2004 டிசம்பர் 11, 12 தேதிகளில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள தமிழ் இணையம் மாநாட்டிற்கான கட்டுரைகளை வரவேற்று உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாநாட்டை உத்தமம், சிங்கப்பூர்த் தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழுவோடும் வேறு சில அமைப்புகளோடும் சேர்ந்து நடத்துகிறது. இந்த மாநாட்டில் அளிக்கப்படும் கட்டுரைகளை வரவேற்கவும், பரிசீலிக்கவும், மாநாட்டு நிகழ்ச்சி அமைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முனைவர் கு.கல்யாணசுந்தரம் (சுவிட்சர்லாந்து) இந்தக் குழுவின் தலைவராகவும், அருண் மகிழ்நன் (சிங்கப்பூர்) துணைத்தலைவராகவும், மாலன் (இந்தியா), அ. இளங்கோவன் (இந்தியா), தொ. சிவராஜ் (இந்தியா), முனைவர். வாசு ரங்கநாதன் (அமெரிக்கா) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் இணையப் பல்கலைக்கழத்தின் இயக்குநர் முனைவர். பேரா. வி.சங்கரநாராயணன் குழுவின் ஆலோசகராக இருப்பார்.
இதுவரை நடந்துள்ள மற்ற மாநாடுகளிலிருந்து இந்த இணைய மாநாடு சற்றே வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரிவான, ஆழமான விவாதங்களுக்கு இடமளிக்கும் வகையில், அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மாநாட்டுப் பேராளார்கள் அனைவரும் எல்லா அமர்வுகளிலும் பங்கேற்க ஏதுவாக ஒரு நேரத்தில் ஒரு அமர்வு மட்டுமே நடைபெறும்.
"நாளைய உலகில் தமிழ்த்தகவல் தொழில்நுட்பம்" என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு அது தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைச் சுருக்கம் மற்றும் முழுக்கட்டுரை அனுப்புவதற்கான காலவரையறை கீழே தரப்பட்டுள்ளது. கட்டுரைச் சுருக்கங்கள் பரிசீலிக்க உதவும் வகையில் தெளிவாகவும், கட்டுரையின் பொருள் குறித்த அனைத்துத் தகவல்களும் கொண்டிருப்பதாகவும் இருத்தல் வேண்டும். கட்டுரைச் சுருக்கங்கள் துறைசார்ந்த வல்லுநர்களால் பரீசிலிக்கப்பட்டு தகுதியுள்ளவை ஏற்கப்படும். தேர்வு முடிந்தவுடனேயே, ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டுரையாளர்களுக்கு முடிவு தெரிவிக்கப்பட்டுவிடும். கட்டுரைகள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ, அல்லது இரு மொழிகளிலுமோ அமைந்திருக்கலாம்.
கட்டுரைகள் மின் வடிவில் டாப் (TAB) அல்லது தகுதரம் 1.7 (TSCII 1.7) குறிமுறைகளில் அமைந்த எழுத்துருக்களில் அனுப்பவேண்டும். இந்த குறி முறைகளைப் பயன்படுத்த இயலாதவர்கள், jpeg/gif போன்ற காட்சிப் படிமங்களாகக் கட்டுரைகளை அனுப்பலாம். கட்டுரைச் சுருக்கங்களில் அதனை எழுதியவர் பெயர், பணி விவரங்கள், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டுரைகளை அனுப்புபவர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என மாநாட்டின் அமைப்பாளர்கள் விரும்புகிறார்கள். மாநாட்டில் அளிக்க ஏற்றுக் கொள்ளப்படும் கட்டுரைகளின் ஆசிரியர்களுக்கு, இலவசமாக இரு நாட்களுக்குத் தங்குமிடம், உணவு, மாநாட்டின் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு இவற்றை அளிக்க சிங்கப்பூர் மாநாட்டு அமைப்புக் குழு முன் வந்துள்ளது.
கடந்த ஆண்டுகளைப் போலவே மாநாட்டில் வாசிக்கப்படும் கட்டுரைகளின் அச்சிட்ட தொகுப்பு வழங்கப்படும். உத்தமம் இணையதளத்தில் மின் வடிவில் பதிப்பிக்கப்படும். அதன் களஞ்சியத்தில் சேமிக்கப்படும். இவற்றிற்கான உரிமைகள் உத்தமம் அமைப்பிற்குரியன.
உங்கள் வசதிக்காக முக்கியத்துவம் வாய்ந்த நாள்களை மீண்டும் குறிப்பிடுகிறோம். அவற்றை நினைவில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்:
கட்டுரைச் சுருக்கங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: செப்டம்பர் 16, 2004 தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் முழுமையான இறுதி வடிவம் வந்து சேர வேண்டிய தேதி: நவம்பர் 16, 2004
மாநாட்டு நாள்கள்: டிசம்பர் 11, 12, 2004
உங்கள் கட்டுரைச் சுருக்கங்களை ti2004-cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரைவில் அனுப்பி வையுங்கள்.
