எனது மகத்தான லட்சியம் மனிதரை ஒன்றிணைத்தல்
டாக்டர் பிரபாகர் ராகவன்
தலைவர், யாஹு ஆராய்ச்சிப் பிரிவு

எனக்குக் கேள்வி மட்டுந்தான் கேட்கத் தெரியும் என்று சொல்லும் தருமி ஆனாலும் சரி, மூச்சு விடாமல் பதில் சொல்வதில் திறமைகொண்ட முக்கண் முதல்வராக இருந்தாலும் சரி, உங்களுக்கு 'யாஹு ஆன்சர்ஸ்' (yahoo.answers.com) பிடிக்கும். உலகெங்கிலும் இருந்து யாரும் எந்தக் கேள்வியும் கேட்கலாம், விடை தரலாம் என்பதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய முயற்சியின் பின்னணியில் இருப்பவர் ஒரு தமிழர் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். வாருங்கள் சந்திக்கலாம் டாக்டர் பிரபாகர் ராகவனை.

பாண்டிச்சேரியில் பிறந்த ராகவனின் உறவினர்களில் பலர் கணிதத்திலும், பெளதிகத்திலும் பி.ஹெச்டி பட்டம் வாங்கியவர்கள்; தந்தை ஒரு மின்சாரப் பொறியாளர், தாய் பெளதீக ஆசிரியை. தமிழகத்துக்கு வெளியே வளர்ந்த ராகவனுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. 'என் மனைவியும் குழந்தைகளும் தென்றலில் வரும் எனது நேர்காணலை வாசித்துக் காண்பிப்பார்கள்' என்கிறார் ராகவன் உற்சாகமாக. டாக்டர் ராகவன் தற்போது 'Introduction to information retrieval' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். அதுபற்றிய விவரங்களைக் கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம்:
http://www-csli.stanford.edu/~schuetze/information-retrieval-book.html

கே: உங்களுக்கு 'தென்றல்' பத்திரிகையைத் தெரியுமா?

ப: பார்த்திருக்கிறேன். பலரும் விரும்பிப் படிக்கிற பத்திரிகை என்பதை அறிவேன்.

கே: உங்களது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்...

ப: நான் பிறந்தது பாண்டிச்சேரியில். நம் நாடு சுதந்திரம் அடைந்த பின் நான் பிறந்திருந்தாலும், எனது பிறப்புச் சான்றிதழ் பிரெஞ்சு மொழியில் தான் இருக்கும். நான் சிறுவனாக இருந்த பொழுது மூன்று வருடங்கள் இங்கிலாந்தில் இருந்தேன். பின் இந்தியாவில் உள்ள போபாலிலும், ஹைதாராபாதிலும் என் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தேன்.

