நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க கூட்டணி தமிழகத்தில் ஒட்டுமொத்தத் தோல்வியைத் தழுவியதற்குப் பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டன. அவற்றை மீண்டும் இங்கே பட்டியலிடத் தேவையில்லை.
அண்மையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.கவின் தோல்விக்கு வாக்காளர் பட்டியலில் நடந்த குளறுபடி ஒரு முக்கிய காரணம் என்பது மட்டுமல்லாமல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பெரும் தில்லுமுல்லு நடந்திருக்கிறது என்றும், எந்த விசையை அழுத்தினாலும் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப் பதிவானது என்றும், அதனால்தான் அ.தி.மு.க தேர்தலில் தோற்றது என்று கூறினார். அது மட்டுமல்லாமல் அடுத்த தேர்தலில் மின்னணு இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது, பழைய முறைப்படி ஓட்டுச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டை தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் மறுத்தன. 2001ஆம் ஆண்டு தேர்தலின் போது மின்னணு இயந்திரத்தில்தான் ஓட்டுப்பதிவாகி, அப்போது அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை நினைவுகூர்ந்தன இக்கட்சிகள்.
ஜெயலலிதாவின் குற்றசாட்டை மறுத்துப் பேசிய துணை தேர்தல் கமிஷனர் ஏ.ஜே. ஜா "மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடப்பதாக கூறிய புகாரை செயல்விளக்கம் மூலம் நிரூபித்து காட்டத் தயாரா?" என்று விளக்கம் கேட்டு அ.தி.மு.கவுக்குக் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
இது குறித்து பத்திரிகையாளரிடையே பேசிய ஜா, அ.தி.மு.க.வின் புகார் தொடர்பாக வழக்கறிஞர் அணித் தலைவருக்கு எழுதி இருக்கிறோம். அவர்கள் விரும்பினால் தமிழகம் உட்பட நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அவர்கள் விரும்பிய நாளில், விரும்பிய மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரத்தில் செயல்விளக்கம் மூலம் நிரூபிக்க நாங்கள் வாய்ப்பு அளிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
தேர்தல் கமிஷனின் இந்த அறிவிப்பின் மூலம் இப்பிரச்சனை மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிகிறது.
கேடிஸ்ரீ |