''இந்த விருது எனக்குள் பயத்தைத் தருகிறது..'' - இயக்குநர் ஜெனநாதன்
2003-ஆம் ஆண்டுக்கான 51-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருதை 'இயற்கை' தட்டிச் சென்றுள்ளது. ஷாம் மற்றும் அருண்குமார் நடிப்பில் உருவான இத் திரைப்படத்தை இயக்கியவர் ஜெனநாதன்.

கப்பல் சிப்பந்திகளுக்கும், கரையோர மனிதர்களுக்கும் நடுவே நடக்கின்ற விஷயங்களை, அவர்களின் ஆசைகளை, அவர்களின் காதலை, அவர்களின் உழைப்பை ரொம்ப அழகாக 'இயற்கை' சொல்லியிருக்கிறது. மிகைப்படுத்தாமல், கலப்படமில்லாமல் அச்சுஅசலாகச் சொல்லியிருக்கிறார்.

படத்தில் கடலையும், அதை சார்ந்த இடங்களையும் பார்க்கும் போதே மனசுக்குள் ஒரு குளிர்ச்சி ஏற்டுபடுகிறது. அந்தக் கடற்கரையில் ஒரு காதல், அந்தக் காதலில் ஏற்படும் வலிகள், வேதனைகள் என்று மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். வழக்கமான முக்கோணக் காதலை கொஞ்சம் புதுமையாகச் சொல்லியிருக்கிறார்.

சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது அறிவித்தவுடன் இயக்குநர் ஜெனநாதனைச் சந்தித்து வாழ்த்துக்கூறிய போது...

''இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த விருது எனக்குள் கொஞ்சம் பயத்தையும் கொடுக்கிறது...'' என்று கூறுகிறார்.

பெரிய குடும்பத்தில் கடைசி மகனாகப் பிறந்த ஜெனநாதன் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த இவர் ஆரம்பக்காலத்தில் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்தார். இயற்கையாகவே இவருக்குச் சினிமாவின் மேல் ஒரு காதல். எதிர்காலத்தில் இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையை மனதில் வைத்திருந்த ஜெனநாதன் அதற்கான காலம் கனியக் காத்திருந்தார்.

மார்க்சிய கருத்துக்களும், அதன் தாக்கமும் இவர் மனதைக் கவர, மார்க்சியத்தைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ள முற்பட்டார். சினிமாவின் மூலம் தன்னுடைய கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை உருவாகவே, பார்த்துக் கொண்டிருந்த துறைமுக வேலையை உதறிவிட்டு, முதலில் கே.ஆர். இடம் உதவியாளராகச் சேர்ந்து அவருடன் பல படங்களில் பணிபுரிந்தார். அடுத்து லெனினிடமும் உதவியாளராக இருந்தார். லெனினின் நாக்அவுட், குற்றவாளி, கூடு என்று பல குறும்படங்களில் பணியாற்றியதும் திரைப்படத் துறையின் பல நுணுக்கங்களையும், பரிமாணங்களையும் அறிந்துக் கொள்ள முடிந்தது.

'இயற்கை' கதை உங்கள் மனதில் எங்கு, எப்போது உருவானது என்றவுடன், கணநேர யோசனைக்குப் பின் ''சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் நான் பணிபுரிந்த காலத்தில் தினசரி நான் பார்த்த கப்பல், கட்டுமானம், அங்குள்ள மனிதர்கள் என் மனதில் மெல்ல ஆக்கிரமிப்புச் செய்தனர். தவிர, 'வெண்ணிற இரவுகள்' என்கிற ரஷ்யச் சிறுகதையின் தாக்கமும் இதில் உண்டு என்று கூறுகிறார் ஜெனநாதன்.

படத்தில் வரும் கலங்கரை விளக்கம் மற்றும் அந்த அழகிய கடற்கரைச் சூழலை எங்கு பதிவு செய்தீர்கள் என்ற கேள்விக்கு, ''திருச்செந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில் முதன்முதலாக நடைபெற்ற சினிமா படப்பிடிப்பு எங்களுடையதுதான் என்று சொல்வேன். லைட்ஹவுஸ் போன்ற காட்சிகளை அந்தமானில் எடுத்தோம். சில காட்சிகளை தூத்துக்குடித் துறைமுகத்தில் எடுத்தோம்.'' என்று சொல்லும் இயக்குநர் படத்தில் வரும் லைட்ஹவுஸை அந்தமான் கடற்கரையில் உருவாக்குவதற்கு ரொம்பவும் சிரமமாக இருந்தது'' என்கிறார்.

நாங்கள் சிறந்த போட்டோகிராபி விருதை எண்ணித்தான் படத்தை அனுப்பினோம். ஆனால் பல பெரிய பெரிய தலைகளின் படங்களின் மத்தியில் 'இயற்கை' சிறந்த பிராந்திய மொழிப் படமாக தேர்வு செய்யப்பட்டதை அறிந்தவுடன் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆங்கிலத்தில் subtitle-கூடப் போடாமலேயே அனுப்பி வைத்திருந்தேன் என்கிறார் ஜெனநாதன்.

பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும் சினிமாவைத்தான் நான் இலக்கியமாகக் கருதுகிறேன் என்று கூறுகிறார்.

இனி என் பார்வை இன்றைய இளைஞர்களை நோக்கிதான் என்கிறார்.

''உலக அரங்கில் தமிழ்த் திரைப்படத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதும், இன்றைய இளைஞர்களுக்கு அவர்களின் நிலை மற்றும் அவர்களின் 'சக்தி' என்ன என்பதை புரியவைப்பதும் தான் என்னுடைய நோக்கம்...'' என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் 'இயற்கை' ஜெனநாதன்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com