பின்னர் ஆங்கில இலக்கியத்தில் பட்டக் கல்வி கற்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். எனது உறவினர்கள் அந்த முடிவை அவ்வளவாக வரவேற்க வில்லை. ஆங்கில இலக்கியத்தின் மேல் எப்போதும் எனக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. குறிப்பாக, 19ஆம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஐ.ஐ.டியில் சேருவதற் கான நுழைவுத்தேர்வு எழுதி அதில் வெற்றிபெற்று, எலக்ட்ரிகல் (low current) பாடப் பிரிவில் சேர்ந்தேன். ஐ.ஐ.டி.யில் படிக்கும் காலத்தில் பல கருத்தரங்குகளிலும், பல்வேறு பட்ட விளையாட்டுப் போட்டிகளிலும் (Inter-IITஇல்) கலந்துகொண்டேன். இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த பொழுது எனது பேராசிரியர் அமெரிக்காவி லிருந்து மீட் மற்றும் கான்வே எழுதிய 'An introduction to VLSI systems' என்ற புத்தகத்தைத் திறனாய்வு செய்வதற்காகக் கொண்டு வந்திருந்தார். அந்த புத்தகம் சில்லு (Chip) வடிவமைப்பில் ஓர் ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அந்த ஆர்வத்தால் உந்தப்பட்டு நான் ஒரு சிப் வடிவமைப்பது பற்றி எனக்கு இருந்த கருத்துக்களை எழுதி பெர்க்லியில் உள்ள இரண்டு பேராசிரியர் களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதைப் படித்து பார்த்து விட்டு டாக்டர். டேவ் பேட்டர்ஸன் என்ற பேராசிரியர், மிகவும் வியந்து பாராட்டி “இந்தச் சிப் வடிவமைப்பை நீங்கள் (fabricate) உண்டாக்கி இருக்கிறீர்களா?” என்று கேட்டு பதில் அனுப்பி இருந்தார். அந்தப் பாராட்டு எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்ததோடு, பெர்க்லியில் உள்ள கலி·போர்னியா பல்கலைகழகத்தில் சேர்ந்து எலக்ட்ரிகல் இஞ்ஜினியரிங் படிக்க அழைத்துச் சென்றது. சிப் வடிவமைப்பில் ஈடுபாடு கொண்டிருந்த எனக்கு அப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவ் ஹேன்டர்ஸன், ஸ்டான்·போர்ட் (Stanford) பேராசிரியர் ஜான் ஹென்னிஸி ஆகியோருடன் பணியாற்றும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. பி.ஹெச்.டி.யை முடிக்கும் முன்பே கணினித் துறையில் எனக்கு ஈர்ப்பு அதிகம் இருந்ததை உணர்ந்தேன். பெர்க்லியில், கணினித்துறை மிக மேம்பட்ட துறையாக இருந்தது. கடினமான அடிப்படை நுணுக்கங்கள் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்று நான் நம்பினேன். அதுமட்டுமல்ல, எப்படிப்பட்ட சவால்களுக்கும், கணிதமுறையில் விடை காணக் கணினித் தொழில்நுட்பம் உதவும் என்பதே என் அழுத்தமான கருத்து.

கே: பிஹெச்.டி. பெற வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

ப: ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தாமாகத் துளிர்க்கக்கூடிய எண்ணங்கள் உண்டல்லவா? அப்படித்தான், என்னுள்ளும் பிஹெச்.டி. பெறவேண்டும் என்று தோன்றியது. என் குடும்பத்திலேயே பி.ஹெச்டி. பெற்றவர்கள் பலர் இருந்தது கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கே: இங்கு படித்த பலருக்கு எப்பொதும் எற்படும் குழப்பம் தொழில்துறையில் வேலைக்குச் சேர்வதா, சொந்தத் தொழில் தொடங்குவதா, பல்கலைகழகத்தில் வேலையா என்பதுதான். உங்களுக்கும் இப்படித் தோன்றியதுண்டா?

ப: அவரவர்க்கான வழி தனியானது. அதை அவரவர்தாம் தீர்மானிக்க வேண்டும். எதைச் செய்தாலும், இதனால் உலகத்துக்கு என்ன பயன் என்று யோசிப்பதுதான் முக்கியம் என்று எனக்குத் தோன்றுகிறது. இதைப்பற்றி நான் எப்போதும் என் மாணவர்களிடம் பேசுவதுண்டு. உனது அஸ்திவாரம் வலுவானதாக இருந்தால், தொழில்நுட்பம் எவ்வளவு பரிணமித்தாலும் நீ அதற்கேற்ப மாறமுடியும். ஒரே ஒரு கணினி மொழியை அல்லது ஒரே தொழிநுட்பத்தைக் கட்டிக்கொண்டு தொங்கினால் மறுபடியும் ஆரம்பத்தி லிருந்து தொடங்க வேண்டியது தான்.

கே: உங்கள் குடும்பத்தை பற்றி...

ப: பெர்க்லி பல்கலைகழகத்தை விட்டு வெளியேறும் சமயத்தில் ஸ்ரீலதாவை மணமுடித்தேன். எங்களுக்கு, மேகா என்ற 15 வயது மகளும், மனீஷ் என்ற 10 வயது மகனும் உள்ளார்கள். இருவருக்குமே பயணம் செய்ய ரொம்ப பிடிக்கும். ஒவ்வோராண்டிலும் மூன்றுமுறை எங்காவது சுற்றிப் பார்க்கப் போவோம். ஆண்டுக்கொருமுறை இந்தியாவுக் குச் செல்வோம். என்னைப் போலவே மேகாவுக்கும் குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு விடைகாணப் பிடிக்கும். ஜப்பானிய, ஜெர்மானிய மொழிகளை நான் கற்றிருக் கிறேன். என் மகளும் என்னைப் போலவே மகன் மனீஷ் வயலின் வாசிப்பது (சுஸ¤கி மற்றும் கர்னாடக இசை), சாக்கர், பேச்சுப் போட்டிகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டுள்ளான்.

