ஆகஸ்டு 14, 2004 அன்று மீரா ஸ்ரீராமின் பரதநாட்டிய அரங்கேற்றம் இல்லினாயிலுள்ள டௌனர்ஸ் குரோவ் நார்த் உயர்நிலைப்பள்ளியில் நடந்தேறியது. குரு சுதா ஸ்ரீனிவாசனின் 25-வது அரங்கேற்றமாகும் இது. அவரது அனுபவமும் ஆற்றலும் மீராவின் நடனத்தில் நன்கு பளிச்சிட்டது.
இறைவணக்கம் மற்றும் கணேச கவுத்துவத்திற்குப் பின் வந்தது மீராவின் நாட்டை ராகப் பாடலுக்கான அலாரிப்பு. ஹேமாவதியில் ஜதிஸ்வரம், நாட்டக்குறிஞ்சியில் வர்ணம் என்று விறுவிறுப்பாக முன்னேறியது நிகழ்ச்சி. வர்ணத்தில் சிவபெருமானை விரைந்து வர அழைத்தாரென்றால் அடுத்துவந்த காபி ராக 'சின்னச் சின்ன பாதம்' பாடலுக்கு யசோதையையும் கிருஷ்ணனையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார். அமைதியும் பக்தியுமாக உருகவைத்தது ரேவதிராக 'போ சம்போ'வின் அபிநயம். அடுத்து ஆண்டாள் உருவில் வந்த மீரா ராகமாலிகையில் திருப்பாவைக்குப் பதம்பிடித்தார். கதனகுதூகலத்தில் அமைந்த தில்லானா பார்ப்போரைப் பரவசப்படுத்திய நிலையில், மங்களத்தோடு நிகழ்ச்சி நிறைவெய்தியது.
குரு சுதா ஸ்ரீனிவாசநனின் நட்டுவாங்கம், விஜயலக்ஷ்மி வேணுகோபாலின் குரலிசை, பி.கே. ஸ்ரீனிவாசனின் மிருதங்கம், ராமன் கல்யாணின் புல்லாங்குழல் மற்றும் மஞ்சுளா ராவின் வயலின் ஆகியவை நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.
மீராவின் திறமையும், சளைக்காமல் புன்னகையோடு ஆடும் அர்ப்பணிப்பும் அவருக்கு வயது 14தான் என்பதை மறக்கடிக்கிறது. நேப்பர்வில்லின் (இல்.) உமா மற்றும் வெங்கட் ஸ்ரீராம் தம்பதிகளின் மகளான மீரா 1998 முதல் பரதநாட்டியம் பயில்கிறார். |