தோழியாக மாறுங்கள்...
போன இதழ் தென்றலின் 16வயது பெண் ''போன்'' பேசும் அழகை ரசிக்கச் சொல்லி எழுதியிருந்தீர்கள். எப்படிங்க முடியும்? எனக்கு 2 பெண்கள். பெரியவள் 16 வயது. சிறியவள் 12. நல்ல வேலையில் இருந்தேன். இந்த ஊரில் குழந்தைகள் கெட்டுப் போய்விடக்கூடாதே என்று வேலையை விட்டுவிட்டு, இவர்களுக்கு சமைத்துப்போட்டு, 'சாரத்தியம்' செய்வதிலும் என் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறேன்.

நன்றாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிலும் interest ஆகத்தான் இருந்தாள் பெரியவள். இப்போது ஆறு மாதமாக எல்லாமே தலைகீழாக மாறிப் போய்விட்டது, அவளுக்கு நான் சொல்வது எதுவும் பிடிக்கவில்லை. கோயிலுக்கு வர இஷ்டப்படுவதில்லை. பாட்டு சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தோம். இப்போது அதிலும் ஆர்வம் இல்லை. இந்தியாவிற்கு விடுமுறையில் போக இருந்தோம். அவள் மறுத்துவிட்டாள்.

என் கணவரையும், சின்ன பெண்ணையும் அனுப்பிவிட்டு நான் அவளுடன் காவலுக்கு இருந்துக் கொண்டிருக்கிறேன்.

எப்போது பார்த்தாலும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறாள். இல்லையென்றால் இணையதளத்தில் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கிறாள். தவறி அவள் அறையில் நான் எட்டிப் பார்த்துவிட்டால் என்னைப் பார்த்து கத்துகிறாள். தினம் எங்களுக்குள் போராட்டம். நான் பெற்ற மகள் என்னை எதிரியாகப் பார்க்கிறாள். படிப்பில் அக்கறை குறைந்து, வழி தவறி போய்விடப்போகிறாளே என்று பயமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு 'வயிற்றில் புளியை கரைக்கிறது' என்பார்களே அதுபோல் ஒவ்வொரு நாளும் கழிகிறது.

நான் என்ன செய்ய வேண்டும்? இதற்கு என்ன வழி? தயவுசெய்து கூறுங்கள்...


அன்புள்ள சிநேகிதியே...

உங்கள் பயமும், வருத்தமும், எதிர்பார்ப்புகளும் எனக்கு மட்டும் இல்லை.. வயது வந்த குழந்தைகளின் பெற்றோர்களாக இந்த நாட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் தெளிவாகப்புரியும். இந்த பிரச்சினையைப் பற்றி எனக்கு ஒரு பக்கத்தில் அடக்குவது சிரமம். இரண்டாவது, ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ப்பு முறைகளும், குணாதிசயங்களும், எதிர்பார்ப்புகளும் வேறுபட்டு இருக்கும். ஆகவே, எந்த அணுகுமுறை சரியானது என்று கணிப்பதும் சிரமம்.

16-21 வயது வரை குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இது ஒரு சோதனைக்காலம். பெற்றவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இந்த சமயத்தில் தோழமை உணர்ச்சி/உறவு இருந்தால்தான், அந்த இளம் வயதினரை நம் வழிக்குக் கொண்டு வர சிறிது வாய்ப்பு உண்டு. இந்த பருவத்தில் தாய்மை வேலை செய்யாது. தோழம தான் வேலை செய்யும்.

நீங்கள் உங்கள் பெண்ணின் வயதில் இருந்த போது உங்கள் மனதில் தோன்றிய உணர்ச்சிகள், ஆசாபாசங்கள், பெரியவர்களுக்குத் தெரியாமல் செய்த சிறு,சிறு விஷயங்கள் எல்லாவற்றையும் நினைவுகூர்ந்து பாருங்கள். பிறகு மனதால், இந்த சூழ்நிலையில் உங்கள் பெண்ணின் வயதில், இப்போது உங்களையே நினைத்துப் பாருங்கள். எந்த அணுகுமுறை இருந்தால் உங்களை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்துப் பாருங்கள். அதுபோன்ற அணுகுமுறை உங்கள் பெண்ணிடம் வேலை செய்கிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.

இந்தப் பருவத்தில், அவர்களுக்கு 'சொல்வது' பிடிக்காது.. அவர்கள் 'நல்லவழிகாட்டுதலை'த்தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எந்தவிதமான ஆலோசனைகளையும் விரும்பவில்லை. அவர்களுக்கு தேவையானது எல்லாம் புரிந்துகொள்ளும்தன்மையைத்தான். அதுபோல் 'சந்தேக பார்வையை வெறுக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் ஒத்துழைப்பைதான்.

இவ்வளவு ஆராய்ந்து அவர்களை அணுகினாலும் அந்த இளவயது ஆர்வங்களையும், ஆசைகளையும் சிறிதுதான் நம்மால் தடை போட முடியும். This is a passig phase. They will bance back, if they had a strong foundation.

நீங்கள் சிறுவயதில் உங்கள் பெண்களுககு நல்ல கலாசாரத்தின் பெருமை, பக்தியின்பொருளை உண்மையின் சக்தியை, சேவையின் சந்தோஷத்தை, உறவுகளின் மேம்பாட்டை, அன்பின் மகிமையை, (படிப்பும், பாசமும் நிச்சயம் உண்டு) எடுத்து சொல்லியிருப்பீர்கள். நீங்களும் முன் உதாரணமாக கடந்துப் கொண்ருந்தீர்ப்பீர்கள். அப்படியிருத்¡ல் , கவலையே வேண்டாம். உங்கள் தியாகமும் வீண் போகாது.

ஒரு தாயாக இருந்து நீங்கள் பெற்ற அனுபவத்தையும், அறிவுரையையும், ஒரு தோழியாக நீங்கள் மாறி உங்கள் பெண்ணின் உணர்ச்சிகளை புரிந்து பகிர்ந்து கொள்ளும்போது அவள் வழிமுறைகளை மாற்றியமைக்க வாய்ப்பு இருக்கலாம்.

வாழ்த்துக்கள்.
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com