கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன்
சென்னை 1998 அத்வைதின் தந்தை அவசரமாக வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டார். அத்வைத் வேகமாக தன் மோட்டார் பைக்கில் ஏறி தப்பிக்க முயன்றான். அப்பா அவனை விடுவதாய் இல்லை. ''டேய், இன்று ஏழுமலையை வரச்சொல்லி இருக்கேன். அவன் தண்ணீர்த்தொட்டியைச் சுத்தம் செய்யப்போகிறான். நீ கொஞ்சம் அவனுடன் நின்று சரிவரச் செய்கிறானா என்று பார்த்துக்கொள் போதும். என்னால் இரண்டு மாடி ஏறிப்போய், அதுவும் சுவற்றின் மேல் நின்று தொட்டியை எட்டிப் பார்க்க முடியாது. இன்று வெய்யில் இல்லை, நல்லவேளை'' என்றார்.

ஆனால் அத்வைத், ''அப்பா உங்களுக்கே தெரியும். நான் இரவுபகலாக அமெரிக்கா செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று. என்னைப் போய் டாங்கைக் கழுவு, புல்லைப் பிடுங்கு என்று தொல்லை செய்கிறீர்கள். என்னைச் சில கம்ப்யூட்டர் கோர்ஸஸ் படிக்கச் சொல்லி இ-மெயில் வந்திருக்கு. வெறும் மெயின்·பிரேம் கோர்ஸ் போறாதாம். ஏழுமலை நன்றாகத்தான் வேலை செய்வான் விட்டுவிடுங்கள். எனக்குத் தலைக்குமேல் வேலை இருக்கு'' என்று கூறியவாறே வண்டியைக் கிளப்பிக் கொண்டு பறந்தான்.

வாசலில் நாளிதழை அசைபோட்டுக் கொண்டிருந்த அத்வைதின் தாத்தா தொங்கிப்போன தன் மகனின் முகத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டார். நாளிதழை மடித்தவாறு சாய்வு நாற்காலியைக் காலி செய்தார். என்ன நினைத்தாரோ உள்ளே தென்பட்ட மருமகளிடம் ''கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போகிறானாம்'' என்றார். அவருக்குப் பேரன் எப்போதும் வீட்டில் ஒரு உதவியும் செய்யாமல் வெளியே சுற்றுவது பிடிக்காத விஷயம்.

இடுப்பில் இருந்து அவிழ்த்த லுங்கி வட்டவடிவம் மாறாமல் அப்படியே மகனின் அறையில் விழுந்திருந்ததை அம்மா பார்த்துப் புன்னகைத்தாள்.

சொன்னதுபோல் அத்வைத் அமெரிக்கா செல்லும் நாளும் வந்தது. தாத்தா, அப்பா, அம்மா அனைவரின் ஆசிர்வாதத்துடன் விமானநிலையத்தில் கை ஆட்டியவாறே எஸ்கலேட்டரில் நின்றான். அம்மாவின் அழும் சத்தம் நியூஜெர்சி அடையும் வரை அத்வைதின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

வேலையில் கவனம் செலுத்தியவன் பதினெட்டு மாதங்கள் கழித்து தாய் நாட்டுக்குப் பயணமானான். அம்மா அவனுக்காகப் பார்த்த உஷாவை மணம் செய்துகொண்டான். அடுத்த வருடம் பெற்றோரை அமெரிக்கா வரத் தயாராக இருக்குமாறு கட்டளை இட்டுவிட்டு மனைவியுடன் திரும்பினான் அத்வைத்.

சில மாதங்களில் நியூஜெர்சியில் வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்தான். வீட்டுப் பெரியவர்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. தாத்தா வருவோர் போவோரிடம் எல்லாம் ''என் பேரன் அமெரிக்காவில் சொந்த வீடு வாங்கிட்டான்'' என்று பெருமைப்பட்டுக்கொண்டார். அம்மா மட்டும் அத்வைதிடம் ''குழந்தை பிறந்த பிறகுதான் நாங்கள் அமெரிக்கா வருவோம்'' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். அவளது ஆசை நிறைவேற மூன்று ஆண்டுகள் ஆயின. பேரனைப் பார்க்க அத்வைத்தின் அம்மாவும், அப்பாவும் நியுஜெர்சிக்குப் பறந்தார்கள்.