கே: 'Randomized Algorithms' புத்தகம் உருவானது பற்றி...

ப: முனைவர் பட்டம் பெற்றவுடன் கல்வித்துறையில் பணிதொடர எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், ஐ.பி.எம். டி.ஜே. வாட்ஸன் ஆய்வுக்கூடத்திலிருந்து எனக்குச் சரமாரியாக அழைப்புகள் வந்து கொண்டி ருந்தன. பெர்க்லியில் கிடைத்த அறிவை ஆக்கபூர்வமாக இங்கே பயன்படுத்தலாம் என்று எண்ணினேன். IBM-இல் பணி செய்யும் சமயத்தில் யேல் பல்கலைக் கழகத்திலும் பகுதிநேரம் Randomized Algorithms பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அதையே மேலும் புத்தக வடிவில் கொண்டு வந்தால் எல்லொரும் பயன் அடைவார்கள் எனத் தோன்றியது. 'Randomized Algorithms' என்ற புத்தகத்தை எழுதினேன். இந்தத் துறையில் வெளிவந்த முதல் புத்தகம் இது. இன்னமும் உலகெங்கிலும் பல பல்கலைக் கழகங்களில் பாடநூலாக இருக்கிறது.

கே: யாஹுவில் உங்கள் பணி ஆரம்பமாவதற்கு முன்பு ...

ப: சுமார் 9 ஆண்டுகள் டி.ஜே. வாட்ஸனில் பணிபுரிந்தபின், மேற்கு நோக்கி இடம்பெயர முடிவெடுத்து, ஐ.பி.எம்.மின் அல்மடென் ஆய்வுக்கூடத்தில் சேர்ந்தேன்.அங்கே பணிபுரிந்தபடியே, ஸ்டான்·போர்ட் பல்கலைக் கழகத்தில் வலைத்தேடல் மற்றும் உரை அகழ்தல் (web search, text mining) பாடங்களில் வகுப்புகள் எடுத்தேன். இன்றளவும் அந்த வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். அல்மடெனில் வெப் ·பவுன்டேஷன் க்ரூப்பை (web foundation group) நிறுவினேன். 2000-ம் ஆண்டு, ஐ.பி.எம். அல்மெடனிலிருந்து வெரிட்டி (Verity) நிறுவனத்தில் முதன்மைத் தொழில் நுட்ப அதிகாரி (Chief Technology Officer)யாக பதவி ஏற்றேன்.

கே: வெரிட்டி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?

ப: நல்ல கேள்வி. அப்போது வலைத்தேடல் (search) பற்றிய ஆய்வில் முழுகியிருந்தேன். ஐ.பி.எம்.மோ ஒரு மென்பொருள் குழுமம். அவர்களுக்கு தேடலில் அதிக நாட்டமில்லை. எனவே தேடல் குழுமங்களின் மீது என் பார்வையைத் திருப்பினேன். என் கண் களுக்கு இரண்டு பிரிவுகளாகப் பெயர்கள் தென்பட்டன: வலைத்தேடல் சார்ந்த ஆல்டாவிஸ்டா, இன்·போசீக், கூகிள் போன்றவை ஒரு பக்கம். மறுபக்கம் Enterprise (Search) தேடல் குழுமங்கள். வலைத்தேடல் கம்பெனிகள் வருவாய்க்கான வழிகளை அறிந்திருக்கவில்லை. Enterprise தேடல் குழுமங்கள் அறிந்திருந்தன. அப்போது வெரிட்டி இதில் முன்னணியில் இருந்தது. எனவே அதில் சேரத் தீர்மானித்தேன். என்னை முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரியாக எடுத்துக்கொண்டது எனது அதிர்ஷ்டமே. கம்பெனி நிர்வாகத்தின் உயர்நிலையில், அத்தோடு வரும் அனுபவம், துன்பங்கள் இவற்றோடு, பரிச்சயம் பெற எனக்கு அது உதவிற்று.

கே: நீங்கள் யாஹுவுக்கு மாறியது பற்றி...

