் அதிகமே. புகை பிடிப்பதை நிறுத்தி பத்து வருடங்கள் பிறகு நுரையீரல் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு கணிசமாக 30%

முதல் 50% வரை குறைகிறது. ஐந்து வருடங்களில் உணவுக்குழாய் புற்று நோய் 50% குறைகிறது. புற்று நோய் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரும், பலன்கள் ஏற்படுகின்றன. மீண்டும் நோய்

ஏற்படாமல் இருக்க உதவுகிறது. இதை தவிர, இருதய நோய், பக்கவாதம் ஆகியவை குறைகிறது. ஒருவர் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு (life expectancy) அதிகமாகிறது.

புகை பிடிப்பதை எப்போது நிறுத்தினால் பலன் உண்டாகும்?

புகை பிடிக்கும் பலர், வயதானால் நிறுத்தி விடுவதாக சொல்லுவதுண்டு. மற்றும் சிலர், இத்தனை ஆண்டுகளாக பிடித்து வருகிறேன். இது வரை ஒன்றும் ஆகவில்லை. அதனால் இனி ஒன்றும்

ஆகாது என்று நினைப்ப துண்டு. வேறு சிலர் இனி இந்த வயதில் நிறுத்தி பயன் அதிகம் இல்லை என்று சொல்வதுண்டு.

அவை யாவும் வெறும் சாக்கு போக்கே. எந்த வயதிலும் இந்த பழக்கத்தை நிறுத்தலாம். நிறுத்தின உடன் ஏற்படும் நன்மைகள் எல்லா வயதினருக்கும் பொதுவே. மேலும், புற்று நோய் உருவாகி,

அதில் மீண்டவருக்கு இந்த பழக்கத்தை நிறுத்துவதினால் ஏற்படும் நன்மைகள் கூடுதலாகும்.

எப்படி நிறுத்துவது?

இது தான் இந்த கட்டுரையில் அதிக சன்மானம் பெறும் கேள்வி. முதற்படியாக நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். எண்ணத்தை பலப்படுத்த தகுந்த விவரங்களை சேகரித்து கொள்ளுதல்

நலம். சுயமாக இந்த சாதனையை செய்பவரை விட, நண்பர்களின் உதவியுடன் செய்பவர் கள், பல வருடங்களுக்கு வெற்றி காண்பதாக கணக்கெடுப்பில் தெரிகிறது. ஆகவே, புகை பிடிக்காத

நண்பர்களின் உதவியுடன் உங்கள் முயற்சியை தொடங்குங்கள்.

ஏன் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கேள்வியை கேட்டு, அதற்கான உங்கள் பதில்களை எழுதி வையுங்கள். இதை நீங்கள் காண்பதற்கு ஏதுவான இடத்தில் வையுங்கள்.

உங்கள் சிகரெட்டுகளை ஒரு காகிதத்தில் சுருட்டி பத்திரப்படுத்துங்கள். ஒவ்வொரு முறை புகை பிடிக்கும் போதும், அந்த காகிதப்பையில் இருந்து எடுத்து பிடியுங்கள்.

மீண்டும் ஒவ்வொரு முறையும் புகை பிடிக்கத் தூண்டிய எண்ணங்களையும் காரணங்களையும், எந்த நேரத்தில் என்ற குறிப்பையும் எழுதி வையுங்கள். ஒவ்வொரு முறை பிடிக்கும் போது இது

தேவையா என்று ஒரு முறை கேளுங்கள். ஒரு பாக்கெட் திறக்கப்பட்டிருந்தால், அது முடிந்த பின்னரே புதிய பாக்கெட் வாங்குவது என்று முடிவு செய்யுங்கள். அடிக்கடி கடைக்கு சென்று வாங்கும்படி

குறைந்த அளவு வாங்குங்கள். அடுத்த பாக்கெட் வாங்கும் பொழுது, குறைவான 'nicotine' உள்ள பாக்கெட்டை வாங்கவும். படிப்படியாக அளவை குறைத்தபின்னர் அடுத்த நிலையை அடையவும்.
முடிவாக ஒரு நாள் நிறுத்துவதாக நாள் குறியுங்கள்.

