நைஜீரியாவில் மதுபானம் மலிவு
தை மாதம், 1964ம் ஆண்டு. சரியாக நாற்பது வருடங்களுக்கு முன்பு. எனது பிறந்த நாடான இலங்கையை விட்டு வேலை நிமித்தமாக நைஜீரியாவுக்குச் சென்றேன். அதுவே எனது முதல் வெளிநாட்டுப் பயணம்.

எனக்கு ஒரு பெரும் அவா. ராஜ கோபாலாச்சாரியாரைச் சந்தித்துப் பேசவேண்டும். ராஜாஜிக்கு அப்போது வயது 84. இந்தியாவில் ஜனநாயக ஆட்சி ஸ்திரப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நேருவின் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகச் சுதந்திரா கட்சி அமைத்து ராஜாஜி வெற்றி கண்ட காலம். டில்லியில் ஆச்சாரியா ரங்கா தலைமையில் இந்தக் கட்சி அறுபதுக்கு மேல் ஆசனங்களைக் கைப்பற்றிப் பிரதானமான எதிர்க்கட்சியாக விளங்கியது. அத்துடன் ராஜாஜி 'சுவதந்திரா' என்ற ஒரு ஆங்கில இதழையும் நடத்திக் கொண்டிருந்தார். தமிழில் அப்போது 'கல்கி' பத்திரிகையில் 'சக்கரவர்த்தித் திருமகன்' காப்பியத்தையும் மற்றும் அரசியல், சமூகக் கட்டுரைகளையும் எழுதிவந்தார்.

அவருடைய நீடிய சுதந்திரப் போராட்டச் சாதனைகள், சமூகச் சீர்திருத்தக் கொள்கைகள், கூரிய அறிவு, எழுத்தாளுமை எல்லாமே என்னைக் கவர்ந்து அவர்மேல் ஒரு அபரிமிதமான பக்தியை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் காலத்தில் நைஜீரியாவுக்குப் போவதானால் பம்பாய் சென்று அங்கிருந்து ரோம் மார்க்கமாகச் செல்ல வேண்டும். கொழும்பில் இருந்து சென்னைக்குப் போகவேண்டியதில்லை. ஆனாலும் ராஜாஜியைப் பார்க்கவேண்டும் என்ற எனது ஒரே ஆசையினால் சென்னையில் இரண்டு நாள் தங்கினேன். விடுதியில் இருந்து ராஜாஜி இல்லத்திற்கு டெலி·போன் செய்தேன். அவரது காரியதரிசி ராஜாஜியைச் சந்திக்கமுடியாது என்று முகத்தில் அடித்ததுபோலக் கூறிவிட்டார்.

இளம் பருவம். முடியாது என்ற பதிலை என்னால் ஏற்கமுடியவில்லை. முடிக்க வேண்டும் என்ற துணிவு வந்தது. தியாகராய நகரில் கல்கி உரிமையாளர் சதாசிவம்/எம். எஸ். சுப்புலட்சுமி தம்பதிகளுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் அப்போது ராஜாஜி தங்கியிருந்தார். நான் ஒரு வாடகைக் காரை அமர்த்தி அவர் இல்லம் சென்றேன். வீட்டின் முன்கூடத்தில் ஓர் ஊஞ்சல் கட்டில். ராஜாஜியின் மகன் சி. ஆர். நரசிம்மன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். உடம்பில் ஒரு வேட்டி மட்டும்தான். பெரிய தொப்பை. அவர் காங்கிரஸ் சார்பில் டில்லியில் அப்போது எம். பி. யாக இருந்தார். என்ன வேண்டும் என்றார். நான் சொன்னேன் ராஜாஜியைக் காணவந்தேன் என்று. ராஜாஜி மேல் மாடியில் ஓர் அறையில் இருந்தார்.

நரசிம்மன் அவருக்குச் செய்தி அனுப்பியதும் நான் மேலே வரலாம் என்று உத்தரவு வந்தது. மேலே போய் ராஜாஜி முன் விழுந்து வணங்கினேன். அவருக்குக் காது கேட்பது கொஞ்சம் குறைவு. கையைக் காதில் குவித்து வைத்துத்தான் கேட்பார். நான் எந்த ஊர், என்ன செய்கிறேன், எங்கே செல்கிறேன் என்றெல்லாம் கேட்டார். நான் நைஜீரியாவுக்கு ஆசிரியத் தொழில் செய்யச் செல்வதை அறிந்து கொண்டார். அவர் "நைஜீரியாவில் மதுபானம் மலிவு. உமக்கோ இளம் வயது. கவனமாக இருக்கவேண்டும்" என்றார்.

இதில் விந்தை என்னவென்றால் ராஜாஜி இந்தியாவை விட்டுக் கென்னடி காலத்தில் ஒரேயொரு தடவை நியூயார்க் சென்றிருந்தார். இருந்தும் உலகம் பூராவும் நடக்கும் சிறுசிறு விஷயங்கள்கூட அவருடைய அற்புத அறிவுக்கு எட்டாமல் போனதில்லை.

அடுத்து இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றி கேட்டார். அப்போது எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் தமிழர்கள் சிங்கள அதிகாரத்துக்கு எதிராக சாத்வீகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ராஜாஜி சொன்னார் "இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து போராடி தமது உரிமைகளைப் பெற வேண்டும். போராட்டத்தைத் தளர்த்தினார்களோ அவர்கள் இனரீதியாக அழிந்து விடுவார்கள்." பத்து நிமிடங்கள் மட்டில் தரிசனம் கிடைத்தது. இன்று நாற்பது வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் நேற்று நடந்ததுபோல மனதில் அந்தச் சந்திப்பு பசுமையாக இருக்கிறது. அது என் பாக்கியம். அந்த தீர்க்கதரிசி இலங்கைத் தமிழர்கள் பற்றிச் சொன்ன வார்த்தைகள் இன்றைக்கும் பொருந்தும்.

அ. இ. அரசரத்தினம்,
கனடா

© TamilOnline.com