ப: ஐந்து ஆண்டுகள் வெரிட்டி அனுபவத்துக்குப் பிறகு யாஹுவின் ஆய்வுத்துறைத் தலைவராகப் பொறுப் பேற்றேன். கூகிளைப் பின்பற்ற முயல்வது யாஹுவுக்குக் குறுகிய காலப் பயனையே தரும் என்று உணர்ந்து, அதற்குப் பதிலாக, யாஹ¤ பயனாளரைக் கூர்ந்து கவனித்து, அதிலிருந்து வருமானத்தை ஏற்படுத்த எண்ணினேன். சரியாகச் சொன்னால், யாஹுவைப் பயன்படுத்துவோரே அதிகம். சராசரியாக 12 வலைப்பக்கங்கள் பார்க்கப் பட்டால், ஒரு பக்கம் நிச்சயம் யாஹு வுடையது! நான்கைந்து முக்கியமான இணையத் தொழில்நுட்பங்களில் ஈடுபாடு கொண்டதொரு நிறுவனத்தை நான் தேடினேன். யாஹு கிடைத்தது.

கே: கணினியைப் பயன்படுத்தித் தேடும் ஒருவர் யாஹு/கூகிள் எதன்மூலம் தேடினாலும் அவருக்கு நிறையத் தகவல் கிடைக்கப் போகிறது. அப்படியிருக்க, இப்போது இல்லாத எதைத் தருவதற்கு யாஹுவில் நீங்கள் ஆராய்ச்சி செய்கிறீர்கள்?

ப: நியாயமான கேள்வி. ஒரு பாமரர் தனது தேடலில் இரண்டு வகையானவற்றைப் பெறுகிறார். ஒன்று: உங்கள் கேள்வி (query) எதுவோ அதுகுறித்த பல ஆவணங்கள் கிடைக்கும். இரண்டு: விளம்பதாரர் கொடுத்த சுட்டிகளும் விளம்பரங்களும் கிடைக்கும். அவை நீங்கள் தேடும் பொருள் குறித்தவை யாகவே இருக்கும். இரண்டாவதை 'brand marketing' என்று சொல்வோம். உதாரணமாக, திருப்பித் திருப்பி பானாசோனிக் டி.வி. என்ற பெயரையே பார்த்துக் கொண்டிருப்பவருக்கு, அந்தப் பெயர் மனதில் பதிந்துவிடுகிறது. பின்னர் அவர் டி.வி. வாங்கப் போனால் அவரைப் பானாசோனிக் என்ற பெயர் ஈர்க்கிறது. ஆக, நான் வணிகப்பெயர் விழிப்புணர்வை (பிராண்ட் அவேர்னஸ்) எவ்வளவு அதிகரித்திருக்கிறேன் என்பதை அளக்க இயலும். நீங்கள் யாஹுவின் மின்னஞ்சல், ஆட்டோஸ், ·பினான்ஸ் என்ற எந்தப் பிரிவுக்குப் போனாலும் அங்கே அது தொடர்பான வணிக விளம்பரங்களைப் பார்க்கலாம். அந்த வகையில் யாஹு இன்றைக்கு முன்னணியில் உள்ளது.

கே: முன்னாட்களில் தேடல் விரைவாக இருந்தது ஆனால் துல்லியமாக இல்லை என்று நீங்கள் கூறினீர்கள். நான் யாஹுவைப் பயன்படுத்தினால் எனக்குச் சிறந்த விடை கிடைக்குமா?

ப: முதலில், உங்கள் கேள்வியைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டும். 'சிறந்த விடை' என்று கூறினீர்கள். 'என் கேள்விக்கான சிறந்த ஆவணம்' என்று சொல்லவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. அது மிக முக்கியமான வித்தியாசம். கூகிள் அல்லது யாஹு தேடலில் உங்கள் கேள்விக்கு நிறைய ஆவணங்கள் பதிலாகக் கிடைக்கின்றன. அந்த ஆவணங்களில் உங்களுக்கான தகவல் இருக்கிறது. அந்தத் தகவல் தேடலுக்குச் சரியான கேள்வியை நீங்கள் தராவிட்டால் சரியான விடைகள் வரமாட்டா. உங்களுக்குத் தேவைப்படும் ஆவணம் கிடைக்காது.

