வசந்தி பட் வழங்கும் யோகா பயிலரங்கு
ஹட யோகத்தில் உலக அளவில் பிரசித்தி பெற்ற வசந்தி பட் அவர்கள் அக்டோபர் 2, 2004 அன்று 'ஹட யோகத்தின் ஆழத்தைக் காணுதல்' என்ற தலைப்பிலான ஐந்து மணி நேரப் பயிலரங்கை நடத்துவார். இடம் சான்டா கிளாரா மேரியாட் (Marriott). சன்னிவேல் நகரத்தலைவர் ஜான் ஹோ அவர்கள் சிறப்பு விருந்தினராக இருப்பார். இதில் 3 முதல் 87 வயதுவரையில் உள்ள மாணவர்கள் ஹட யோகத்தின் எளிமை மற்றும் நற்பலன்களைச் செயல்முறையில் விளக்குவர்.

மன-உடல் சமநிலையை யோகம் மூலம் எய்துவதால் அளவற்ற நோய்தீர்ப்புச் சக்தி நமக்கு ஏற்படுகிறது. "இது உடலை முறுக்கும் போட்டி என்றும் இதற்கு அமானுஷ்ய வலிமையும் வளைதன்மையும் வேண்டும் என்பது போன்ற தவறான அபிப்பிராயங்களைத் தகர்க்கும் இந்தப் பயிலரங்கம்" என்கிறார் வசந்தி. இதற்கு வயது ஒரு தடையே இல்லை. சிலிக்கான் பள்ளத்தாக்கின் மிகவுழைக்கும் பொறியியலார் கூடத் தமது நலவாழ்வுக்காக இவரிடம் வந்து தினமும் சில மணித்துளிகள் பயிற்சி எடுத்ததன் மூலம் மன இளக்கம் பெற்றுள்ளனர்.

வருகிற பயிலரங்கின் போது, ஆரோக்கியத்திற்கான ஆசனங்கள், குடும்ப வாழ்வில் ஒத்திசைவு, இயல்பான ரத்த ஓட்டமும் எடைப் பயிற்சியும் மற்றும் ஆன்மீகம் ஆகியவை குறித்து அறிமுகம் கிடைக்கும். மஹாத்மா காந்தியடிகளுக்குச் சமர்ப்பணமாக வரப்போகும் ஒரு முக்கிய அங்கமாக 'தியானமும் வன்முறை தவிர்த்தலும்' என்பது இருக்கும். முன்னணி மருத்துவர்கள் யோகப் பயிற்சியின் நல்விளைவுகளை உடற்கூற்றியலோடு பொருத்திக் காட்டுவர்.

'வசந்த யோகா' அமைப்பை 28 ஆண்டுகளாகத் துவக்கி நடத்திவரும் வசந்தி பட் 13 விழிமங்கள்(video), 2 புத்தகங்கள், 2 குறுந்தகடுகள் (CD) வெளியிட்டுள்ளார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் எண்ணற்ற கருத்தரங்குகள் நடத்தியுள்ளார். யோகாசனம், பிராணாயாமம் மற்றும் தியானத்தை இணைத்துச் செய்வதன் மூலம் உயர்மட்ட நலமும், இளைப்பாறுதலும் பெறுவது எப்படி என்பதை மிகத்திறம்பட இவர் பயிற்றுகிறார். கூப்பர்ட்டினோ, சன்னிவேல் தவிர வளைகுடாப்பகுதியின் பல நிறுவனங்களில் இவரது வகுப்புகள் நடக்கின்றன. 1996-இல் 'பன்னாட்டு யோகா' விருது, 2002 'மனித உறவுகள் விருது' ஆகியவை இவர் பெற்ற சிறப்புகளாகும். தவிர, 2003-இல் அகில உலக அமைதி மாநாட்டில் இவர் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டார்.

'Power Yoga', 'Aerobic Yoga', 'Cardio Yoga' என்ற பெயர்களில் தற்போது அமெரிக்காவெங்கும் நடத்தப்படும் கிளை யோகமுறைகள் மெய்யான ஹட யோகத்தின் ஆன்மீகப் பலன்களை முற்றிலும் ஒதுக்கிவிடுகின்றன. வசந்தி பட் இவற்றை இங்கே அவற்றை மீள்தரவு செய்வார்.

'Exploring the Depth of Hatha Yoga'
நிகழ்ச்சி: 'Exploring the Depth of Hatha Yoga'
நாள்: சனிக்கிழமை, அக்டோபர் 2, முற்பகல் 10:00 - பிற்பகல் 3:00
இடம்: Santa Clara Marriott, 2700 Mission College Blvd., Santa Clara; (408) 988-1500
கட்டணம்: $25 (பெரியோர்); $12 (சிறுவர் மற்றும் முதியோர்) - சிற்றுண்டி உட்பட
மேலும் விவரங்களுக்கு: Vasantha Yoga (408) 257-8418
இணையம்: www.vasanthayoga.com

© TamilOnline.com