ஆகஸ்டு 15, 2004 அன்று 'இந்தியா நாள்-2004' ஐ.எல்.ஏ.வின் (India Leage of America) ஆதரவில் மிச்சிகன் வாழ் இந்தியர்களை ஒருங்கிணைக்கும் நோக்கோடு கொண்டாடப்பட்டது. நோவி எக்ஸ்போ மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிச்சிகன் மற்றும் அண்மையிலிருக்கும் மாநிலங்களிலிருந்து சுமார் 17,000க்கும் மேற்பட்ட இந்தியர்களை ஈர்த்தது. சுதந்திர ஊர்வலம், பல்கலாசார, பன்மாநில அணிவகுப்பு ஆகியவை வந்தோர் கண்களுக்கு விருந்தானது. எல்லா இந்தியப் பேரவைகளும் அணிவகுப்பில் பங்கேற்றன.
இதே சந்தர்ப்பத்தில் 'மிச்சிகன் இந்தியா' என்ற மிச்சிகனின் முதல் சமுதாயச் செய்தித்தாளும் வெளியிடப்பட்டது. இவ்விழாவுக்கான 50 பேர் கொண்ட குழு டாக்டர் ஹனுமையா பண்ட்லா, ரமேஷ் பட்டேல் மற்றுக் பெர்ரி மேத்தா ஆகியோரின் நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்பட்டது. இவ்விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்னதாக இந்திய வம்சாவளி அமெரிக்கப் பொறியியலார் சங்கத்தின் (American Society of Engineers of Indian Origin) 21-வது வருடாந்திரக் கூட்டத்தின் உச்சமாக அரங்கேறியது. அமெரிக்காவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் சுமார் 100 வணிகநிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களையும், சேவைகளையும் இங்கே பார்வைக்கு வைத்தனர். இதில் இந்திய நகைகள், உணவு, வழிபாட்டு சாதனங்கள், சுற்றுலாத் திட்டங்கள், டி.வி. நெட்வொர்க் ஆகியவை அடங்கும்.
பொதுச்சேவை நிறுவனங்களான ASHA for Education, SPREAD ஆகியவையும் தமது நோக்கங்களை இங்கே வந்திருந்தோருக்கு அறிமுகப்படுத்தின. கலைநிகழ்ச்சிகளுக்கும் கேளிக்கைகளுக்கும் பஞ்சமே இருக்கவில்லை.
இங்கே வந்திருந்தவர்களில் மிச்சிகன் மாநில செனட்டர் கில்டா ஜேக்கப்ஸ், காங்கிரஸ்மேன் ஜான் லெவின், மிச்சிகன் மாநில டெமாக்ரட்டிக் வேட்பாளர் மைக்கேல் ஷ்வார்ட்ஸ், மிச்சிகன் ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஆணையர் ரமேஷ் வர்மா, ஜெனரல் இந்தர்ஜித் ரேக்கி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்களைக் கவுரவிக்கும் விருந்து விழாவின் முத்தாய்ப்பாக அமைந்தது.
அரவிந்த் கே. ரமேஷ் |