இந்தியாவில் கணினி சார்ந்த துறைகளில் சில வருடங்களாக இருந்த தேக்கநிலை சென்ற வருட நடுவில் இருந்து மாற ஆரம்பித்தது. இது நிலைக்குமா என்ற பயமிருந்தாலும் எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். இதன் நடுவில் அமெரிக்காவின் அரசியல் கட்டாயங்களால், outsourcing பற்றிய சிக்கல்கள் பெரிதாகின. இந்தியத் தேர்தல், மற்றும் அதையொட்டிய பங்குச்சந்தையின் தள்ளாட்டம் எனப் பல செய்திகள் அனைவரது கவனத்திலும் இருந்தன.
அமைதியாக ஆனால் அழுத்தமாக எல்லா மென்பொருள் நிறுவனங்களும் முன்னேறியுள்ளன. இதை நான் வரவு செலவுக் கணக்கில் சொல்லவில்லை. வேலை வாய்ப்புக் கணக்கில் சொல்லுகிறேன். சில ஆண்டுகளாக மிகவும் குறைந்திருந்த நிலை மாறி, ஆயிரக் கணக்கில் புதிதாகக் கல்லூரிகளில் இருந்து வெளிவந்த பொறியியல் துறை மாணவர்களை வேலைக்கு எடுத்துள்ளார்கள். மேலும் அவர்களையும் ஏற்க்னவே வேலையில் உள்ளோரையும் பயில்விக்கும் பொருட்டுப் பெருமளவில் முதலீடு செய்யவாரம்பித்துள்ளன இந்நிறுவனங்கள். உதாரணமாக, இன்·போசிஸ் 260 கோடி செலவில் மைசூரில் 4000 பேர் ஒரே சமயத்தில் பயிலும் வசதியுடைய ஒரு பயிற்சிக் கூடத்தை நிறுவுகிறது. விப்ரோ (Wipro) தனது நிறுவனத்திலுள்ள அனைவரும் 5% நேரத்தைப் பயிற்சியில் கழிப்பார்கள் என அறிவித்திருக்கிறது.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் இத்துறை முன்னேறுகிறது - வாழ்க! இந்தியா இத்துறைகளில் வளர்ந்தால், அமெரிக்கப் பொருளாதாரம் மோசமடையும் என்ற பிரசாரம் தொடர்ந்து நடக்கிறது; தேர்தல் முடியும்வரை நடக்கும் எனத் தோன்றுகிறது. பல்வேறு வலைத் தளங்களிலும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் இரு தரப்பு வாதங்களும் தொடர்ந்து நடக்கின்றன. விவாதம் மிக நல்லது. இருசாராரும் பிறரது நிலையையும் அவர்களது பிரச்சினைகளையும் உணர்ந்தால் தெளிவும் அமைதியும் பிறக்கும். முக்கியமாக அரசியல்வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியின் பயன் குறையும். அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி (ஏன் உலகெங்கிலும்) 'நமது சிக்கல்களுக்குக் காரணம் இன்னார்தான் என்று வேறு ஒரு இனம், மொழி, நாடு, சாதி, மதம் சார்ந்தோரைக் காட்டி குழப்பமூட்டிப் பிரித்து வைப்பது; அப்படிக் கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது' என்ற நிலை அடையாளங்காணப்பட்டு ஒதுக்கப் படவேண்டும்.
அனைவருக்கும் தென்றல் சார்பாக சுதந்திரதின வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம். பி. அசோகன் ஜூலை 2004 |