நடக்காத அதிசயம்
நான் விஷ்ணு. ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த கையோடு அங்கேயே வேலையும் கிடைத்து, வேலையில்லாதவன் தண்டச்சோறு என்று என் நண்பர்கள் பலர் அனுபவிக்கிற கொடுமையிலிருந்து தப்பித்தவன். வேறு ஏதோ ஒரு அதிசயம் என் வாழ்வில் நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன்.

நடுவில் ஒரு சின்னப் பிரச்சினை. என்னோடு படித்த எனக்குப் பிடித்த தோழி ஒருத்தி என்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டாள். அவள் காதலை மறுப்பதற்கு என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் மனம் இல்லை. தனியாக யோசிப்பதைவிட யாரிடமாவது ஆலோசனை கேட்டால் பரவாயில்லை போல் தோன்றியது. என் நெருங்கிய நண்பனிடம் இதைப் பற்றிச் சொன்னேன்.

அவன் சொன்ன யோசனைப்படி என் பெற்றோரிடமே நேரடியாகப் போய் உங்களுக்குப் பிடித்திருந்தால் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றேன். முடியாது என்றார்கள். அதே சூட்டோடு வேறொரு பெண்ணையும் பார்த்து நிச்சயம் செய்து முடித்து விட்டார்கள். நானும் ஒத்துக்கொண்டு என் தோழியைப் பார்த்துப் பேசினேன். அதனால் என்ன, நாம் இருவரும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருப்போம் என்று நினைத்தேன். பரவாயில்லை. இனிமேலும் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று சொல்லிவிட்டாள். இத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள். இனிமேல் தான் கதையே ஆரம்பமாகிறது.

அதற்குமுன் எனக்கு வாய்த்த மனைவி பற்றி இங்கே கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். படிப்பு கொஞ்சம் கம்மிதான். நல்ல அழகு. கூடவே நல்ல புத்திசாலியுமாக இருப்பாள் என நானே அனுமானித்துக் கொண்டேன். கல்யாணமான முதல் ஒரு மாதம் நன்றாகத்தான் போனது. என் தோழி என் வீட்டிற்கு ஒருமுறை வந்து போகும்வரை.

எனக்கு மிகப் பிடித்த கவிஞரின் கவிதைத் தொகுப்பு ஒன்றை என் மனைவிக்குப் பரிசாக வாங்கி வந்திருந்தாள். இதில் உங்களுக்கு ஏதாவது தவறாக தோன்றுகிறதா? எனக்கும் தோன்றவில்லை. பரிசைக் கொடுத்துவிட்டு, என் மனைவியிடம் வாய் வலிக்கும்வரை பேசிவிட்டு, சாப்பிட்டுவிட்டும் போனாள். அதன் பிறகு தனிமையில் நான் அவ்வப்போது பார்க்கும்போது என் மனைவி அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பாள். நிரம்பப் பிடித்துவிட்டது போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன். ஒருநாள் அதிலிருந்து ஒரு காதல் கவிதையைக் காட்டி இது உங்களுக்கும் பிடித்திருக்கிறதா என்று கேட்டாள்.

இதிலிருக்கும் எல்லாமே எனக்குப் பிடித்ததுதான் என்றேன். திடீரென ஒருநாள் என் மனைவியின் அப்பாவும் அம்மாவும் வீட்டிற்கு வந்தனர். அன்பாக வரவேற்று அமர வைத்தேன். சிறிது நேரம் கழித்து உங்களுக்கு அடிக்கடி வீட்டிற்கும் வரும் அளவுக்குப் பெண் தோழிகள் அதிகமோ எனக் கேட்டார் என் அன்பு மாமனார். ஒரு சிலர் இருக்கிறார்கள் என்றேன். அப்போதே லேசாக எனக்குள் பொறி தட்டியது. ஆனால் அத்தோடு அதை விட்டுவிட்டேன்.

அதற்கப்புறம் தினமும் இரவு நான் வந்தபிறகு என் செல்போனை எடுத்துப் பார்த்துக் கொண்டே இருப்பாள் என் மனைவி. ஒருநாள் அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் விரிவுரையாளர் செய்தி அனுப்பி இருந்தார். மறுதினம் ஏதோ ஒரு பார்ட்டி என்றும், திடீரென முடிவு செய்ததாகவும் செய்தி.

அடுத்த நாள் நன்றாகத்தான் போனது. அதற்கடுத்த தினம் மறுபடியும் மாமனார், மாமியார். விருந்து, பார்ட்டி என்று போய்விட்டு இரவு நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறீர்களாமே. மனைவி வீட்டில் இருக்கும் நினைப்பே இல்லையா என்று கேட்டுக்கொண்டு. இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என்றும், மேலும் நான் அன்று ஒரு இரவுதான் தாமதமாக வந்தேன் என்றும் சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அதற்கப்புறம் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க ஆரம்பிதேன்.

நடுவில் வேறு நல்ல வேலையாகத் தேடிக்கொள்ளலாமா என்ற எண்ணமும் தோன்றிக்கொண்டே இருந்தது. இதைப்பற்றி என் மனைவியிடம் சொல்லும் போதெல்லாம் சரி அந்த ஊரில் தேடிக்கொள்ளுங்கள் என்றே அழுத்தி அழுத்திச் சொன்னாள். முதலில் எனக்குப் புரியவில்லை. புரிந்தபோது மனது வலித்தது. ஏனென்றால் அங்குதான் என் தோழி வசிக்கிறாள். அதன்பிறகு ஒருநாள் நான் அவளை எவ்வளவு நேகிக்கிறேன் என்பதையும் அவள் என்னைச் சந்தேகப்படத் தேவையில்லை என்பதையும் அவளிடம் பொறுமையாக விளக்கினேன். அவளுக்கும் புரிந்ததும் போலத்தான் தோன்றியது.

அதற்கு அடுத்த நாள் தான் அது நடந்தது. புகைப்படமாக மட்டும் இருக்கும் அவளின் பக்கத்தில் இப்போதும் அந்த மாத்திரை டப்பாவும் நானும். கடைசிவரை எந்த அதிசயமும் என் வாழ்வில் நடக்கவில்லை.

சுனிதா தீனதயாளன்

© TamilOnline.com