ஸ்வர்ண மீனாட்சி. சிறிய உருவம். பெரிய கண்கள். துருதுருவென்ற முகம். குழந்தைக் குரல். கல்லூரி இளங்கலை மாணவி. உயிர் இயற்பியல் மற்றும் உயிர் வேதியியல் (Bio-Physics and Bio-chemistry) மூன்றாம் வருடம்.
வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து யேல் பல்கலைக் கழகத்தில் தமிழின் ஓசை இன்னும் பலமாகக் கேட்கப்போகிறது. தமிழைப் பாடமாகக் கற்றுக் கொடுக்க, முனைவர் ஈ. அண்ணாமலை (பல நாடு களில் தமிழைப் பரப்பியவர்) இந்தியா விலிருந்து வரப்போகிறார்.
அதற்கும், இந்த மீனாட்சிக்கும் (வேணி என்று வீட்டில் அழைக்கிறார்கள்) என்ன சம்பந்தம்?
யேல் பல்கலையில் சேர அனுமதி கிடைத்து ஆவலுடன் அதில் காலெடுத்து வைத்த பிறகுதான் வேணிக்குத் தெரிந்தது தமிழைப் பாடமாகக் கற்றுக்கொள்ள வாய்பில்லை என்று. தெற்காசிய இந்திய மொழிகளில் ஹிந்தியும், சம்ஸ்கிருதமும் தான் பாடங்களாக (credit courses) ஆக இருக்கின்றன. மொழி ஒரு நாட்டின் பண்பாட்டின் நுழைவாயில் இல்லையா. ஒரு நாட்டின் வளர்ச்சியையோ, பண்பாட்டையோ புரிந்து கொள்ள மொழிதான் முதலில் முக்கியம். அப்படி யிருந்தும் ஏன் தெற்கு ஆசிய மொழிகளை வளர்க்காமல் விட்டு வைத்திருக்கிறோம் என்று டாக்டர் பெர்னார்டு பேட் (Dr. Bernard Bate) உடன் வாதாடினேன். அவர் தமிழ்நாட்டில் பல வருடம் வாழ்ந்திருக்கிறார். நிறைய தமிழார்வம். மாந்தவியல் துறைப் பேராசிரியர். எனக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தார். யேல் பல்கலையில் ஒரு தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து மாதம் ஒரு முறை (4-5 பேர்தான் இருப்போம்) சந்தித்து, தமிழ், தமிழ் பிரச்சினைகளைப் பற்றித் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசுவோம்.
ஹிந்தியைப் பாடமாக எடுத்துக் கொண் டேன். அதுவும் அழகான மொழிதான். ஆனால், வகுப்பில் பலமுறை நினைப்பேன். ''நான் தமிழர் மரபில் தோன்றியவள். எங்கு தமிழ்க் குரலைக் கேட்டாலும் எனக்கு மனதில் மத்தாப்புப் பூக்கிறதே. அப்படியிருக்க, ஏன் தமிழைக் கற்க வாய்ப்பில்லாமல் போகிறது?'' என்று. இந்த ஆதங்கம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
ஹிந்தியைப் பாடமாகக் கற்பிக்க 800 கையெழுத்துக்களைச் சில ஆண்டுகளுக்கு முன்பு திரட்டினார்கள் என்று கேள்விப்பட்டேன். உடனே செயல்பட்டேன். பல்கலையில் சொற்பொழிவோ, கலை நிகழ்ச்சியோ, உணவு பறிமாறும் இடமோ இருந்தால், அங்கெல்லாம் போய் நின்று விளக்கிச் சொல்லிக் கையெழுத்து வேட்டையாடினேன். எப்படியோ 911 கையெழுத்துகளைச் சேகரித்து provost-க்கு மனுவை அனுப்பி வைத்தேன். இது போதாது. இந்த வகுப்பு ஆரம்பித்தால் கண்டிப்பாக அதைப் பாடமாக எடுத்துக் கொள்வோம் என்று பிறர் எழுதி 4, 5 கடிதங்கள் கொண்டு காட்டினால் ஏதேனும் செய்கிறோம் என்று சொன்னார்கள். மறுபடியும் கடித வேட்டை. 14 கடிதங்கள் பிறர் எழுத அதையும் சமர்ப்பித்தேன். முனைவர் டி. என். ஸ்ரீவத்ஸன், அர்ஜூன் அப்பாதுரை, முனைவர் காரல் பிரிட்டிரஜ் போன்றவர்கள் மிகவும் உதவியாக இருந்தார்கள்.
அப்பாவுக்குத் தமிழ்ப் பற்று மிகவும் அதிகம். இருந்தும் சிறு வயதில் நான் எழுதப்படிக்கக் கற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவிற்கு 2-3 ஆண்டுக்கு ஒருமுறை போகும் போதெல்லாம் உற்சாகமாக இருக்கும். பாட்டிக்குத் தமிழ்தான் தெரியும். முதல் ஓரிரு நாள் திண்டாடுவேன். பிறகு நாக்குத் தளர்ந்து சரளமாக உரையாட வந்துவிடும். வெட்கம், சங்கடம் எல்லாம் மறைந்து போகும். இங்கு வந்தவுடன் மறுபடியும் மறந்து போய் விடுவேன். இருந்தும் நீறுபூத்த நெருப்பாகத் தமிழார்வம் அடி மனத்தில் என்றும் இருந்தது.
பேராசிரியர் அண்ணாமலை தமிழ் கற்பிக்க வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. அவர் வருகைக்காக காத்திருக்கிறேன். இப்போது தமிழ்ச் சங்கத் தலைவி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். ஏதேனும் புதிதாகச் செய்ய வேண்டும். நிறைய எண்ணங்களைத் தேக்கி வைத்திருக்கிறேன்'' என்று முடித்தார் வேணி.
சில மாதங்களுக்கு முன்பு சான் ஹோசே சென்றிருந்தேன். 'தென்றல்' விழா ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு, மறுநாள் திரு. மணிவண்ணன் வீட்டில் ஒரு சில தமிழ் அன்பர்களுடன் அருமையான விருந்து, கலந்துரையாடல். எல்லாம் முடிந்து திரும்பி வரும்போது, மனம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தமிழுக்காகவே சில பாட்டுக்கள் ஏன் ஏழுதக்கூடாது நாம் என்ற எண்ணம் தோன்றியது. அந்த இரவில் என் கருத்தில் தோன்றிய முதல் பாடலின் முதல் சில வரிகள்
சங்கெடுத்து ஊதுகிறோம் சங்கத்தமிழ் மலர வேண்டும் பங்கெடுக்க வாருங்கள் பாரெல்லாம் பரப்புங்கள்
இந்த ஸ்வர்ண மீனாட்சி, நான் பாடலை எழுதி முடிக்கும் முன்பே சங்கை ஊத ஆரம்பித்துவிட்டார். இவர் போன்ற தமிழ்ப் பெண்களைப் பற்றி, நம் சமூகம் மிகவும் பெருமைப்பட வேண்டும்.
சித்ரா வைத்தீஸ்வரன் |