மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, முன்னேற்றம் தரும் புத்தாண்டே...!
வணக்கம்.

2006 எப்பேர்ப்பட்ட வருடம்! 2007-ன் வருகைக்கு அது நம்மைத் தயார்படுத்தி விட்டது. சென்ற ஆண்டில் பங்குச் சந்தைக் குறியீடுகள் நன்கு மேலேறின. இந்த ஆண்டிலும் பொருளாதாரம் மேம்படும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. புதிய ஜனநாயகக் காங்கிரஸ், புதிய பாதுகாப்புச் செயலர், ஐ.நா.வில் புதிய செக்ரடரி-ஜெனரல் என்ற இந்த மாற்றங்கள் நம்மிடையே புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி யுள்ளன. உலக அளவில் இராக், டார்·பர், வடகொரியா ஆகட்டும், தேசிய அளவில், வந்தேறுதல் (immigration), கல்வி, உடல்நலம் ஆகியவையாகட்டும், நாம் இந்த ஆண்டில் புதிய சிந்தனைகள் தோன்றும், விவாதிக்கப்படும், தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

டிசம்பர் 2006ல் இராக் போர் ஓர் புதிய மைல்கல்லைத் தொட்டது. மார்ச் 2003 முதல் நடந்துவரும் இந்தப் போரில் இறந்த வீரர்களின் எண்ணிக்கை, 9/11 தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இந்த நாட்டின் மக்கள் இப்போரை முடிப்பதற்கு ஒரு புதிய முன்னேற்ற வழிக்காக ஏங்குகிறார்கள். நம் தேசத்தலைவர்கள் இதை முன்னின்று நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்புடன்.

ஸ்ரீலங்காவில் வன்முறை அதிகரித்துக் கொண்டு போகிறது. இது அனைத்து தமிழர்களுக்கும் கவலையளிப்பதாக உள்ளது. பரஸ்பர உணர்வு களையும் உரிமைகளையும் மதித்து ஸ்ரீலங்கா அரசும், தமிழ் அமைப்புகளும் ஓர் அமைதிக்கான நிரந்தரத் தீர்வை இந்த ஆண்டிலாவது காணவேண்டும்.

தென்றலுக்கு 2006 ஓர் நல்ல ஆண்டு. விளையாட்டு, பொதுச்சேவை, இலக்கியம், வணிகம் என்று பல துறையிலும் உள்ள முன்னணித் தமிழர்களை நாம் தென்றலில் இடம்பெறச் செய்ததில் பெருமை கொள்கிறோம். அவர்களது சாதனைகள் நமக்கும் சாதிக்க உற்சாகமூட்டும் வகையில் அமைந்தது.

2007 அதே போல் தொடங்குகிறது. இந்த இதழில் நீங்கள் சந்திக்கப் போகும் யஹூ! ஆய்வுக்குழுவின் டாக்டர் பிரபாகர் ராகவன் வையவிரிவு வலையை (world wide web) மேம்படுத்தப் புதிய மாதிரிகளையும் தொழில்நுணுக்கங்களையும் உண்டாக்குவதில் ஈடுபட்டிருக்கிறார். அதன் ஆரம்ப அறிகுறிகளை நீங்கள் answers.yahoo.com-ல் பார்க்கலாம். நாடெங்கிலுமுள்ள தமிழ்ச் சங்கங்கள் பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாட இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், பாரதி கலை மன்றம், மிச்சிகன் தமிழ்ச் சங்கம், கிரேட்டர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம், சிகாகோ தமிழ்ச் சங்கம், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் ஆகியவை பொங்கல் விழா கொண்டாட உள்ளன. எல்லோரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாடுவோம். பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

திரு. மு. மேத்தா தமது 'ஆகாயத்தில் அடுத்த வீடு' என்ற நூலுக்காக சாஹித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளார். அவர் இப்போது இங்கு நம்மிடையே வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. சில தமிழ் மன்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்குகொள்ள இருக்கிறார். அவரை சந்தித்து அவருடைய சிந்தனைகளை அறிந்து நம் பாராட்டுகளையும் தெரிவிப்போம். விழாக்கால விடுமுறையை நன்கு அனுபவித் திருப்பீர்கள். சற்றே ஓய்வு கொண்டதோடு, உற்றாரைச் சந்தித்தும் இருப்பீர்கள். வரம்பற்ற வாய்ப்புகள் கொண்ட உலகில் நாம் வாழ்கிறோம். தொழில் நுட்பத்தின் வலிமை நமது உற்பத்தித் திறனை வெகுவாக அதிகரித்துவிட்டது. இந்த ஆண்டுக்கு எனது லட்சியம் என்னவென்றால் நம்மை அலைக்கழிக்கும் (எப்போதும் மின்னஞ்சலை எதிர் நோக்குவது, வலைதளம் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற) பிறவற்றைக் குறைத்துவிட்டு, முக்கியமான சிலவற்றில் கவனத்தைக் குவிப்பதும், அவற்றைச் செம்மையாகச் செய்வதும் ஆகும். இந்தக் கலையில் தேர்ச்சி பெறும் வழிகளை Dorothea Brande தமது 'Wake up and Live' என்ற நூலில் விவரிப்பது ஞாபகத்திற்கு வருகிறது.

மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, முன்னேற்றம் தரும் புத்தாண்டாக 2007 அமைய வாழ்த்துகள்!

சி.கே. வெங்கட்ராமன்
பதிப்பாளர் - தென்றல்.
ஜனவரி 2007

© TamilOnline.com