கறிவேப்பிலைப்பொடி சாதம்
தேவையான பொருட்கள்

கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
திடீர் புளி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

கறிவேப்பிலையை நன்கு அலம்பித் துடைத்துவிட்டு ஒரு நுண்ணலை அவியனில் (மைக்ரோவேவ் ஓவன்) அதற்கான காகிதத்தில் பரப்பி அவியனை உயர்ந்த திறனில் 3 நிமிடம் வைக்கவும். அப்போது கறிவேப்பிலை நன்கு உலர்ந்து விடும். கருகிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பைப் பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் பெருங்காயம், மிளகாய் வற்றல் போட்டு வறுபட்டதும் எடுத்து ஆறியதும், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் போட்டுப் பொடியாகக்கவும். இதனுடன் புளி, உப்பு சேர்த்து சில வினாடிகள் மிக்ஸியை ஓட்டவும்.

இந்தக் கறிவேப்பிலைப் பொடியை சாதத்துடன் சேர்த்து, தேவையான நல்லெண்ணெயும் சேர்த்து நன்றாகக் கலந்து கடுகு தாளித்துக் கொட்டி கலந்து எடுத்து வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com