சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம்
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்' என்று மகாகவி பாரதியால் புகழப்பட்ட காவியத்தை நாட்டிய நாடகமாக மேடையேற்றவிருக்கின்றனர். கண்ணகி, மாதவி என்ற இரண்டு வலுவான பெண்பாத்திரங்களைச் சித்தரிக்கும் இக்காவியத்திற்கு மேடைவடிவம் அமைத்து, பாடல்களை எழுதியிருக்கிறார் கனிமொழி கருணாநிதி. அவரது பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ.

சேர இளவரசனாகப் பிறந்து பின்னர் துறவறம் பூண்ட இளங்கோ அடிகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதிய இந்தக் காப்பியம் உரைநடை, கவிதை, இசைப்பாடல்கள், உணர்ச்சிமிக்க நாடகப் பாங்கு என்று பல அம்சங்களைத் தன்னில் கொண்டதாகும். கோவலன் என்ற பெருந்தன வணிகன் கண்ணகியை மணந்தாலும், தன் கலையில் சிறந்து 'தலைக்கோல்' பட்டம் பெற்ற மாதவி என்னும் நாடகக் கணிகையுடன் சென்று வசிக்கிறான். கைப்பொருளை இழந்து மீண்டும் கண்ணகியிடம் வருகிறான். புதுவாழ்க்கையைத் தேடி அவர்கள் மதுரை செல்லுகையில் அங்கே திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டுக் கொலையுண்கிறான். அதற்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் கண்ணகி வெகுண்டெழுந்து மதுரை மாநகரைத் தீக்கிரையாக்குகிறாள். அதுமட்டுமல்ல, தன்னால் இந்த அநீதி நடந்ததே என்று வருந்தி உயிர் நீக்கிறான் பாண்டியமன்னன். அதைத் தாளாது உடன் இறக்கிறாள் அவன் துணைவியான கோப்பெருந்தேவி.

கணிகையர் குலத்தில் பிறந்தும் தன் மனதைக் கோவலன் ஒருவனுக்கே கொடுத்து வாழ்ந்தவள் மாதவி. ஆயினும் அவளது அழகும், ஆடற்திறமையும் யாருக்கும் குறைந்தவை அல்ல. கோவலன் இறந்த செய்தி கேட்டு அவள் துறவறம் பூண்டாள் என்பதே அவளது பண்புச் சிறப்பைக் காட்டும். கண்ணகியோ பெருஞ்செல்வக் குடும்பத்தில் பிறந்து, குலமகளுக்குரிய அடக்கமும் பண்புமே அணிகலன்களாக வாழ்ந்தாள். வெறுங்கையோடு கோவலன் திரும்பிவந்தபோதும், "என் சிலம்பு இருக்கிறதே" என்று தானே முன்வந்து அதனை ஒரு புதுத் தொழிலுக்கான மூலதனமாகக் கொடுப்பவளும் அவளேதான். ஆனால் தன் கணவன் அநியாயமாகக் கொலையுண்டான் என்றதும் நாம் பார்ப்பது வேறொரு கண்ணகியை. இவள் பொறுமையே வடிவெடுத்தவளல்ல, அநீதிகண்டு வெகுண்டெழும் எரிமலையாகிவிட்டாள்.

"இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட இந்தக் காவியம் நன்னடத்தை, நேர்மை, சமுதாய, கலாசார மாறுபாடுகளை அரவணைத்துப் போகும் தன்மை எனப் பலவற்றைச் சித்தரிக்கிறது. கலையம்சத்தோடு கூடிய இந்த நாட்டிய நாடகம் நம் காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளது" என்கிறார் வளைகுடாப்பகுதிக்கு 'சிலப்பதிகாரம்' வருவதற்குக் காரணகர்த்தாவான கவிதா கண்ணன்.

"பழங்காப்பியத்தைச் சமகால மொழியில் சொன்னாலும், 'மாசறு பொன்னே', 'தேரா மன்னா' என்பன போன்ற அற்புதச் சொற்றொடர்களை அப்படியே கையாண்டிருக்கிறேன்" என்று விளக்குகிறார் மேடைவடிவம் தந்து பாடல்களும் எழுதியுள்ள கனிமொழி.

"புதுமையான பாணியில் தொன்மையான காப்பியத்தைத் தருவது எளிதான காரியம் அல்ல. இளங்கோ அடிகளின் மனதை உணர்ந்து, நமது கலாசாரப் பண்பாட்டுக் கூறுகளில் ஊறித்திளைத்த கலைஞர்களின் மொத்தப் படைப்பாகும் இந் நாடகம்" என்கிறார் இதன் தயாரிப்பாளர் உமா கணேசன்.

