சக்கரம்
விமானம் இந்தியாவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. பெருமூச்சு விட்டபடி சாய்ந்தான் ரவி. ஐந்து வருடங்களுக்கு முன் அமெரிக்காவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது அவன் கொஞ்சம்கூட இப்படி ஆகும் என்று நினைத்திருக்க மாட்டான்... சென்ற வருடம் சென்னைக்குச் சென்று லட்சுமியைப் பார்த்து நிச்சயம் செய்யும் போதுகூட இப்படி ஆகுமென்று அவன் நினைக்கவில்லை.

ஆறுமாதம் முன்பு அவனுடைய மேலாளர் அவனை தன் அறைக்குள் அழைத்து ''அடுத்த மாதத்தில் இருந்து உனக்கு வேலையில்லை'' என்று தெளிவாகச் சொன்னபோது அதை ரவியால் நம்ப முடியவில்லை. இவ்வளவு பெரிய கம்பெனியில்... இத்தனை பெரிய பதவியில் இருந்த தன்னை... எப்படி?

வேறு நிறுவனங்களில் தொடர்புகள் மூலமாகவும், இணையத்தளத்தின் மூல மாகவும், நண்பர்கள் மூலமாகவும் எவ்வளவு முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை. கையில் இருந்த பணம் வீடு, கார் முதலியவற்றின் தவணை கட்டுவதற்குக் காலியாகிக் கொண்டிருந்தது.

கூச்சம் இல்லாமல் அவனுடைய லெக்ஸஸ் காருக்கு எரிபொருள் போட்ட அதே பலவசதிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். பகலில் வேலை தேடி அலைந்தான். மாலையில் கிடைத்த வேலையைச் செய்தான். வீட்டுக்குகூட இன்னும் தெரியாது அவனுக்கு வேலை போய்விட்டதென்று. சென்ற வாரம் ·போனில் அம்மா கேட்டாள். ''ஏம்ப்பா.. லே ஆ·ப் அப்படியெல்லாம் சொல்கிறார்களே... அப்படின்னா என்ன?'' தொலைபேசி மெளனமானது.

'சென்னைக்குக் காவேரித் தண்ணீர் வருகிறது' என்பது போல ஓர் இனிய செய்தி அவன் காதுக்கு எட்டியது. இந்தியாவில் முன்னோடியில் இருக்கும் கம்பெனி ஒன்றில் உயர்நிலை அதிகாரி தேவை என்று கேள்விப்பட்டு விண்ணப்பித்தான். தொலைபேசிப் பேட்டியில் தேறிவிட்டான். நேர்முகமாக நிர்வாக இயக்குநரைப் பார்த்தால் போதும், வேலை கிடைத்துவிடும்.

பிறகு தன் குடும்பத்துக்கும் லட்சுமியின் குடும்பத்துக்கும் விஷயத்தைச் சொல்லி அவர்கள் எடுக்கும் முடிவே தன்னுடைய திருமண வாழ்க்கையை நிச்சயிக்கட்டும் என்று எண்ணி ரவி இந்தியாவிற்குக் கிளம்பினான்.

ஆசையாக வாங்கிய வீடு, கார் அனைத்தையும் ஏறக்கட்டிவிட்டுப் பயணத் தைத் தொடர்ந்தான். சிலரைப் போல் விமான நிலையத்தில் காரை விட்டுவிட்டுச் செல்லவில்லையே என்ற சந்தோஷம் மட்டும்தான் பாக்கி.

இன்னும் சிறிது நேரத்தில் இந்திய மண்ணை அடைந்தபின் ஒரு ஹோட்டலில் தங்கி, வேலை நிச்சயமாகக் கிடைத்தபின் வீட்டுக்கு போகலாம் என்று எண்ணியபடி தூங்கிப்போனான் ரவி.

''அம்மா வேலை கிடைச்சிடுச்சு'' என்று தலைகால் புரியாமல் கத்திக்கொண்டு ஓடி வந்தான் விஷ்ணு. ''சூப்பர் வேலை, சூப்பர் சம்பளம், அமெரிக்கக் கம்பெனி..'' என்றான்.

அம்மா, அப்பா, தாத்தா எல்லோரும் மலர்ந்த முகத்துடன் ஓடி வந்தனர். விஷ்ணு தொடர்ந்தான்.

''அமெரிக்காவில் ஆட்களை லே ஆ·ப் செய்துவிட்டு இந்தியாவில் ஆ·பீஸ் திறந்த ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூக்கு போனேன் இல்லையா? அங்கே எனக்கு வேலை கிடைச்சிடுச்சு.. நிறையக் கம்பெனிகளில் அப்படித்தான் செய்யப் போகிறார்களாம். அதுதான் அவங்களுக்கு லாபமாம். அங்கே ஒரு ஆளை நீக்கினால் இங்கே பத்து பேருக்கு வேலை கிடைக்குமாம்'' என்று சொல்லிவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டான் விஷ்ணு. அப்பாடா, ஐந்து வருடங்களாக வேலை கிடைக்காமல் கம்ப்யூட்டர் கோர்ஸ்களுக்குப் போய் வந்த காலம் முடிந்தது.

மோகனால் நம்பமுடியவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே! கோபத்தில் மூச்சுக் காற்று சூடேறியது.

நேற்றுவரை தான்தான் கம்பெனியின் உபதலைவர் ஆகப்போகிறோம் என்று இறுமாப்புடன் வலம் வந்த மோகனுக்கு அறை விழுந்தாற்போல் இருந்தது.

ஐந்து வருடங்களுக்கு முன் பன்னாட்டு நிறுவனம் ஒன்று சென்னையில் கிளை ஆபீஸ் ஆரம்பித்தது முதல் இன்று வரை தன் அனுபவம், அறிவு, எல்லாம் சேர்த்து அயராது உழைத்து, தன் கம்பெனி வேரூன்றி நிற்கும் அளவிற்கு வளர்த்த பலரில் அவனும் ஒருவன்.

'எனக்குக் கிடைக்காத பதவி உயர்வு யாருக்கோ, அவனுக்கு நியூயார்க்கில் ஐந்து வருடங்கள் வேலை செய்த அனுபவம் இருக்கிறதாம். அதனால் அவன் என்னை விட ஒஸ்தியாம். இது எந்த ஊரு நியாயம்?' மோகனுக்குக் கோபம் எம்பயர் ஸ்டேட் பில்டிங் எலவேட்டர் போல் ஏறியது.

முற்றும்

ஷமீளா

© TamilOnline.com