தாயுமானவள்
''அம்மா! வேக் அப். ஒன் அவரில் கிளம்பிடுவோம். பிராங்·பர்ட்டில் இருக்கோம். மிச்சிகனில் இருக்கோம்னு நினைச்சு தூக்கமா? பாட்டியை பத்தி வொர்ரி பண்ணாதே. இந்தா, காபி சாப்பிடு. ம்ம்... என் தமிழ் எப்படியிருக்கு? பாட்டிக்கு புரியுமா?'' சாரு பேசிக்கொண்டே போனாள். தயாவுக்கு எல்லாமே ஏதோ கனவு போல இருந்தது. சாருதான் எவ்வளவு சமத்து! 14 வயது ஆகப் போறது, இன்னும் குழந்தைத்தனம் நிறைய இருக்கு. ஆனா இந்த இரண்டு வாரத்துல ரொம்ப பெரிய மனுஷியாயிட்டா. இரண்டு வாரம் முன் இந்தியாவிலிருந்து போன் வந்தவுடனே டிக்கெட் வாங்க வச்சது அவதான். பாட்டின்னா அப்படி ஒரு உசிரு, ''உடனே எனக்குப் பாட்டியை பாக்கணும்மா'' என்று அழுது அடம் பிடித்துக் கிளம்பினாள்.

''அம்மா! பாட்டியோட மூக்குத்தி பிடிச்சிருக்கு. பாட்டி சொல்ற கதையெல்லாம் பிடிச்சிருக்கு. அந்தப் புடவை என்ன பேரு.. மடி..மடி..ம்ம் மடிசார் பிடிச்சிருக்கு! ஐ சிம்ப்ளி லவ் பாட்டி. அதெப்படி பாட்டிக்குக் கோபமே வர்றதில்ல. நீ எதுக்கு எடுத்தாலும் டென்ஷன் ஆற. பாட்டியைப் பாரு.. ரொம்ப ஈஸி கோயிங். பாட்டி, தாத்தாவுக்குள்ள எவ்வளவு அண்டர்ஸ்டாண்டிங் தெரியுமா? நீயும், அப்பாவும் எவ்வளவு ஆர்க்யூ செய்யறேள். பாட்டி, தாத்தா சண்டை போட்டு நான் பார்க்கவேயில்லை. அம்மா, பாட்டிக்கு நான் இங்கிலீஷ் சொல்லித் தரேன், தெரியுமா!'' இப்படித்தான் பாட்டியைப் பற்றிப் பேசினால் சாருவால் நிறுத்த முடியாது.

தயாவுக்கு சாரு சொல்வது உண்மையோ என்று தோன்றியது. நானும், விசுவும் ரொம்பத்தான் சண்டை போடறோமோ? பதினேழு வருஷத்துல இன்னும் எங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இல்லதான். எதிர்பார்ப்புகள் நிறைய இருக்குமிடத்தில் ஏமாற்றங்களும், குழப்பங்களும்தான் அதிகரிக்கின்றன. அம்மா மாதிரி 'இருக்கறது போதும்' என்று நினைக்க முடியவில்லை. திருச்சியில் படிப்பு முடிச்ச பிறகு கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்கலை. ''உன்னை மாதிரி என்னால மலைக்கோட்டையைச் சுற்றி வர முடியாது. காலம்பறலேர்ந்து சமையல்கட்டுல அல்லாட முடியாது. மேலே படிக்கணும். எனக்கு அமெரிக்கா போகணும்'' என்று சொல்லி ஓடிவந்து பி.எச்டி. சேர்ந்தது, கூடப் படிச்ச விசுவைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம் பிடித்தது எல்லாம் சாருவுக்கு நினைவுக்கு வந்தது. அம்மா குலம், கோத்திரம் கேட்கவில்லை. ''உன்னைக் கண்கலங்காமல் வைச்சுப்பானா?'' என்றுதான் கேட்டாள்.

சாரு பிறந்தப்ப இரண்டு வருஷம் அப்பாவோட வந்து இருந்தாள். தயா கிரீன் கார்ட் வாங்கிக் கொடுத்தாலும் இரண்டு வருடத்துக்கு ஒரு தடவையாவது அம்மாவுக்குத் திருச்சி போயிடணும். ''முடியலைடி தயா! தாயுமானவரைப் பார்க்காம இருக்க முடியலைடி. என்னைக் கூப்பிடறார். ஒரு ஆறு மாசம் போயிட்டு வர்றேன்'' என்று சொல்லிவிட்டு அப்பாவுடன் கிளம்பிவிடுவாள். சாருவால்தான் பாட்டி இல்லாமல் இருக்க முடியாது. சாரு இந்த அளவு தமிழ் பேசுவதே பாட்டியால்தான்.

''அம்மா! நீ ரொம்ப கத்தறே. பாட்டி எப்படி கோச்சுக்கவே மாட்டேங்கறா! ஐ மிஸ் ஹர்" என்பாள்.