"கதையைத் திரும்பத் திரும்பப் படித்தேன்" என்கிறார் இசையமைத்துள்ள பாம்பே ஜெயஸ்ரீ. "இதில் வருவது சற்றே கடினமான தமிழ்தான். ஆனாலும் பாத்திரங்களையும், அவர்களது உணர்வுகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப இராகங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்." கண்ணகி வெட்டுண்ட கோவலனின் உடலைக் கண்டவுடன் கொள்ளும் அதிர்ச்சி, பின் அதிலிருந்து விடுபட்டு ஏற்படும் விரக்தி, தொடர்ந்து வரும் பெருங்கோபம் என்று இந்த உணர்ச்சிப் பிரவாகத்தை இதற்கு உதாரணமாகச் சொல்கிறார் ஜெயஸ்ரீ. "இந்த மாறுபாடுகள் துல்லியமாக அமையவேண்டும்."

நாட்டிய அமைப்புக்குப் பொறுப்பாளரான ஜி. நரேந்திரன் அதே இழையில் தொடருகிறார், "இந்த எண்ணங்களை முழுமையாக மேடையில் தரவேண்டும். அதே சமயம் காட்சிகள் சம்பிரதாயக் கட்டுக்கோப்புடன் கண்களுக்கு விருந்தாக அமையவேண்டும் என்பதே சவால்." இதுவரையில் இந்நாடகத்துக்கு வந்திருக்கும் மதிப்பீடுகள் இச்சவாலில் இக்கூட்டணி முயற்சிபெற்றுள்ளதையே காட்டுகிறது.

இவர்களின் கற்பனைக்கு உயிரூட்டி ஆடிப்பாடி நடித்திருக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த அவிக்ஞா நடனக் குழுமம் (Avigna Dance Ensemble). இதனைத் தயாரித்துள்ளது Cleveland Cultural Alliance.

முத்ரா வழங்கும் 'சிலப்பதிகாரம் - பெருந்தகைப் பெண்டிர்'
நாட்டிய அமைப்பு, இயக்கம்: G. நரேந்திரா
இசையமைப்பு : பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்
பாடல்கள்: கனிமொழி கருணிநிதி
அரங்க அமைப்பு: A.V. இளங்கோ
நாள்: சனிக்கிழமை, அக்டோபர் 9, 2004; மாலை 6 மணி.
அரங்கம்: Smithwick Auditorium, Foothill College
12345 El Monte Road, Los Altos, CA.
நுழைவுச்சீட்டு: $20, $40 (6 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தவிர்ப்பது நலம்)
விவரங்களுக்கு: http://mudraa.home.comcast.net
மின் அஞ்சல்: mudraa@comcast.net

******


"கண்ணகி மதுரையை எரிக்கும் காட்சி இந்த நாடகத்தின் உயிர்நிலையாகும். நரேந்திரனின் கற்பனாசக்தியும், ஆக்கத்திறனும் ரசிகர்களைச் சிலிர்க்க வைக்கிறது"
- தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை.

******


"2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆடவர், பெண்டிர் உணர்வுகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும், அக்காலக்கட்டத்தில் காப்பியம் எழுதப்பட்ட விதமும், இன்றும் நம் மனதைத் தொட்டு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கதாபாத்திரங்களுக்குத் தகுந்தமுறையில் என்னால் இசை அமைக்க முடிந்ததற்குக் காரணம் என்னுள் கண்ணகியும், மாதவியும் அடங்கியிருப்பதுதான் என்று எண்ணுகிறேன்"
- பாம்பே ஜெயஸ்ரீ

******


எங்கே? என்று?

சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம் கீழ்க்கண்டவாறு பல இடங்களில் மேடை ஏறுகிறது. அதிக விவரங்கள் அறியத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன.

இடம் தேதி தொடர்புகொள்க
டெட்ராயிட், மிக்சிகன் 09/18/2004 248.312.7207
கிளீவ்லாந்து, ஓஹையோ 09/19/2004 440.349.2513
நியூயார்க் 09/22/2004 212.650.2361
வளைகுடாப்பகுதி, SFO 10/09/2004 510.579.1990
லாஸ் ஏஞ்சல்ஸ் 10/17/2004 949.552.9043
எடிஸன் ஏஞ்சல்ஸ் 11/20/2004 732.819.0773

© TamilOnline.com