தனது தேவைக்கேற்ற கேள்வியைக் கேட்பதில் ஒரு சாதாரண மனிதனுக்குச் சிரமம் இருக்கிறது. இந்த வகையில் யாஹுவின் Social Search ஒரு சுவையான முன்னோடி ஆகும். இதில் நீங்கள் வலைத் தேடலோடு நிற்காமல், சமுதாயத்தின் முன்னர் உங்கள் கேள்வியை வைக்கிறீர்கள். அவர்களிடமிருந்து விடைகளைப் பெறுகிறீர்கள்.

கே: என் கேள்விக்கு ஏன் யாரேனும் பதில் சொல்ல வேண்டும்? யாருமே விடை தராவிட்டால்...

ப: உண்மையில் தமது ஞானத்தைப் பகிர்ந்துகொள்ளவே மக்கள் விரும்பு கிறார்கள். ஒருவர் மற்றவரின் கேள்வி களுக்குப் பதிலளிக்கப் போட்டிபோட்டுக் கொண்டு வருகிறார்கள். அவ்வாறு பதில ளித்து, மற்றவர்கள் அவரை அத்துறையில் மேதை என்று நினைக்கும்போது அதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது. அதைத் தவிர அவர்களுக்கு நாங்கள் புள்ளிகள் தரவும் வழிமுறை செய்திருக்கிறோம். அவ்வாறு நிறையப் புள்ளிகளைச் சம்பாதித்தவர் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மேதை ஆகிறார். யாஹு! ஆன்சர்ஸில் (answers. yahoo.com) அதுதான் நடக்கிறது. அது வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

கே: யாஹு! ஆன்சர்ஸ் மற்றும் ask.com இவை இரண்டுக்கும் இடையே என்ன வேறுபாடு?

ப: ask.com முயற்சி செய்து கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டது என்னவென்றால், அவர்களது வல்லுனர்கள்/ஆசிரியர்களே விடைகளைத் தயாரித்து, வரும் கேள்வி களுக்கேற்பத் தருவதுதான். யாஹு! ஆன்சர்ஸில் இது ஒரு சமுதாயம். மற்றவர் களிடமிருந்து யாஹுவை மாறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால் இது சமுதாயத் தையும் மக்களையும் சார்ந்த முயற்சி. எப்படிச் சமுதாயத்துக்கு ஊட்டம் கொடுத்து வலுப்படுத் தலாம் என்பதைப்பற்றி நாங்கள் சிந்தித்த வண்ணமே இருக்கிறோம். புதிய சமுதாயங் களை உருவாக்க விரும்புகிறோம், அது எங்களுடனான பயனர் தொடர்பை வலுப் படுத்துகிறது. மக்கள் எவற்றின் மீது அக்கறை கொண்டுள்ளார்களோ அவற்றுடன் தொடர்பு ஏற்படுத்துவதுதான் யாஹுவின் லட்சியம்.

கே: எல்லோரும் உங்களை கூகிளுடன் ஒப்பிடுகிறார்களே...

ப: ஒப்பீடு என்பது தவிர்க்க முடியாதது. உலகம் எல்லாவற்றையும் குழுக்களாகப் பிரித்துவிடுகிறது. அப்போது எங்களையும் ஒரு குழுவில் போட்டுப் பேசுவது எளிதாகிறது. தேடலிலும், அதன்மூலம் வருமானம் பெறுவதிலும் கூகிள் இன்றைக்கு முன்னணி யில் உள்ளது. நான் சொன்னதுபோல, வணிகச்சின்ன விளம்பரத்தில் நாங்கள் எங்கள் பங்கைத் தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறோம். தேடலுக்கும், தேடல் விளம்பரத்துக்குமான இடைவெளியைக் குறைப்பதில் நாங்கள் முனைந்து நிற்கிறோம். கூகிள் இதில் முன்னால் இருக்கிறது. அதற்காக நாங்கள் கூகிளைப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது எங்களுக்கே தீமை செய்யும். அதைவிடப் பெரிதாக நாங்கள் ஏதேனும் செய்ய வேண்டும். யாஹு மெஸஞ்சரில் தொடங்கி யாஹு ஆன்சர்ஸ் வரையிலுமான பெரிய வெற்றி களைப் பாருங்கள். அவை தேடல் என்பதற்கும் அப்பாற்பட்டவை. ஓரடி பின்னால் நின்று நாம் செய்வதைப் பார்க்க வேண்டும். நாம் பயனர்களைத் திரட்டி அவர்களை வருமானமாக்க வேண்டும். இணையத்தின் மிகமிக அதிகமான பயனர்கள் எம்முடன் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் சுமார் 500 மில்லியன் பேர். அமெரிக்காவில் பார்க்கப்படும் ஒவ்வொரு 12 பக்கங்களிலும் 1 பக்கம் யாஹுவுடையதாக இருக்கிறது. ஆகவே, பயனர்கள் இருக்கின்றனர், அவர்களைப் பணமாக்க வேண்டும். இந்த இடைவெளி யைத் தான் நாங்கள் நிரப்ப முயற்சிக்கிறோம்.