நியூஜெர்சி 2003

காலையில் எழுந்த அப்பா சுடச்சுட காபியை குடித்துக்கொண்டே உலகச் செய்திகளுக்காக சன்டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா குளித்துவிட்டு தட்டுத்தடுமாறி பாத்டப்பில் இருந்து வெளிப்பட்டாள். மகன் சொன்னதுபோல் வாஷ்பேஸினைச் சுற்றி இருந்த தண்ணீரை பேப்பர் டவலால் துடைத்தாள்.

குழந்தை அழும் சத்தம் கேட்டுப் படுக்கை அறைக்குள் சென்று பேரனைத் தூக்கிக் கொண்டாள். உஷா அடுக்களையில் இருந்து ஒலிபெருக்கியில் குழந்தை அழுவதைக் கேட்டு மேலே μடிவந்தாள். ''என்னம்மா குட்டிப் பையன் ரொம்ப நேரமா அழுதான் போல இருக்கே?'' என்று அம்மா கேட்க ''ஆன்ட்டி இன்று புதன்கிழமை. குப்பை எடுக்க வண்டி வரும். அதுதான் ரீசைக்கிள் குப்பை எல்லாம் தனியாகவும், மீதிக் குப்பையைத் தனியாகவும் கட்டி வைத்தேன். அத்தோடு அட்டை டப்பாக்களை மடக்கிக் கட்டி அதையும் ரோட்டில் போய் வைத்துவிட்டு வந்தேன். பாப்பா அழுவது இப்பத்தான் கேட்டது'' என்றாள் பரிதாபமாக.

அத்வைத் காலை ஏழு மணிக்கே நியூயார்க்கில் உள்ள அலுவலகத்துக்கு ரயிலில் சென்று விட்டான். கீழே சென்ற அம்மா குளிர்சாதனப் பெட்டியைச் சுற்றி இருந்த பொருட்களை மலைப்புடன் பார்த்தாள். ஏற்கனவே தள்ளுபடியில் கிடைத்ததென்று வாங்கிய பால் கேலன் கேலனாக உள்ளே இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. எப்படியோ எல்லாவற்றையும் அலமாரி போல் இருந்த பிரிட்ஜினுள் அடைத்தாள்.

கோடையாக இருந்ததால் மிதமான வெய்யில் அப்பாவை வெளியே அழைத்தது. பேரனுடன் புல்வெளியில் கொஞ்சினார். மாலை எட்டு மணியாகியும் அத்வைத் வீடு திரும்பவில்லை. சிறிது நேரத்தில் போன் அடித்தது. அவன் இறங்க வேண்டிய இடத்தில் ரயிலின் தானியங்கிக் கதவு திறக்காததால் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி இருந்தான். உஷாவும் அப்பாவும் காரில் சென்று அவனை அழைத்துக் கொண்டு வந்தனர்.

வார இறுதியில் நியூயார்க் அழைத்துச் சென்ற அத்வைத் அம்மாவையும் அப்பாவையும் மகிழ்ச்சிக் கடலில் ழூழ்கடித்தான். வானளாவிய கட்டிடங்கள், மேடம் டுஸ்ஸாட்ஸ், டைம்ஸ் ஸ்க்வேர், நீண்ட சாலைகள் எல்லாம் 'இதுதாண்டா பிக் ஆப்பிள்' என்று பறைசாற்றின. மேலும் நடக்க முடியாமல் லிபர்டி சிலையைக் காண காரில் சென்றனர்.

வீடு திரும்பியதும் அசதியில் சோபாவிலேயே தூங்கிய அம்மாவின் கனவில் வந்தவை கட்டிடங்கள், கட்டிடங்கள், மேலும் கட்டிடங்கள். காலையில் மழையின் சத்தம் அம்மாவின் கனவைக் கலைத்தது. மழைச் சத்தம் மட்டும் அல்ல, கண்ணாடி ஷட்டரின் மேல்புறத்தில் இருந்து மழை நீர் வரவேற்பறையினுள் நயாகரா நீர்விழ்ச்சி போல் கொட்டிக்கொண்டிருந்தது.