அபி பிறந்த வருஷம்தான் எல்லாமே மாறிப்போச்சு. அப்பதான் மொதல்ல அம்மாவுக்குச் சமைக்கற விஷயம் மறந்து போக ஆரம்பித்தது. ''வயசாகிப் போச்சுடி! என்ன பண்றது? தாயுமானவரை தரிசிக்க முடியலேங்கிற குறைதான். தாயுமானவரை உங்க எல்லார் முகத்திலேயும் நான் பார்க்கணும், ஆனா அந்தப் பக்குவம் எனக்கு வரலை. வரணும்னு கடவுளைப் பிரார்த்திக்கிறேன்'' என்பாள். மெதுவாக ''வேயுறு தோனி பங்கன்'' மறக்க ஆரம்பித்தது. சாருவை வேறு பெயர் சொல்லிக் கூப்பிடுவாள். தயாவுக்குக் கவலைபிடித்தது. டாக்டரிடம் போனால் "அல்ஷைமரின் (Alzheimer's) ஆரம்பநிலை" என்றார்.

''அடி போடி மறதி ஒரு வியாதியா? 65 வயசு ஆறது அம்மாவுக்கு. எல்லாம் வரும். அவளுக்குத் தாயுமானவரைப் பார்க்கணும். எங்களை ஊருக்கு அனுப்பி வை. ஒரு ஆறு மாசம் அங்க இருந்தா எல்லாம் சரியாப் போயிடும்'' என்றார் அப்பா. தயாவுக்கு அப்பா சொல்வது சரி என்று பட்டது. சாருவையும், அபியையும் விட்டுட்டுப் போக அம்மாவுக்கு மனசேயில்லை. ஊருக்கு போய்ச் சேர்ந்து உடனே கூப்பிட்டு அழுதாள்.

''எல்லாம் பிரமாதம். உங்கம்மா நன்னா வம்பு பேசறாள். நம்ப ராஜியோட பையனுக்குப் பொண்ணு பாக்கறா. போறுமா!" என்றார் அப்பா.

ஒரு மாதம் கழிந்தது. அப்பாவிடமிருந்து போன் வந்தது. அப்பா அழுது பார்த்ததில்லை தயா. ''அம்மாவைக் காணோம் தயா! கறிகாய் வாங்கப் போயிருந்தா. மார்க்கெட் முழுக்கத் தேடிப் பார்த்துட்டேன். காணும்டி'' என்று அழுதார்.

ஒரு மணிநேரம் கழித்து மறுபடியும் போன் வந்தது. ''இருக்காடீ! தாயுமானவ ஸ்வாமி முன்னாடி உட்கார்ந்திருக்கா. தனக்கே எப்படிப் போனான்னு தெரியலை! யாரு என்னன்னு அவளுக்கே புரியலைடி.'' 'ஓ'வென்று அழுதார்.

என்ன செய்வது என்று தயா யோசித்த போது குரல் கொடுத்தது சாருதான்.

''எனக்குப் பாட்டியைப் பார்க்கணும்'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். தயா லீவ் கிடைக்குமோ கிடைக்காதோ என்று முணுமுணுத்தபோது ''நீ வரலேன்னா, நான் தனியா போவேன். I need to see her now" என்றாள்.

விசுகூட உங்க அம்மா அப்பாவை உடனே இங்க வரச் சொல்லேன். என்றபோது, ''நோ, நான்தான் அங்க போகணும். பாட்டியோட மலைக்கோட்டை போகணும்'' என்று அடம் பிடித்தாள். அப்படி அவசரத்தில் கிளம்பியதுதான் இந்த முறை.

தயாவுக்குத் திருச்சியை நெருங்க, நெருங்க கவலை பிடித்தது. சாருவால் தாங்க முடியுமா? இது சாதாரண வியாதியில்லை. தன் பெயர் மறக்கும். சுற்றியிருப்பவர்களை மறக்கும். தன்னையே யார் என்று கேட்க வைக்கும் வியாதி. தாங்குமா? என் குழந்தையால் பார்க்க முடியுமா?

ஏர்போர்ட்டில் தாத்தாவை கட்டிக்கொண்டு கொஞ்சினாள். சாரு ''பாட்டியைப் பார்க்கணும் தாத்தா... தாயுமானவர் ஸ்டோரி கேட்கணும்'' என்றாள்.

அம்மா பார்க்க அதே மாதிரிதான் இருந்தாள். சாருவின் பிறந்தநாள் விருந்து பற்றிக் கேட்டாள். பக்கத்தாத்து மாமியிடம் சாரு தமிழ் பேசுவது பற்றிப் பெருமை பேசிக்கொண்டாள். சாரு கோவிலுக்குப் போகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவுடன் புது மடிசார் கட்டிக்கொண்டு அர்ச்சனைத் தட்டுடன் கிளம்பினாள். தாயுமானவரைப் பார்த்தவுடன் அர்ச்சகர் கேட்டார். ''மாமி! உடம்பு தேவலாமா? எல்லாம் அவன்கிட்ட விட்டுடுங்கோ" என்றார். அம்மா புரியாமல் விழித்தாள்.