கூகிள் என்னும் ஊடகப்பொறியின் வருமான உத்திகள் என்ன என்பதை யோசிக்கக் கூடாது. கூகிள் என்னும் தேடுபொறியால் செய்ய முடியாத எதைச் செய்தால் நாமும் இந்த இடைவெளியை நிரப்பலாம் என்று கேட்க வேண்டும்.

கே: உங்கள் யாஹு ஆராய்ச்சி, இன்றிலிருந்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மக்களுடைய வாழ்க்கையில் என்ன மாறுதலைக் கொண்டு வந்திருக்கும்?

ப: இணையத்தின் அடிப்படையாக அமைந்த அறிவியல்களை ஆராய்வதே எங்கள் நோக்கம். தேடுகருவியை (search tool) கட்டமைப்பது மட்டுமே எங்கள் வேலையல்ல. ஒர் பொருளாதாரக் குழுவை நாங்கள் அமைத்துள்ளோம்—தொழில்நுட்பக் கம்பெனிக்கு இது அரிதான செயல். இதற்காகச் சிறந்த பொருளியல் அறிஞர் களைப் பணியமர்த்தி இருக்கிறோம். ஹார்வார்ட் பேராசிரியரான மைக்கேல் ஷ்வார்ட்ஸை நாங்கள் பணியமர்த்தப் போகிறோம். பொருளியல், மானுடவியல், சமூகவியல் அறிஞர்கள் எங்களோடு சேரப்போகிறார்கள். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு ஏலமிடும் தளத்தில் எப்படி விலையை நிர்ணயிப்பது? இந்தக் கேள்வி பொருளாதாரம் குறித்தது. இதற்குப் பொறியியலாளர் பதில் சொல்ல முடியாது. எனவேதான் பொருளியலறிஞர் இங்கே வருகிறார். யாஹு ஆன்சர்ஸ் பிரிவில் ஒரு கேள்விக்குப் பலர் விடையளிக்கிறார்கள். அதற்கு அவர்களுக்குக் கொடுக்கப்படும் புள்ளிகள் நாணயம் போன்றவை. அப்படியானால், அங்கிருக்கும் சமுதாயத்தைப் போஷித்து மீண்டும் மீண்டும் வரும்படியாகச் செய்வதற் கான பொருளாதார மதிப்பீட்டு முறை எது? நீங்கள் தோட்டத் துறை அல்லது ஒயின் களைப் பற்றிய அறிஞராக இருக்கலாம். சமுதாயம் அந்த அறிவை உங்களிடமிருந்து வடித்துப் பெற என்ன வழி? இவையெல்லாம் பொருளாதாரம் சார்ந்த கேள்விகள். யாஹு ஆராய்ச்சித் துறையின் செயல்கள் எப்படி இணையத்திலும் சந்தைப்படுத்தலிலும் பரவலாகத் தாக்கம் செலுத்தும் என்பதற்கு இவை சில உதாரணங்கள்.

யாஹு நிர்வாகத்தின்முன் நான் ஐந்து விஷயங்களை முக்கியமானது எனக் கூறினேன். எனது நேர்காணலில், இந்த ஐந்து அம்சங்களிலும் அக்கறை செலுத்தும் நிறுவனம் எனக்கு வேண்டும் என்றேன்:

ஒன்று, நுண்பொருளாதாரம் (Microeconomics) எனக்கு மிக முக்கியமானது.

இரண்டு, இணையத்தேடல் (Search).

