அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த மாதம் ஒரு சில கேக்குகளை நுண்ணலை அடுப்பில் செய்து மகிழலாம். கேக் செய்யும் பொழுது முக்கியமாக கவனிக்கவேண்டியது என்ன வென்றால் அதை தயாரிக்க உபயோகிக்கும் பொருட்கள் யாவும் சாதாரண சீதோஷ்ண நிலையில் (Normal room temperature) இருக்கவேண்டும்.
முட்டையில்லாத பேரீச்சம்பழ வால்நட் கேக்
தேவையான பொருட்கள்:
முழு பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது - 15 - 20 பால் - 1 கிண்ணம் ஆலிவ் எண்ணெய் - 1/2 கிண்ணம் பொடித்த சர்க்கரை - 1/2 கிண்ணம் பாதாம் பொடி - 3/4 கிண்ணம் வால்நட் (உடைத்தது) - 1/8 கிண்ணம் சமையல் சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி பேகிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி வனிலா சாறு (எஸன்ஸ்) - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
பாதாம் பொடியை சமையல் சோடா உப்பு, பேகிங் பவுடர் சேர்த்து இருமுறை சலிக்கவும். சலித்த பின் சல்லடையில் உள்ள பாதாமின் தோலையும் சலித்ததுடன் சேர்த்து வைக்கவும். இதில் நிறைய நார்சத்து இருப்பதால் உடலுக்கு நல்லது.
இளம் சூடான பாலில் பேரீச்சம் பழங்களை ஊறவைக்கவும். பின்னர் இது நன்கு ஆறிய பின்னர் இதை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இதில் ஆலிவ் எண்ணெய் விட்டு சில நொடிகள் மிக்ஸியை ஓடவிடவும். பின்னர் சர்க்கரையை சேர்த்து இந்த கலவை ஒன்று சேர்ந்து வரும் வரை மறுபடி சில நொடிகள் மிக்ஸியை ஓடவிடவும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு இதில் கொஞ்சம் கொஞ்சமாக சலித்த மாவை சேர்த்து லேசாக (fold) கிளறவும். வால்நட் பருப்பையும் வனிலா சாறையும் (எஸன்ஸையும்) சேர்க்கவும்.
இதை மைக்ரொவேவில் சமைக்கக்கூடிய ஒரு கண்ணாடி பாத்திரத்தில் விட்டு அதிக திறனில் (High power) 5 நிமிடங்கள் சமைக்கவும்.
கேக்கின் நடுவில் ஒரு மரக்குச்சியை விட்டு பார்த்தால் ஒட்டாமல் வந்ததும் எடுத்து விடவும்.
700 வாட்ஸ் உள்ள நுண்ணலை அடுப்பில் இந்த கேக் செய்ய கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் ஆகும். அதிக திறன் உள்ள நுண்ணலை அடுப்பில் இதை செய்ய குறைந்த நேரமே ஆகும். எனவே அதிக திறனுள்ள அடுப்பில் செய்யும் போது அடிக்கடி கேக் பதம் வந்து விட்டதா என பார்ப்பது நல்லது.
பாதாம் பருப்பை வறுக்காமல் தோலுடன் அமெரிக்க அங்காடிகளில் விற்கும் food processorல் பொடி செய்து கொள்ளலாம். அதிகம் சூடாகாமல் செய்யவும். இல்லை யெனில் பருப்பில் உள்ள எண்ணெய் பசை வெளிவர ஆரம்பித்து விடுவதால் ஒட்டிக் கொள்ளும்.
கடைகளில் பாதாம் பவுடர் என்று விற்கும். இதை வைத்தும் செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |