வளர்ச்சிப் பணிகளை அரசியலாக்க கூடாது
தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சராக உள்ளோம். இந்த அரிய வாய்ப்பைத் தமிழக அரசு அதிகபட்சம் பயன்படுத்திக் கொண்டு, சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

தமிழக அரசுடன் ஒத்துழைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பாடியில் மேம்பாலம் கட்டுவதற்குத் தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை. நாங்கள் அரசின் ஒத்துழைப்பைக் கோருவது மக்கள் நலத் திட்டங்களுக்காக, என்

கட்சிப் பணிக்கோ, வீட்டுப் பணிக்கோ அல்ல.

மேம்பாலங்கள் கட்டித் தேசிய வளத்தை உருவாக்குகிறோம். அரசியல் காரணங் களுக்காக தமிழக ஆட்சியாளர்கள் என்னை எதிர்க்கலாம். ஆனால், இதில் அரசியல் இல்லை. வளர்ச்சிப் பணிகளை அரசியலாக்கவும் கூடாது.

பாடி மேம்பாலத்தைக் கட்டுவதற்கு தமிழக அரசு பூரண ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.

டி.ஆர். பாலு, தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர், சென்னையில் பத்திரிகையாளர்கள் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தது...

******


அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், மாணவர்கள் மட்டுமே காரணமல்ல, ஆசிரியர்களுக்கும் பொறுப்புணர்வு இருப்பதில்லை.

அண்மையில் நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் ஓர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மட்டுமே எழுதினர். மூவருமே தேர்ச்சி பெறவில்லை. அந்தப் பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஒரு

மாணவனை ஓர் ஆசிரியர் தத்து எடுத்துக்கொண்டால்கூட அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.

பெற்றோர்களிடமும் குறை இருக்கிறது. தங்களது குழந்தைகளை பல ஆயிரம் கொடுத்து தனிப்பயிற்சிக்கு அனுப்பும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இது ஆசிரியர்களைக் கெடுத்துவிடுகிறது.

செ. செம்மலை, கல்வியமைச்சர், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வுகளில் வெற்றி பெறாத மாணவ, மாணவியர்க்கு விழிப்புணர்வூட்டல், வழிகாட்டுதலுக்கான இலவசப் பயிற்சியைத் தொடங்கி வைத்துப்

பேசுகையில்...


******


போட்டிகளைச் சமாளிக்கக் கூடியதாக இந்தியாவின் வேளாண் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மின்சாரம், உரம், கடன் வழங்குதல் போன்ற வற்றுக்கு அரசு அதிகம் செலவு செய்து வருகிறது. ஆனால்,

உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளோ மிகக் குறைந்த அளவிலேயே செலவிடுகின்றனர். இதனால் அரசுக்கு மிகப் பெரிய நிதிச்சுமை. அரசு உதவிகளால் மிக அதிக பலன்களைப் பெறும் விவசாயிகள் அதைப்

பயன்படுத்துவதில் கவனக்குறைவாகச் செயல்படுகின்றனர். வளர்ந்து வரும் நாட்டுக்கு இது நல்லதல்ல.

இன்றைய சூழலில் புதிய பாதையில் உற்பத்தியைப் பெருக்குவதே உடனடித் தேவை. இதில் தன்னிறைவை எட்டிய பிறகு ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும். விவசாய வளர்ச்சியில் எதிர்காலத்தில் ஏற்படும்

சோதனைகளைச் சந்திக்க விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை தாராளமயமாக்க வேண்டும். உறுதியான விவசாயக் கொள்கைகள், விவசாய அமைப்புகளின் சீரமைப்பு தேவை.

பீட்டர் பி.ஆர். ஹேசல், இயக்குநர், சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (வாஷிங்டன்), பேசியது...

******


'இளமையில் கல்' என்பதன் பொருள் இளம் பருவத்தில் கலைகள், வித்தைகளைக் கற்றுத் தேர்ச்சியுற வேண்டும் என்பதே. சமுதாயத்தில் கல்விப் பணி மிக முக்கியமானது. நல்லாசிரியர்களும், சிறந்த நிர்வாகமும் இணைந்து

பணியாற்றினால் கல்வி நிறுவனங்கள வளர்ந்தோங்கும்.

சிறார்களுக்கு இளம் வயதில் நீதி போதனையும் மிக அவசியம். கல்வியோடு மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் கற்பித்தால் சிறந்த மனிதர்களை உருவாக்கலாம். இதனால் நல்ல சமுதாயம் அமையும். கல்வி கற்பதன்

பயனே இறை வனை வழிபடுவதாகும் என்று திருக்குறள் கூறுகிறது.

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சென்னையில் சர் சி. பி. ராமசாமி அய்யர் ஃபவுண்டேஷன் சார்பில் 'தி குரோவ்' தொடக்கப் பள்ளியைத் திறந்து வைத்துப் பேசியது...

******


பட்ஜெட் ஆலோசனை தொடர்பாக ஒரு திட்டம் தயாரித்து வருகிறேன். அதில் இந்திய அளவிலான பட்ஜெட் ஆலோசனை, தமிழக அளவிலான பட்ஜெட் ஆலோசனை, யூனியன் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத்

தீர்க்கும் ஆலோசனை என்று வகைப்படுத்தியுள்ளேன்.

இதில் விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், சமூக இயக்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஏற்றுமதியாளர்கள், நிதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், அரசு ஊழியர் சங்கங்களைச்

சேர்ந்தவர்கள், பல்கலைக் கழக ஊழியர்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோருடனும் கலந்து செய்வேன்.

இவர்களிடம் கருத்துகளைத் திரட்டி என்னுடைய கருத்துகளையும் சேர்த்து நிதியமைச்சரிடம் இந்த ஆலோசனைத் திட்ட அறிக்கையை அளிக்க உள்ளேன். பட்ஜெட் என்பது வரவு-செலவுக் கணக்கு கிடையாது. மக்களுக்குத்

தேவையான திட்டம் எது என்பதைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.

பேரா. மு. ராமதாஸ், புதுவை மக்களவை உறுப்பினர், பத்திரியாளர்கள் சந்திப்பில் கூறியது...

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com