மூன்று, எந்திரம் மூலம் கல்வி, புள்ளிவிவர அகழ்வு (Technology, Data Mining).

நான்கு, சமூகக் கட்டமைப்புக்கான செயல்முறை அமைப்புகள் (Specialized Middleware for Community Applications). தொடர்புடைத் தரவு தளங்கள் (relational databases) நிறுவனங்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னால் மிக முக்கிய மானவையாக இருந்தன. இன்றைக்கோ எங்களுக்கு மின்னஞ்சல், மின்குழுக்கள், விடைகள் என்று இவை இன்று முக்கியமானவையாகத் தெரிகின்றன. இத்தகைய சமூகச் செயல்முறைத் தேவைகள் வித்தியாசமானவை.

ஐந்தாவதும் இறுதியானதுமான கருத்து மிக அவசியமானது. எங்களது கம்பெனி இரண்டு வகைகளில் செயல்படுகிறது. முதலில் நாங்கள் வாடிக்கையாளர்களை ஒன்று சேர்க்கிறோம். இரண்டாவதாக, அதை வருமானமாக மாற்றுகிறோம். வாடிக்கையாளர் சேர்க்கை புதிய ஊடக அனுபவங்களைச் சார்ந்தது. அதற்காக அவர்கள் திரும்பத் திரும்ப வரவேண்டும். அப்படி வரவைக்கத்தான் இப்படிப் பல துறை வல்லுனர்களை இங்கே ஒன்று சேர்க்கிறோம். 30 ஆண்டுகளுக்கு முன்னால் ஸெராக்ஸ் பார்க்கில் HCI (human computer interaction) துறையை அமைத்துத் தனியார் கணினியைக் கண்டுபிடித்தனர்.

அப்படி நாங்களும் ஒரு புதிய கல்வித் துறையை உண்டாக்க விரும்புகிறோம். அது மனிதர்கள் கணினியோடு உறவாடுவது பற்றியது அல்ல; இணையம் என்ற ஊடகத் தின் வழியே மனிதர்கள் பிற மனிதர்களோடு உறவாடுவது பற்றியது. எனது இறுதியானதும் பிரம்மாண்டமானதுமான 'ஊடக அனுபவ வடிவமைப்பு' (Media Experience Design) என்பதன் லட்சியம் மனிதரை ஒன்றிணைப்பது.

கே: யாஹுவில் சேரவேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

ப: பெங்களூரிலும், அமெரிக்காவிலும் பலரை யாஹு! பணியமர்த்தி வருகிறது. இணையத்தின் வழியே மக்களுக்குச் சேவை செய்யும் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு யாஹு! ஒரு சரியான தளம். யாஹு!வில் பணியாற்றுவதன் மூலம் பல்லாயிரக் கணக்கான இயந்திரத் தொகுதிகளைக் கையாண்டு, பல டெராபைட் புள்ளிவிவரங் களைப் பார்த்து, இணையத்தின் மிகப்பெரிய வாடிக்கையாளர் கூட்டத்துக்கான செய்முறை களை வடிவமைக்கலாம். 'சிறந்த சிந்தனை யாளர்கள் பலர் யாஹு!வில் இருப்பதால், பலர் கூகிளைவிட எங்களிடம் பணியமரவே விரும்புகிறார்கள். இது ஒரு கனவு அணி. கல்லூரிப் பாடநூலில் பார்த்த பெயர்களான மைக்கேல் ஷ்வார்ட்ஸ் (பொருளாதாரம்), பிரபு ராமகிருஷ்ணன் ஆகியோருடன் பணிசெய்யும் வாய்ப்பு அவ்வளவு எளிதல்ல.

பிரகாஷ¤ம் ஷைலஜாவும் நன்றியும் தங்கள் வாழ்த்துக்களையும் கூறிப் புறப்படும் போது டாக்டர் பிரபாகர் ராகவன் யாஹுவில் அவர்களது நேரம் இனிமையாகக் கழிந்திருக்கும் என்ற நம்பிக்கயைத் தெரிவிக்கிறார்.

நேர்காணல்: பிரகாஷ் ராமமூர்த்தி, ஷைலஜா வெங்கடசுப்ரமணியன்
தமிழாக்கம், தொகுப்பு: மதுரபாரதி
உதவி: நளினி சம்பத்குமார்

© TamilOnline.com