"காத்து ....... இருப்பேன்!" என்று அன்று உரைத்தாயே, என் தாயே!
"காத்து, கறுப்பு ஏதும் பட்டு விடாது பாத்து, காத்து.... இருப்பேன்!" என்று அன்று உரைத்தாயே, என் தாயே!
கருவில் எனைச் சூல் கொண்டபோது கனிந்து நான் வெளி வரத் தவசி போலக் காத்திருந்தாய்..... பாட்டி சொன்னாள்
காலையில் எண்ணைப் பெட்டியைச் சுமந்து செல்லும் தந்தை, கால் கடுக்கத் தெருவெங்கும் கூவி, மாலையில் கூடு வந்து சேரும் வழிமேல் விழி பதித்துக் கதவோரம் காத்திருந்தாய்.... அப்பா சொன்னார்
கல்லூரிக்கு மகனை அனுப்ப பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தாய்; அவன் கடிதம் வராத போது அஞ்சலகத்தில் காத்திருந்தாய்; நாளை மறுநாள் விடுமுறையில் வீடு வரும் மகனுக்காய் இன்றே வீதியில் காத்திருந்தாய்.... அண்ணன் சொன்னான்
மணமகளாய் உன் மடியில் புதைந்தபோது பூரித்தாய், புளகித்தாய்; மறு நாளே வரும் பிரிவினுக்காய்ப் புத்தி பேதலித்தாய் அமெரிக்க மண்ணுக்கெனை அனுப்புகையில்.... என்னென்ன செய்தாய்! நெற்றிக் குக்கிராமம் தொடங்கி நேர் வகிட்டுச் சாலையெங்கும் உன் கண் பன்னீர் தெளித்தாய் நீ மெல்லியதாய் நிமிண்டிப் பார்க்கும் என் மெக்கு நாடியை ஏனோ அன்று நிமிர்த்திப் பார்த்தாய், நீண்ட நேரம் பா¡த்தாய்; விழி அணையைக் கண்ணீர் வெள்ளமிட்டு உடைத்தாய்
என்னிரு கை பிடித்தாய், நெஞ்சோடு என்னை அணைத்தாய், வீம்புக்காய் விலகிப் பா¡த்தாய். வீராப்பாய் நின்று பார்த்தாய்!
நோக்கக் குழையும் அனிச்சம்பூவே! உன்னை நோக்கும் திராணியின்றி நான் நின்றிட்ட வேளையிலே, நிலாவொளி முற்றத்தில் நின்று கொண்டு, சத்தமாய்ச் சொல்லுவாய்.... ஆனால் சுத்தமாய்ச் சொல்லுவாய்.....
"பேத்தி ஒருத்தியைப் பெத்துப் போடு, பேர் வெளங்கப் பேச்சியம்மன் பேரை இட்டுப் போடு, வெள்ளி செவ்வா முளகா சுத்திப் போடு, பேத்தியப் பாக்க ஆச்சிய அனுப்புண்ணு ஒங்க அய்யனுக்கு ஒரு போனப் போடு! ..... அது வரைக்கும் காத்திருப்பேனடி, ஆத்தா" என்று அன்று உரைத்தாயே, என் தாயே! ஈரைந்து ஆண்டுகளுக்குப் பின்னே இன்று, என்னுள் உருக் கொண்ட உன்னைக் 'காத்து இருப்பாய்' என்றதோர் கனவிலல்லோ இறுமாந்து போயிருந்தேன்! பாதவத்தீ!
சிவலோக பதவியைப் பெற்றுவிட இத்தனை அவசரமா?
உன் பூவும் பொட்டும், என் வயிற்றுப் பெட்டகத்திலும் பெரிதெனப் போயிற்றோ?
எந்தாய்! எந்தையை ஏன் பிரிந்தாய்? அறுபதில் தேம்பி அழும் குழந்தைக்கு எந்தக் கடையில் கிலுகிலுப்பை நான் வாங்கி வர?
'காத்திருப்பேன்' என்றதோர் வார்த்தைக்கு, 'காத்து..... இருப்பேன். பாதுகாத்து..... இருப்பேன்' என்னுமொரு புதுப் பொருள் புனைந்தவளே!
'அவை இரண்டும் ஒன்றல்ல' இது எனக்குத் தெரிந்த அரிச்சுவடி; 'இல்லடியம்மா, அவை இரண்டும் வேறல்ல' இது நீ அருளிய ஆத்திச்சூடி!
இன்று இரண்டுக்கும் பொருளற்றுப் போகக் காத்தோடு கலந்தாயே! அடிப் போ, தாயே!
கோம்ஸ் கணபதி |