சாருவை இழுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். சாரு பாட்டியை ''கதை சொல்லு பாட்டி'' என்று விரல் சொடுக்கிக் கொண்டே கேட்டாள். அம்மா ரொம்ப யோசித்தாள். ரொம்ப நேரம் எதையோ வெறிப்பது போல இருந்தது. ''தெரியலையேடி சாரு! பேரு மறந்து போயிடுத்தே!'' என்று சொல்லும் போதே கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது.

சாருவுக்கு முடியவில்லை. பாட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

''பாட்டி நீ வொர்ரி பண்ணாதே! எவ்வளவு தடவை நீ எனக்கு சொல்லியிருக்கே.. நான் உனக்கு ஞாபகப்படுத்தறேன்!'' என்று கதை சொல்ல ஆரம்பித்தாள். தயாவுக்கு நம்ப முடியவில்லை. ''என்னால் ஏன் கதை சொல்ல முடியவில்லை. வாயைத் திறந்தால் அழுகைதான் வருகிறது. எப்படி சாருவால் அம்மாவை இதமாக கட்டிண்டு, சிரிச்சுண்டே கதை சொல்ல முடிகிறது. என்ன வியாதி இது!'' புழுங்க ஆரம்பித்தாள் தயா.

பாட்டியைத் தூங்க வைத்துவிட்டு வந்தாள் சாரு. ''அம்மா! பாட்டி தாத்தாவுக்கு நெக்ஸ்ட் வீக் டிக்கெட் கிடைக்கலேன்னா உன்னால இன்னும் ஒரு வீக் லீவ் போட முடியுமா?'' என்றாள்.

''சாரு என்ன சொல்றே. பாட்டியை நம்ப கூடவா! யூ நோ இது அல்ஷைமர்ஸ். இன்சூரன்ஸ் பக்காவா இல்ல. பணத்தை விடு! எல்லாமே மறக்கும் சாரு. உன்னை என்னை மறக்கும். தன்னையே மறந்து போகும். பாத்ரூம் போறது கூட மறந்து போகும். சமாளிக்க முடியாது.''

இடைமறித்தாள் சாரு.

''அம்மா! உன்னால முடியாதுன்னா நீ போ! நான் பாட்டியோட இங்க இருக்கேன். பாட்டியத் தனியா விட்டுட்டு வரமாட்டேன்.''

''எனக்குப் புரியறதுடா சாரு! யோசிச்சுப் பாரு... 24 மணி நேரமும் பார்த்துக்கணும்... நம்மளால முடியாதுடா சாரு! தாத்தாவை இங்க ஒரு நர்ஸ் வைச்சுக்க சொல்லலாம். எல்லா சம்மர்லேயும் வந்து பார்க்கலாம் தவிர..."

''மாம்! முடியாது. என்னால அந்த மாதிரி பாட்டியை விட்டுட்டுப் போகமுடியாது. நீ குழந்தையா இருக்கறப்ப உனக்கு ஒண்ணுமே தெரியலைன்னு பாட்டி உன்னை விட்டுட்டுப் போயிருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சுப் பார்த்தியா? பாட்டியை உன் அம்மாவா இனிமே பாக்காதே. உன்னோட ஒரு குழந்தையா பாரு. அது வேதனை இல்லை... நீ சொல்லுவியே, நம்பளோட டியூட்டி. எனக்குப் பாட்டி ¨கையப் பிடிச்சுண்டு தாயுமானவர் கதை சொல்லணும்மா! நான் நிறைய தடவை சொன்னா மே பீ பாட்டிக்கு மறக்காது. நீ ஹயர் பண்ற நர்ஸ் சொல்லமாட்டா. பாட்டிக்கு நான் தமிழ் புக் படிக்கறேன். எனக்கு படிக்க நியூயார்க் போக வேண்டாம். நான் மிச்சிகனிலேயே காலேஜ் போறேன். அமெரிக்காவில நீங்க எல்லாரும் நாங்க எப்படி இருக்கணும்னு கனவு காண்றீங்க. பொட்டு வச்சுக்கணும், புடவை கட்டிக்கணும், பாட்டுப் பாடணும்னு எல்லாத்துக்கும் இந்தியாவில இப்படிப் பண்ணுவோம்.. அப்படிச் செய்வோம்னு சொல்லுவியே. இந்தியாவில உன் அம்மாவை எப்படிம்மா தனியா விட முடியும்? நா பண்றது நல்லது எல்லாமே உன்னையும், பாட்டியும் பாத்துதான் கத்துண்டேன்.. For me my grandma is becoming a baby again and I need to take care of her no matter what! அபிக்கு இப்படித்தான் இந்தியாவில வயசான அம்மா, அப்பாவை பார்த்துப்போன்னு காட்டலாம் அம்மா பிளீஸ்''

காலைக் கட்டிக்கொண்டு விம்ம ஆரம்பித்தாள் சாரு. தயா விசுவை போனில் கூப்பிட எழுந்தாள்.

ஹேமா ராமநாதன்

© TamilOnline.com