இந்த முயற்சியில் உங்களின் நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், மற்றும் மருத்துவரின் உதவி பெரிதும் பலன் தரும். இதில் மருத்துவரின் பங்கு பெரும்பங்கு. கீழ் காணும் முறைப்படி மருத்துவரின்

பங்கு அளிக்கப்படும். ASK, ADVICE, ASSESS, ASSIST, and ARRANGE.

ASK - மருத்துவர் உங்களை உங்கள் பழக்கம் பற்றி விசாரிப்பார்
ADVICE - உங்களுக்கு, புகை பிடிப்பதை நிறுத்துவதின் பலன்களை பற்றி அறிவுரை கூறுவார்.
ASSESS - நிறுத்துவதற்காக காட்டும் ஆர்வத்தை மருத்துவர் எடை போடுவார்.
ASSIST - நிறுத்த நாள் குறிக்க, தேவையான மருந்துகள் தருவதற்கு, அவ்வப்போது அறிவுரை வழங்க உதவி வழங்கப்படும்.
ARRANGE - நிறுத்திய பின்னர் நேரிடும் விளைவுகளை கண்காணிக்க மருத்துவரை அணுக வேண்டும்.

நிறுத்துவதற்கான நாள் குறித்த பின்னர், முடிவில் தீவிரமாக இருக்க வேண்டும். சிகரெட்டுகளை தூக்கி எறிதல் வேண்டும். கூடுமானவரை உங்களை சுறுசுறுப்பாக வைத்திருங்கள். புகை பிடிக்கும்

வட்டாரத்தில் இருந்து தள்ளி இருங்கள். கைகளை குறிப்பாக சுறுசுறுப்பாக வையுங்கள். புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் முதல் 2 அல்லது 3 நாட்களுக்கு கூடுதலாக இருக்கும். இதற்கு,

மருத்துவரின் ஆலோசனைப்படி 'Nicotine Patch' அல்லது Nicotine Gum போன்றவை உபயோகப்படுத்தலாம். இந்த முறை மருந்துகள் உட்கொள்பவர் களிடையே வெற்றி கூடுதலாக

காணப்படுகிறது. இதையும் தவிர 'BUPROPRION' என்ற மருந்தும் உட்கொள்ளலாம்.

இதையும் மீறி ஒன்று அல்லது இரண்டு சிகரெட்டுகள் பிடிக்க கூடுமானால், மனம் தளர வேண்டாம். என்னால் முடியாது என்று கைவிட வேண்டாம். மீண்டும் முயற்சியின் பாதையில் இறங்குங்கள்.

சிலருக்கு இரண்டு அல்லது மூன்று முயற்சிகள் தேவைப்படலாம். மூன்று மாதங்கள் புகை பிடிக்காமல் இருந்து விட்டால் வெற்றியின் சாத்தியம் நிச்சயம்.

வெற்றிகரமாக நிறுத்திய பின்னர், உங்களின் நண்பர் ஒருவருக்கு உதவ முன்வாருங்கள். 'Peer Counseling' என்று சொல்லப்படும் முறையை கையாளுங்கள்.

இந்த பழக்கத்தை நிறுத்த பல வித நிறுவனங்கள் உதவி செய்கின்றன. 'National Cancer Institute' இதற்காக ஒரு Hotline வைத்துள்ளது. இது 1-877-44U-QUIT (1-877-448-

7848). மேலும், வலை தளத்தில் 'LIVE HELP' என்ற பெயரில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக அறிவுரை வழங்கவும் வசதி உள்ளது.
உங்களை முடிக்க வல்ல இந்த பழக்கத்தை
இன்றே முடியுங்கள்.

நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com