ஜூலை 24, 2004 அன்று வர்ஜினியாவில் உள்ள சேன்டிலி உயர் நிலைப்பள்ளியில் 'OPEN' (Organization to Provide EducatioN) சேவை நிறுவனமும், 'ரசிகா' இசைக்குழுவும் இணைந்து ஓர் இன்னிசை நிகழ்ச்சியை நடத்தினர்.
அன்றாட உணவுக்கே இல்லாத அவலத்தில், நாளை என்ற நம்பிக்கையில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருண்டு தமிழகத்தில். அடிப்படை வசதிகள் இன்றி ஆயிரம் பள்ளிகள் உண்டு. அவற்றைச் சீரமைக்கவே 'OPEN' நிறுவனம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவாழ் தமிழ் மக்களின் நன்கொடை மூலமாகத் தமிழ்நாட்டில் இருக்கும் பல பள்ளிகள் இந்த நிறுவனத்தின் வாயிலாக அடிப்படை வசதிகள் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு நிதிவசூல் செய்யும்பொருட்டு 'ரசிகா' என்ற பிரபல இசைக்குழு தேனிசை வழங்க நானூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஜெர்மனியின் செந்தேன் மலரையும் பன்னீர் புஷ்பங்களின் பூந்தளிராடவும் ஊரு சனத்தை மயக்க, உயிரின் உயிரே என்று மன்மதராசா கொஞ்ச, கால்கள் தாளமிட அரங்கமே கோலாகலம் பூண்டது. அஸ்வின் வழங்கிய பலகுரல் நிகழ்ச்சி மேலும் கலப்பூட்டியது.
பல வருடங்களாக இயங்கி வரும் 'OPEN' நிறுவனம் கட்டடம் கட்டித்தருதல், கூரை வேய்தல், கழிப்பறை கட்டுதல், வகுப்பறைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல் போன்ற சேவைகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சேவை நோக்கை முன்னிட்டு 'ரசிகா' இலவசமாய் இந்த நிகழ்ச்சியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சிறு துளி பெரு வெள்ளமன்றோ. இந்த நிறுவனத்திற்கு நிதி வழங்க விரும்புவோர் www.openindia.org என்ற வலைதளத்தில் மேலும் விவரங்களைப் பெறலாம். நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு. |