தூக்கக் கலக்கத்தில் கத்திய அம்மாவின் குரல் கேட்டு அத்வைத், அப்பா மற்றும் உஷா μடி வந்தனர். தண்ணீரைப் பார்த்தவுடன் ஆளுக்கு ஒரு பக்கமாக μடிக் கையில் கிடைத்த பித்தளைக் குண்டான் (செடி வைப்பது) பெரிய பிரஸ்டிஜ் குக்கர், கிண்ணம் என்று பல பாத்திரங்களைக் கொண்டு வந்தனர். அதற்குள் தரைக் கம்பளம் நனைந்து டிரெட் மில், லெதர் சோபா, குழந்தையின் விளையாட்டுச் சாமான்கள் அனைத்தும் நனைந்தன. தள்ளுபடி விற்பனையில் வாங்கிவைத்த காகித டவல்கள் உருளை உருளையாகக் காலியானது.

மழை நின்றவுடன் அத்வைத் வெளியே சென்று ஏணிபோட்டு வீட்டின் கூரையைப் பார்வையிட்டான். இரண்டு மூன்று வருடங்களாக உதிர்ந்து கிடந்த காய்ந்த இலைகள் கூரை தண்ணீர்க் குழாயை அடைத்துக் கொண்டதால் மழைநீர் தேங்கி நின்று எப்படியோ மரச்சுவர் ஷட்டர் இடுக்கு வழியாக வீட்டினுள் வழிந்து இருந்தது.

அன்றே காஸ்கோ சென்று பெரிய ஏணியாக வாங்கி வந்த அத்வைத் தன் பர்கராலும், பீசாவாலும் பெருத்த உடலைத் தூக்கிக் கொண்டு கூரைமீது ஏறி இலைகளை மெல்ல நீக்கினான். அப்பா ஏணியைப் பிடித்தவண்ணம் மழை வராமல் இருக்கப் பிரார்த்தனை செய்தார்.

பூஜை அறையில் அம்மா கொல்லைச்செடிப் பூங்கொத்தில் இருந்த வாசமில்லா மலர்களை நீக்கி சுவாமி படங்களுக்கு வைத்தவாறு மகன் பத்திரமாகக் கீழே இறங்கும்வரை கடவுளை வேண்டினாள்.

அடுத்த நாள் துணிகளை மெஷினில் போட பேஸ்மெண்டுக்கு சென்ற உஷா தபதபவென்று மரப்படியில் ஓடிவந்தாள். பேஸ்மெண்டில் தண்ணீர் எப்படியோ உள்ளே வந்துவிட்டது. தோட்டவேலையில் இருந்த அத்வைத் மோவர், பிளோவர் எல்லாவற்றயும் போட்டது போட்டபடி ஓடிவந்தான். மறுபடியும் வேலை. எல்லோரும் சேர்ந்து தண்ணீரை அப்புறப்படுத்திவிட்டு ஜாஸ்மின் அரிசி சாக்குப் பைகளை தரையில் போட்டுவிட்டு மேலே செல்ல ஒருநாள் ஆனது. தண்ணீர்க் குழாய்கள் அனைத்தையும் சரி பார்த்தான் அத்வைத்.

ஒரு சனிக்கிழமை பூங்காவில் நண்பர்களுடன் பார்பெக்யூ பார்ட்டி. மரங்களின் இலைகள் பல வண்ணங்களில் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதுவரை பச்சை அல்ல மஞ்சள் இலைகளைப் பார்த்த அம்மா இங்கு சிகப்பு, ஆரஞ்சு, ஊதாப்பூ நிறங்களில் இலைகளைப் பார்த்து அசந்தாள். எல்லோரும் சந்தோஷமாக ஆடிப்பாடிவிட்டு வீடு திரும்புகையில் மாலை மணி ஆறு.

பேரனைத் தமிழ் பாட்டுப்பாடித் தூங்கச் செய்தாள் அம்மா. உஷாவுக்கு வேலை மிச்சம். ஆனால் இன்று வாக்குவம் செய்து குளியலறைகள் கழுவும்நாள். சரிவரச் செய்யவில்லையென்றால் பாசி பிடித்துவிடுமே.