கு.கல்யாணசுந்தரம் தலைவர் - மாநாட்டு நிகழ்ச்சி அமைப்புக் குழ bு
தமிழ் இணையம் 2004 http:/www.infitt.org/ti2004
தமிழ் இணைய மாநாட்டில் விவாதிக்க ஏற்ற பொருள்களில் சில (பட்டியல் முழுமையானதல்ல)
1.தமிழ் எழுத்துக் குறிமுறைகளின் தரங்கள்: * 16 பிட் அமைப்புக்கள், யூனிகோடின் இன்றைய நிலை, பயன்நிரல்களிலும், பணித் தளங்களிலும் அதன் இயைபுநிலை * அடுக்கு வரிசை, வரிசை ஒழுங்கு இவை தொடர்பான பிரசினைகள் * 8 பிட்டிலிருந்து 16 பிட்டிற்கு மாறுவது தொடர்பான பிரசினைகள் * யூனிகோடில் உள்ளிடுவதற்கேற்ற தமிழ் 99 விசைப்பலகை
2. பன்மொழிக் களப்பெயர்கள் * தமிழை முன்னிலைப்படுத்தி, பன்மொழிக் களப்பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் குறித்த விவாதம் * பன்மொழிக் களப்பெயர்களுக்கான கட்டுமானங்கள், உகந்த சூழல்கள், குறிமுறைகள், செயல்படுத்துதல் இவை தொடர்பான தொழில் நுட்ப விவாதங்கள் * பயன்பாடு, பயனாளர் எண்ணிக்கை மற்றும் வீதம், இதில் உத்தமத்தின் பங்கு இவை குறித்த பொது விவாதம்
3. பன்மொழிச்சூழலில் தமிழ் * மொழி வகைகள் (அகரவரிசையிலமைந்த மொழிகள், வரைமொழிகள், ஒலிசார்ந்த மொழிகள்) மற்றும் பன்மொழிச்சூழல் * இந்திய மொழிச் சூழலில் இயைந்து வாழும் தமிழ்- இயங்கு தளங்கள், செயலிகள் குறித்த பிரசினைகள் * மற்ற வரை மொழிகள், ஒலிசார்ந்த மொழிகள் இவற்றுடன் இயைந்து வாழ் நிலை. குறிப்பாகச் சீனம், சிங்களம், அரபி மொழிகள்
4. ஒளிவக் குறி உணர்தல், பொறிவழி மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்து சரிபார்த்தல், பேச்சு ஒலி உணர்தல் * கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் * நெருடலான மற்றும் சிக்கலான பகுதிகள் ("செங்கொடி") * தொழில்நுட்பம் மற்றும் மொழிசார்ந்த நிலைப்பாடுகள் * இணையான முயற்சிகள்- ஆங்கிலம் தவிர்த்த மொழிகளோடு ஓர் ஒப்பாய்வு * முன் வைக்கப்படும் தீர்வுகள்
5. கைத் தொலைபேசி, மற்றும் கைக் கணினிகளுக்கான தொழில்நுட்பங்கள் * கைத் தொலைபேசி, கம்பியில்லா சாதனங்களுக்கான தொழில்நுட்பக் கருவிகள், களஞ்சியங்கள் * பணித்தளம் மற்றும் பயன்பாட்டு நிலைகளில் தமிழைப் பயன்படுத்துவதில் உள்ள பிரசினைகள் * கைத் தொலைபேசி விசைப்பட்டைகளில் தமிழை உள்ளிடுவதற்கான தரப்படுத்தல் * கையெழுத்தை உணர்தல், தமிழ் வரிவடிவங்களுக்கான பரிசீலனைகள் * தரவுப் பரிமாற்றங்கள், அகநிலை உருவகிப்பு இவற்றிற்கான எழுத்துக் குறிமுறைகள்
6. திறவூற்று மென்பொருட்கள், தமிழாக்கங்கள் * தமிழ் திறவூற்று முயற்சிகள், தமிழ்-லினக்ஸ், தமிழ்-00.0, தமிழ்- மோசில்லா, இன்ன பிற * மொழிபெயர்ப்பு மற்றும் தமிழாக்க முயற்சிகள்- சொற்தொகுப்புகள் வட்டார அமைப்புக்கள் - இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், மலேசிய தமிழ், சிங்கைத் தமிழ் இன்ன பிற * தமிழாக்கத்திற்குத் தேவையான கருவிகள், தொழில்நுட்பங்கள் * எதிர்காலத்திட்டங்கள்
7. கல்வித் தொழில்நுட்பம் * மற்ற மொழிகளில் பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்களோடு ஓர் ஒப்பாய்வு. ஆங்கிலம், இந்தி, சிங்களம், சீனம், மலாய் இன்ன பிற * தமிழுக்கே உரிய தேவைகளைக் கண்டறிதல் * தற்போது பயன்பாட்டில் உள்ளவற்றின் செயல்விளக்கம், அவற்றின் நோக்கங்கள், மேம்படுத்தலுக்கான பரிந்துரைகள்
8. தரவுதளம் சார்ந்த செயல்பாடுகள் * பொதுநோக்கு மற்றும் வணிகச் பணிகள் சார்ந்த செயலிகள் * 16பிட் குறிமுறையில் அமைந்த தரவுதளங்களில் தமிழ் பயன்படுத்தப்படும் விதம் * ஒழுங்கு வரிசையை நடைமுறைப்படுத்தல் * பயன்பாடு குறித்த பிரச்சினைகள்: இணையம் தொடர்பானவை (வலைப்பூக்கள், வலைவாயில்கள், மின்னிதழ்கள், தகவல் அனுப்புதல், மின் வணிகம்) மேசைக்கணினி தொடர்பானவை
9. மின் அரசு * மின் நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்களும் வாய்ப்புக்களும் * பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த பிரச்சினைகள் * பன்மொழிச் சிக்கல்கள் * பன்மொழி கருவூலக் கட்டமைப்புகள், பன்மொழி PDF படிவம் உருவாக்குதல்/ நிரப்புதல் |