ஒருநாள் திடீரென்று மின்தட்டுப்பாடு ஏற்பட்டது. கரண்ட் வந்துவிடும் டிவி பார்க்கலாம் என்றிருந்த அப்பாவுக்கு அதிர்ச்சி. மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ''சீக்கிரம் ஒரு ஜெனரேட்டர் வாங்கிக் கொண்டு வாருங்கள். ஏதோ பெரிய 'பிளாக் அவுட்' நியூ யார்க் நகரம் முழுவதும் குழப்பம்'' என்றான். நல்லவேளை சற்று முன்னர்தான் அவன் தன் நியூ ஜெர்சி அலுவலகக் கிளைக்கு பத்திரமாக வந்து சேர்ந்திருந்தான். தப்பித்தான்.

மாலை மருமகளுடன் காரில் சென்று மகனை அழைத்துக் கொண்டு வந்தனர் அம்மாவும் அப்பாவும். அரைமணி நேரத்தில் செல்ல வேண்டிய காருக்கு மூன்று மணி நேரம் ஆனது. வழியெல்லாம் இருட்டு; வாகனங்களின் வெளிச்சம்தான். ஆங்காங்கே வழி சொல்லப் போக்குவரத்துப் பொலீஸ் பளிச்சென்ற பேடன்களுடன். அம்மா விடாமல் கந்தர்சஷ்டி கவசம் சொன்னாள்.

ஜெனரேட்டரை இயக்கி வீட்டினுள் வெளிச்சத்தைப் பாய்ச்சினான் அத்வைத். அம்மாவுக்கு ஆச்சரியம். ''இதுகூடத் தெரியுமா உனக்கு?'' என்று கேட்டாள். குளிர்காலம் நெருங்கியது. அம்மாவுக்கு பயம். பனி விழுவதற்கு முன் இந்தியா திரும்பிவிட வேண்டும் என்றாள். வீசா முடியும் நாளும் நெருங்கியது.

மார்கழி மாதம் முதல் நாள் பூஜை செய்யலாம் என்று அம்மா கீழே இறங்கி வந்தாள். ஜன்னல் வழியாகப் பார்த்தவள் மலைத்தாள். வெள்ளிக் கம்பளம் விரித்தாற் போல் இருந்தது புல்வெளி. சுற்றியுள்ள இடத்தையெல்லாம் தேவலோகம் போல் ஜொலிக்க வைக்க வெள்ளை மழை பொழிந்து கொண்டிருந்தது.

அவளுடைய சந்தோஷம் சட்டென்று பிரேக் போட்டது போல் நின்றது. வெளியே அத்வைத் தலைமுதல் கால்வரை முகமூடி மனிதன் போல் உடை அணிந்துகொண்டு ரேக்கால் பனியை முன்புறப் பாதையிலிருந்து தள்ளிக் கொண்டிருந்தான். நேற்றுதான் 'கார்பல் டன்னல்' அது இது என்று சொன்னானே! உஷா அவனை ஸ்டேஷனில் விட்டுவிட்டு வருவதற்குக் காரின் மேலே விழுந்திருந்த பனியை ஏதோ பிரஷ், ஸ்பிரே கொண்டு தள்ளிக் கொண்டிருந்தாள். அம்மாவின் இதயம் உறைந்தது.

சென்னை மார்கழி 2004

''வீடு, வீடாகவே இல்லையே'' என்று ஆயிரமாவது முறையாக முணுமுணுத்தாள் அம்மா. வேலைக்காரப் பெண் வீட்டினுள் சுத்தம் செய்ய, ஏழுமலை வெளியே காய்ந்த இலைகளைப் பெருக்கித் தோட்டத்தைச் சரி செய்தான்.

ஆறுமாத காலம் மகளின் வீட்டில் இருந்த தாத்தா, இவர்கள் திரும்பியதை அறிந்து அடுத்த வாரமே மகன் வீட்டிற்கு வந்தார்.

உள்ளே நுழைந்து தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்த அவர் ''என்ன என் பேரன் அத்வைத் அமெரிக்காவில் ராஜா மாதிரி இருக்கானா?'' என்றார். அவ்வளவுதான் அம்மா விம்மி விம்மி அழுதாள். ஒன்றும் புரியாமல் முழித்த தாத்தாவிடம் அப்பா தழுதழுத்த குரலில் சொன்னார், ''கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் விமானம் ஏறி நர......'' அவரால் முடிக்க முடியவில்லை.

ஷமிளா

© TamilOnline.com